பழங்குடிகளின் தொட்டில் என அழைக்கப்படும் நீலகிரியில் 6 வகையான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களுக்கே உரித்தான உணவு, உடை, மொழி, இசைக்கருவிகள் , நடனம், வழிபாடு, தொழில் போன்றவற்றை பின்பற்றி வருகின்றனர் நீலகிரியில் வாழ்ந்து வரும் பழங்குடி இனங்களில் ஒன்று தான் பெட்ட குறும்பர் இனம். பெட்டா என்கிற மலையை குறிக்கும் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மக்கள் குறும்பர் பழங்குடி இனத்தின் ஒரு பிரிவாக அறியப்படுகின்றனர். திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தேனெடுத்தல் , மீன் பிடித்தல் மற்றும் வன மூலிகைகளை சேகரிக்கும் திறன் கொண்டவர்கள்.
பூர்வகுடி மக்களுக்கு அரசின் அடிப்படை வசதிகள் என்பது இன்றளவும் எட்டாக்கனியாகவே இருப்பதால், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு போன்றவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே தவித்து வருகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசிலர் மட்டுமே போராடி உயர் கல்வியைப் பெற்று முன்னேறி வருகின்றனர். அந்த வரிசையில், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய பெட்ட குறும்பர் மாணவி கின்மாரி, சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ, எல்.எல்.பி ஹனஸ் பட்டத்தை நிறைவு செய்து தங்கள் இனத்தின் முதல் வழக்கறிஞர் என்கிற வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள பொக்காபுரத்தில் வாழும் கூலித்தொழிலாளி மாறன், மஞ்சுளா தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. அந்த குழந்தைகளில் மூன்றாவது குழந்தை கின்மாரி பொக்காபுரம் அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் 8 – ஆம் வகுப்பு வரை படித்து, கார்குடி அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் 9, 10 – ம் வகுப்புகளை படித்துள்ளார்.
பின்னர் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11,12 -ம் வகுப்புகளை முடிந்தவுடன் கார்குடி ஆசிரியர் வழிகாட்டுதலில் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். குறும்பர் இனத்தின் முதல் நபராக சட்டப்படிக்க சென்ற கின்மாரி நிறைய சவால்களுக்கு மத்தியில் இன்று சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ, எல்.எல்.பி ஹனஸ் பட்டத்தை நிறைவு செய்து குறும்பர் இனத்தின் முதல் வழக்கறிஞர் என்கிற வரலாற்றை உருவாக்கியுள்ளார் என்பது பாராட்டத்தக்க விஷயமாகும்