கே.ஏ. செங்கோட்டையன்: எடப்பாடி பலமுறை காப்பாற்றிய பாஜகவுக்கே அல்வா கொடுத்துட்டாரு!!
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்ட அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக, அதிமுகவின் தூணாகக் கருதப்பட்ட மூத்த நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், தற்போது அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அந்தியூர் அருகில் கே.ஏ. செங்கோட்டையன் பேச்சியது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
அந்தியூர் பிரச்சாரத்தில் கே. ஏ. செங்கோட்டையன் பேசுகையில், “பவானிசாகரில் 2 ஆயிரம் கோடிக்கு அட்டை பேக்டரி, அந்தியூரிலிருந்து அம்மாபேட்டை செல்லும் வழியில் 3 ஆயிரம் கோடிக்கு எத்தனால் பேக்டரி என இங்கு மட்டும் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 50 லட்சம் கோடி சம்பாதித்தும் உங்களுக்கு இன்னும் ஆசை தீரவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்தான் முதலமைச்சர் ஆகி இருக்க வேண்டும். ராத்திரி வரைக்கும் நான்தான் அந்தப் பட்டியலில் இருந்தேன். ஆனால் காலையில் எல்லாம் மாறிப்போச்சு. காரணம், எடப்பாடி கையில் பணப்பெட்டி இருந்தது, என் கையில் பெட்டி இல்லை. காலையில் சசிகலா அம்மா என்னிடம் கேட்டபோது, சரி பரவாயில்லை யாரோ ஒருத்தர் இருந்துட்டு போறாங்க, கட்சியை உடையாமல் பார்த்துக்கலாம் என்று சொன்னேன்.
சசிகலா அம்மாவுக்கு தீர்ப்பு உறுதியானதும், நீங்கதான் முதலமைச்சர் வேட்பாளர் செங்கோட்டையன் என்று அவரே கூறினார். ஆனால் திடீரென்று பார்த்தால் மலைப்பாம்பு மாதிரி வந்து ஒருத்தர் விழுந்தார். அப்படியே நீந்திட்டு வந்தார் பாருங்க, நானே பயந்து சேரிலிருந்து எழுந்துட்டேன். எங்கடா ரிசார்ட்டுக்குள்ள மலைப்பாம்பு வந்துருச்சான்னு நினைச்சேன். அப்படி காலைப் பிடிச்சு கெஞ்சிட்டு, இப்போது இவர் யார் என்னை முதலமைச்சர் ஆக்குவதற்கு, எனக்குத் தனித்தகுதி இருக்குன்னு எடப்பாடி சொல்றாரு. இப்படி எவனாவது சொல்லுவானா?” என கே. ஏ. செங்கோட்டையன் மிகக் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து கே. ஏ. செங்கோட்டையன் பேசுகையில், “18 பேர் ஓட்டு போட்ட டிடிவியை கழட்டி விட்டாரு. 11 பேர் ஓட்டு போட்ட ஓபிஎஸ்சையும் கழட்டி விட்டாரு. இவரைப் பலமுறை காப்பாற்றிய பாஜகவுக்கே திருநெல்வேலி அல்வா கொடுத்துட்டாரு. அதுக்கப்புறம் பிரேமலதா விஜயகாந்துக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கிறதா சொல்லி அவங்களையும் காலி பண்ணிட்டாரு. அண்ணாமலை என்ன பாவம் பண்ணுனாரு? அந்த அண்ணாமலையை நீக்கினால் தான் பாஜகவுடன் கூட்டணிக்கு வருவேன்னு சொல்றாரு. என்னய்யா உலகம் இது? தமிழ்நாட்டில் எவனுமே இருக்கக்கூடாது, இவர் மட்டும் 50 லட்சம் கோடி கொள்ளையடிச்சது பத்தாதுன்னு இன்னும் 50 லட்சம் கோடி வேணுங்கிறார்” என கே. ஏ. செங்கோட்டையன் அந்தியூர் பேச்சியது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்: விஜய் லாலிபாப் சாப்பிடுற பேபி!!
தம்பி நீங்கள் முதல் கால் வைக்கும் போதே எதிராளிகளை குறைத்து மதிப்பிடவே கூடாது. திமுக, 75 வருட கட்சி. நீங்கள் இப்ப தான் லாலிபாப் சாப்பிடுகிர ஃபஸ்ட் இயர் பேபி என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் ஆட்சியர் அலுவலகம் முதல் கோட்டை மைதானம் வரை பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ரோடு ஷோ முடிந்த பின்பு பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசினர்.
அப்போது, பேசிய பிரேமலதா விஜயகாந்த், “இன்றைக்கு யாரெல்லாமோ 5 முனை போட்டி என்கிறார்கள். விஜயகாந்தும் சினிமாவில் இருந்து வந்தவர் தான், நான் இல்லையென்று சொல்லவில்லை. அதுமாதிரி இன்றைக்கு ஒரு தம்பி வந்திருக்கார். அவர் முதலில் நிரூபிக்கட்டும். சினிமாவில் இருந்து வந்தவர் அண்ணன் கமல்ஹாசன் இருக்கிறார், விஜயகாந்த் இருந்தார் என எவ்வளவோ பேர் இருந்தார்கள். அது போல தான் தம்பியும் வந்திருக்கிறார்.
நீங்கள் முதல் கால் வைக்கும் போதே எதிராளிகளை குறைத்து மதிப்பிடவே கூடாது. விஜயகாந்த் எப்படி துணிந்து தனித்து களம் கண்டு 2006-இல் தேர்தல், 2009-இல் 11 இடைத்தேர்தல் ஆகிய தேர்தல்களை சந்தித்து தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்தாரோ அது போல் நீங்கள் உங்கள் வாக்கு வங்கியை நிரூபியுங்கள்.
அதற்கு பிறகு இரண்டு பேருக்கு தான் இங்கே போட்டி என்ற டயலாக்கை நீங்கள் பேசணும் தம்பி. இல்லையென்றால் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக, 75 வருட கட்சி. நீங்கள் இப்ப தான் லாலிபாப் சாப்பிடுகிர ஃபஸ்ட் இயர் பேபி. யூ ஆர் நாட் எ ஹீரோ, யூ ஆர் எ லிட்டில் பாய் இன் பாலிட்டிக்ஸ் (You are a hero, You are a little boy in politics). அதனால் அரசியல் ஒன்னும் சாதாரண விஷயம் இல்லை.
அரசியல் வேறு சினிமா வேறு. அது ஒரு தொழில், இது சேவை. இது மக்களை அன்றாடும் நாம் நேசிக்க வேண்டும். களத்தில் இறங்கி மக்களுக்காக போராட வேண்டும். எங்கேயோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு சும்மா கை காட்டுறது கிடையாது அரசியல். களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக இருந்த தலைவர்கள் தான் அரசியலில் வென்றிருக்கிறார்கள்” என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார்.
விருதுநகரில் இலையை சூரியன் சுட்டெரிக்க மீண்டும் ஒலிக்கும் முரசு!?
விருதுநகர் மாவட்டத்தின் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி, விருதுநகர் நகராட்சி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அருப்புக்கோட்டை ஒன்றியத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், அதிமுக வேட்பாளர் வி.ஜி. கணேசன், நாதக வேட்பாளர் லட்சுமணன் மற்றும் தவெக வேட்பாளர் எஸ்.பி.செல்வம் ஆகியோருடன் நான்கு முனைப் போட்டியில் வி.ஐ.பி அந்தஸ்து பெற்ற தொகுதி.
இந்த, விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் இதில் உள்ளனர். 96,436 ஆண் வாக்காளர்கள், 1,02,141 பெண் வாக்காளர்கள் மற்றும் 39 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,98,616 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ். பாண்டுரங்கன் அவர்களை 21339 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில், தேமுதிக-வின் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் போட்டியிட்டு அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான மாணிக்கம் தாகூர், 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் வேட்பாளராக களமிறக்கியுள்ளார்.
விஜய பிரபாகரன் அதிமுக, பாஜக-வை விமர்சிப்பதைக் குறைத்துக் கொண்டு, திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை முன்வைத்து வாக்கு கேட்டு வருகிறார். மேலும் இத்தொகுதியில் இளைஞர்களின் வாக்குகளும் கணிசமாக இருப்பதால், நாதக வேட்பாளர் லட்சுமணன், தவெக வேட்பாளர் செல்வம் ஆகியோர் இளைஞர்களின் வாக்குகளையும், குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்களை குறி வைத்து தேர்தல் பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொகுதிக்கு புதுமுகமான அதிமுக வேட்பாளராக தொழிலதிபர் கணேசன் போட்டியிடுகிறார். இந்த முறையும் தொகுதி பாஜக-விற்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், கடந்த ஆறு மாதங்களாகவே களப்பணி ஆற்றி வந்த விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பாண்டுரங்கன் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளார். எனவே, கணேசனின் வெற்றிக்காக பாஜக-வினர் உழைப்பது சந்தேகமே. ஆகையால், விருதுநகரில் இலையை சூரியன் சுட்டெரிக்க முரசு மீண்டும் ஒலிக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.
தருமபுரியில் சுட்டெரிக்கும் வெயிலில் இலையின் உதவியால் கனியும் மாங்காய்!!
234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற முழக்கத்துடன் 100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மெரினாவில் கலைவிழாக்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் நேரடி விவாதங்கள் மூலம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ‘வீட்டுக்கு வீடு’ என்ற பிரச்சார வியூகத்துடன் மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் திமுக கூட்டணி களமிறங்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜக, பாமக மற்றும் அமமுக போன்ற கட்சிகளுடன் வலுவான கூட்டணியை உருவாக்கி, திமுக ஆட்சியின் குறைகளை முன்வைத்து, திமுக ஆட்சியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவர்களுக்கு இடையில், படித்தவன், படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை’, இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவம் போன்ற வாக்குறுதிகளுடன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இளம் வாக்காளர்களை குறிவைத்து புதிதாக கட்சி தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய் களமிறங்கியுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோயில், அதியமான்கோட்டை என 2 முக்கிய இடங்களும் தருமபுரி, நல்லம்பள்ளி ஆகிய 2 ஒன்றியங்கள், தருமபுரி நகராட்சி மற்றும் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் இளங்கோவன், அதிமுக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, நாதக வேட்பாளர் சாந்தலட்சுமி மற்றும் தவெக வேட்பாளர் எம்.சிவன் ஆகியோருடன் நான்கு முனைப் போட்டியில் வி.ஐ.பி அந்தஸ்து பெற்ற தொகுதி.
இந்த, தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் 129393 ஆண் வாக்காளர்கள், 128464 பெண் வாக்காளர்கள் மற்றும் 82 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 257939 வாக்காளர்கள் உள்ளனர். தருமபுரி சட்டப் பேரவை தொகுதி 18 முறை பொதுத் தேர்தலையும், 1965-ல் இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் காங்கிரஸ், ஜனதா கட்சி, திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் பாமக வேட்பாளர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி அவர்களை 26860 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

இந்தச் சட்டமன்றத் தொகுதி தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் சேராமல் போட்டியிட்ட சௌமியா அன்புமணி 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளதால், இந்த தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருப்பதால் வெற்றி சுலபம் என்று கணக்கிட்டு தருமபுரியைக் குறிவைத்து கிருஷ்ணசாமியின் மகள், முன்னாள் எம்.பி விஷ்ணு பிரசாத்தின் சகோதரி, பாமக தலைவர் அன்புமணியின் மனைவி எனப் பல அடையாளங்கள்கொண்ட சௌமியா அன்புமணி களமிறங்கி யிருக்கிறார்.
தற்போது இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக-வின் மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர், ஏற்கெனவே தருமபுரி நகராட்சி தலைவர், தருமபுரி எம்.எல்.ஏ, தருமபுரி எம்.பி ஆகிய பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை நழுவ விட்டவர். மருத்துவர் என்ற முறையில் மக்களிடம் பரிச்சயம், கூட்டணி கட்சிகளின் பலம் ஆகியவற்றுடன் அதிகாலையிலேயே உற்சாகத்துடன் பிரச்சாரத்தை தொடங்கி விடுகிறார்.

இவர்கள் தவிர, நாதக வேட்பாளர் சாந்தலட்சுமி, தவெக வேட்பாளர் சிவன், பாமக (ராமதாஸ் அணி) வேட்பாளர் சரவணன் ஆகியோரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான இளங்கோவன், சௌமியா அன்புமணி ஆகியோருக்கு இடையில் தான் வலுவான போட்டி நிலவுகிறது. ஆகையால், தருமபுரி தொகுதியில் சூரியன் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்த இலையின் உதவியால் மாம்பழம் கனிய அதிகம் வாய்ப்பு உள்ளது.
சென்னை பெருநகரக் காவல் ஆணையர்: அபின் தினேஷ் மோதக் உள்ளே!! அருண் வெளியே!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சென்னையின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைத் தீர்மானிக்கும் மிக முக்கியப் பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் டாப் அதிகாரிகளை டெல்லி மாற்றி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக மூத்த IPS அதிகாரி சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த வெங்கடராமனுக்கு பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 27 ஆண்டுகாலப் பணி அனுபவம் கொண்ட அபின் தினேஷ் மோதக் அவர்கள் தமிழகத்தின் நாடித் துடிப்பு அத்தனையுமே அப்பட்டமாகத் தெரிந்த இவர் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட , 1997-ஆம் ஆண்டு IPS அதிகாரியாகத் தனது பயணத்தைத் தொடங்கியவர். இந்த நியமனத்திற்கு முன்பாக, சென்னை அமலாக்கப் பிரிவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக (ADGP, Enforcement) பணியாற்றி வந்தார்.
கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் எனச் சமூக விரோதச் செயல்களைத் தடுப்பதில் கறார் காட்டியவர். அதற்கு முன்னதாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) தலைவராக இருந்தபோது, அப்பாவி மக்களை ஏமாற்றிய முக்கிய நிதி நிறுவன மோசடி வழக்குகளைக் கையாண்டு, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்.

சென்னை மக்களுக்கு இவர் புதியவர் அல்ல. தாம்பரம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றியபோது, மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டியவர். தேர்தல் நேரங்களில் பொதுவாகவே ஆணையம் மிகக் கடுமையான ஆய்வுகளுக்குப் பிறகே உயர் அதிகாரிகளை நியமிக்கும். எந்தவித அரசியல் சார்பும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கூடியவர் என்ற அடிப்படையிலேயே அபின் தினேஷ் மோதக் இந்த பதவியில் அமரவைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்த பெண்!! கழுத்தை அறுத்து கொன்ற பெண்ணின் கொடூர தாய் மாமன்!!
அரியலூர் மாவட்டம், புது வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண். இவருக்கு பெரியசாமி என்பவருடன் திருமணம் நடந்து அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில், நந்தினியின் கணவர் பெரியசாமி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். நந்தினி சமீபத்தில் பெரம்பலூரில் பிரபல தனியார் ஸ்வீட் கடையில் வேலைக்கு சேந்ததால் பெரம்பலூர், பாரதிதாசன் 4-வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த புவனேந்திரனுக்கு சொந்தமான மாடியில் உள்ள ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து கடந்த 40 நாட்களுக்கு முன்பு தங்கியுள்ளார்.
இந்நிலையில், பெரம்பலூரில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நந்தினியின் தாய் மாமன் பச்சமுத்து அடிக்கடி வந்து (நந்தினியின் தனிமையை தனது சாதகமாக பயன்படுத்து கொண்ட தாய் மாமன் பச்சமுத்து) உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், மது போதையில் இருந்த தாய் மாமன் பச்சமுத்துடன் நந்தினிக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பச்சமுத்து நந்தினியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து பச்சமுத்து பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற சரணடைந்து உள்ளார்.
தகவல் அறிந்த பெரம்பலூர் நகர காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு நந்தினி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து இறந்த நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்த பெண்ணை, பெண்ணின் தாய் மாமனே கள்ளக் காதலில் விழ வைத்து கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி (தனி) தொகுதியில் சூரிய ஒளியில் தாமரை மலரும்!!
திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி(தனி) தொகுதியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் என 2 முக்கியத் திருத்தலங்களும் திருமுருகன்பூண்டி நகராட்சி, அவிநாசி, அன்னூர் பேரூராட்சிகள், 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை உள்ளடக்கியது.
அவிநாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி, பாஜக வேட்பாளர் Dr. எல்.முருகன், நாதக வேட்பாளர் வி.மேனகா மற்றும் தவெக வேட்பாளர் எஸ்.கமலி ஆகியோருடன் நான்கு முனைப் போட்டியில் ஈடுபட்டு, வி.ஐ.பி அந்தஸ்து பெற்ற தொகுதி. இந்த, அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் 119,841 ஆண் வாக்காளர்கள், 130,496 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 250,346 வாக்காளர்கள் உள்ளனர்.
1980-ம் ஆண்டு தொடங்கி, 2021 வரை, இடையில் 1996 தேர்தலை தவிர்த்து, மற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக இந்த தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டி அவிநாசி தொகுதியை அதிமுகவின் கோட்டையாக இருந்துள்ளது. இங்கு கடந்த 2 தேர்தல்களிலும், முன்னாள் சபாநாயகர் தனபால் வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எல். முருகன் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி போட்டியிட்ட போது அவிநாசி சட்டமன்றப் பகுதியில் பாஜகவிற்கு ஒரு கணிசமான வாக்குகள் கிடைத்தது.
எனவே, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த எல். முருகன் சட்டமன்றத்திற்குச் செல்ல இது ஒரு ஈஸியான வழி என்று பாஜக மேலிடம் கருதி எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து கடந்த தேர்தலில் சுமார் 50,000 வாக்குகளுக்கும் மேல் பெற்று வெற்றி லட்டு தொகுதியை தற்போது பாஜகவுக்கு சென்றுள்ளது.
2018-ஆம் ஆண்டு மலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சமையலர் பாப்பாள் சமைத்த மதிய உணவை பிற சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என பெற்றோர், ஊர் பொதுமக்கள் தீண்டாமையில் ஈடுபட்ட சம்பவம் நடைபெற்ற அதே பகுதியில் இருந்து, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 26 வயதான கோகிலாமணி திமுக-வின் இளம் வேட்பாளரை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவிநாசி (தனி) தொகுதியைப் பொறுத்தவரையில் பாஜக, திமுக, நாதக, தவெக என 4 முக்கிய வேட்பாளர்களிடையே போட்டி நிலவுகிறது. எனினும், பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவாக பாஜக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
அதேபோல, திமுக வேட்பாளரான மருத்துவர் வி.கோகிலாமணிக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என கூட்டணிக் கட்சி தலைவர்களும் மாநில அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, இந்தத் தொகுதியில் பாஜக-திமுக இடையே நேரடிப்போட்டியாக மாறியுள்ள நிலையில் அவிநாசி (தனி) தொகுதியில் சூரிய ஒளியில் தாமரை மலரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
கருக்கலைப்பு புகாரின் எதிரொலி!! நர்சிங் படித்த பெண் உட்பட இருவர் கைது!!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் நீண்ட நாட்களாகச் சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்த நர்சிங் படித்த பெண் உட்பட இருவர் கைதான பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து அல்ட்ராசவுண்ட் (Ultrasound) ஸ்கேன் மூலம் பாலினம் தெரியவரும். ஆனால், இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது (PCPNDT) சட்டப்படி குற்றமாகும். ஆனாலும் நாட்டில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவது சட்டப்படி குற்றம் என்பதை அறிந்தும் அடிக்கடி கைதாகி வருவது தொடர் கதையாகி வருவது வேதனையை அளிக்கிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் நீண்ட நாட்களாகச் சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெற்று வருவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், பென்னாகரம் அடுத்த ரங்காபுரம் பகுதியில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சட்டவிரோத கருக்கலைப்பு நடப்பதாக மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரனுக்குத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், மருத்துவ அலுவலர் ராமதாஸ் தலைமையிலான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் குழுவினர், ரங்காபுரத்தில் உள்ள செந்தில் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்தச் சோதனையில், பாலினத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத கருக்கலைப்பிற்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் அதிக அளவில் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், செந்திலின் மகள் பரிமளா என்பவர் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு, இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவருக்கு உதவியாக ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.
மாவட்ட சுகாதார அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், பென்னாகரம் காவல்துறையினர் பரிமளா மற்றும் சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் மருத்துவ அலுவலர்கள் அளித்த தகவலின்படி, இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பாலக்கோடு பகுதியில் இதேபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டபோது அதிகாரிகளிடம் சிக்காமல் தலைமறைவாகி, பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்று தற்போது மீண்டும் அதே குற்றத்தைச் செய்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதையில் 4-ஆம் வகுப்பு மாணவன்!! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!
பீகாரில் 2016 முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் சட்டவிரோதமாக நடந்து வருகின்றன. கடந்த வாரம் பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழநதன. 6 பேர் கண்பார்வை இழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள ஷிஷ்வாவிலுள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் நிகழ்ந்தது. அங்கு, நான்காம் வகுப்பு மாணவனான அந்தச் சிறுவன், பள்ளி நேரத்தில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் வீட்டிற்குத் திரும்பியபோது, நடக்கச் சிரமப்பட்டு, தள்ளாடி வருவதை கண்டு அவனின் தாய் ரிஸ்வானா காதுன் அதிர்ச்சியடைந்தார். அவனது நிலையைக் கண்டு கவலையடைந்த குடும்ப உறுப்பினர்கள், உடனடியாக அவனது நண்பர்களிடம் என்ன நடந்தது என்று கேட்கத் தொடங்கினர்.
அப்போது, அன்று அந்த சிறுவன் மற்றும் அவனது நண்பர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் அனைவரும் சேர்ந்து பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் உள்ள ஒரு பயன்படுத்தப்படாத கழிப்பறைக்குச் சென்றுள்ளான். அந்தப் பகுதி ஆள் நடமாட்டம் இல்லாததாக இருப்பதால், அதைச் சுற்றி அடர்ந்த புதர்கள் வளர்ந்துள்ளன. அங்கு பாட்டில்கள் அடைக்கப்பட்ட பல அட்டைப் பெட்டிகள் கொட்டப்பட்டிருந்ததை அந்த சிறுவன் கண்டான். அவன் அந்தப் பாட்டில்களில் ஒன்றை வெளியே எடுத்து, அது குளிர்பானம் என்று நினைத்து அதை குடித்துள்ளான்.
பின்னர், வீட்டிற்குத் திரும்பும் வழியில் அவனது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது,” என நண்பர்கள் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, அந்தச் சிறுவன் உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மருத்துவர்கள் அவனைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தனர். பின்னர், பெற்றோர் அளித்த தகவலின் பேரில் தலைமை ஆசிரியர் நடத்திய சோதனையில், 23 அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 204 லிட்டர் மது கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய உதவி ஆய்வாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட். இவரது மகன் பனையேறும் தொழில் மற்றும் விவசாயம் செய்து வரும் மணிகண்டன். இந்நிலையில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா காவல்துறையினருடன் மணிகண்டனின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, சட்டவிரோதமாக கள் விற்பனை நடைபெறுவதாக தனக்கு புகார் வந்திருப்பதாகக் கூறி, மணிகண்டன் மற்றும் அவரது தந்தை பெருமாள் சேட் ஆகியோரை அழைத்துக்கொண்டு பனை மரம் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் மரத்தில் இருக்கும் பனையில் என்ன இருக்கிறது என்று கூறி, மேலே ஏறி அதனை எடுக்கச் சொல்லியுள்ளார். அதனால் மணிகண்டன் மரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த மணிகண்டனின் அண்ணன் மகள் 17 வயதான சிறுமியிடம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் உடனடியாக கீழே இறங்கி இசக்கி ராஜாவிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது அங்கிருந்த சிறுமியையும் இசக்கி ராஜா கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக மணிகண்டன் இசக்கி ராஜாவைத் தாக்க முயன்றதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இசக்கி ராஜா காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தனது துப்பாக்கியால் மணிகண்டனை 4 முறை சுட்டுள்ளார். அதில், இரண்டு குண்டுகள் மணிகண்டனின் காலில் பாய்ந்து அங்கேயே சரிந்துள்ளார். அதன்பிறகு காயமடைந்த மணிகண்டன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் இருவரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அத்துமீறி நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆலங்குளத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், “யார் இவருக்கு சுடுவதற்கு உத்தரவு கொடுத்தது? ஒரு சிறுமியிடம் தரைகுறைவாக எப்படி பேசலாம்?” என்று பல்வேறு கேள்விகளையும் இசக்கி ராஜாவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். போராட்டம் தீவிரமானதால், ஆலங்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுத்தால் தான் போராட்டம் கைவிடப்படும் என்று அப்பகுதி மக்கள் திட்டவட்டமாகக் கூறினர். அதன்பிறகு மணிகண்டன் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.