பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பெற்ற கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை பெருவிழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொள்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 9-ம் தேதி அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 10-ம் தேதி முதல் மகா பாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. ஏப்ரல் 12-ம் தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும், 14-ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், ஏப்ரல் 17-ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு மற்றும் சுவாமி வீதியுலாவும், 21 -ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாயம் நடைபெற்றது. நேற்று 22-ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று மாலை சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்றது.

இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொண்டு கோயில் அருகில் கற்பூரம் ஏற்றி கும்மி அடித்து விடிய விடிய ஆடிப்பாடி மகிழ்வார்கள்.

பலாப்பழ சின்னத்திற்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு..!

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுயேச்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்தது. இந்நிலையில், சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரத்தில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர்.

நேற்று மாலை ஒரு தரப்பினர், ‘‘தேர்தலில் ஓபிஎஸ்சின் பலாப்பழம் சின்னத்திற்கு ஏன் ஓட்டு போடவில்லை’’ எனக்கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து அவர்கள், தெருவிற்குள் புகுந்து பெண்கள் உள்ளிட்ட சிலரை ஓட, ஓட விரட்டி வெட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வெள்ளத்தாய், செல்வி, சிவமுருகன், மணிகண்டன், இருளையா, முகேஷ் கண்ணன் மற்றும் அரவிந்த் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, காயமடைந்தவர்களின் உறவினர்கள் கடுகுசந்தைசத்திரம் வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காலி குடத்துடன் கிராம மக்கள் போராட்டம்..!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் ‘கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்’ என காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை…! திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா..!

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற வரும் நிலையில்மக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150-வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக மற்றும் அதிமுகவின் பூத் முகவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய துர்கா ஸ்டாலினுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற வரும் நிலையில்மக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவி துர்கா ஸ்டாலினுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் இந்தியாவுக்கு வெற்றிதான். வாக்குரிமை பெற்றிருக்கும் அனைவரும் மறந்திடாமல், புறக்கணிக்காமல் வாக்கு செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நெய்வேலி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன்

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற வரும் நிலையில்மக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தனது சொந்த கிராமமான நெய்வேலி அடுத்த சொரத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி மையத்தில் குறிஞ்சிப்பாடி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் வாக்கு செலுத்தி உனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

குடும்பத்துடன் சென்று வாக்களித்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன்

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 7.00 மணி முதல் மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில்
நெய்வேலி அடுத்த சொரத்தூர் ஊராட்சியில் ஒன்றிய துவக்க பள்ளியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

மு.க.ஸ்டாலின்: ஊழலை சட்டபூர்வமாக்கியவர் மோடிதான்..!

சென்னை, பெசன்ட் நகரில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, “தமிழகத்தில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கான அலை வீசிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திர ஊழல், மோடியின் கிளீன்மோடி என்கிற முகமூடியை கிழித்தெறிந்து மோடியின் ஊழல் முகத்தை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே மோடி என்ன செய்கிறார்? தன்னுடைய இமேஜே காப்பாற்றிக் கொள்ள, தேர்தல் பத்திரம் வந்த பிறகுதான், யார் யாருக்கு நிதி கொடுக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது என்று வடை சுட ஆரம்பித்துவிட்டார்”.

“நாளை மறுநாள் ஏப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், நம் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போர். நாடு காக்கும் இந்த ஜனநாயகப் போரில், இண்டியா கூட்டணிக்கு வெற்றி தேடித் தர தமிழகத்தின் தலைமகனான அண்ணாவை, முதன்முதலாக தேர்ந்தெடுத்து அனுப்பிய தென் சென்னை தொகுதிக்கு வந்திருக்கிறேன். தலைநகரில், தமிழக மக்களுக்கு இறுதி அறைகூவல் விடுக்கிறேன்.

கடந்த 22 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து இருக்கிறேன். மக்களின் முகத்தில் தெரியும் எழுச்சியும், மகிழ்ச்சியையும் வைத்து கூறுகிறேன், நாற்பதுக்கு நாற்பதும் நாம் தாம் வெல்லப் போகிறோம். நாட்டையும் நம்முடைய கூட்டணிதான் ஆளப்போகிறது. காரணம், தமிழகத்தில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கான அலை வீசிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் சர்வாதிகார மனப்பான்மை. மாநிலங்களை நசுக்கும் எதேச்சதிகாரம். ஒற்றுமையாக வாழும் மக்களிடையே, பிளவை உருவாக்கும் மதவாதப் பேச்சு. எதிர்க்கட்சிகளை ஒடுக்க எண்ணுகிற பாசிச எண்ணம்.

எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், பழங்குடியினத்தைச் சார்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்து சிறையில் அடைத்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலையும் சிறையில் அடைத்திருக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் என்பது சமமான களமாக இருந்தால், படுதோல்வி நிச்சயம் என உணர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் வங்கிக் கணக்கை முடக்குகிற தீய செயல்களில் ஈடுபட்டார். மக்களைப் பற்றி சிந்திக்காமல், கார்ப்பரேட்டுகளுக்காக மட்டுமே சிந்தித்து திட்டங்களைத் தீட்டியதால், விலைவாசி உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டுகிற அளவுக்கு இன்றைக்கு உயர்ந்திருக்கிறது.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்து ஆட்சியமைத்த மோடி, இந்த 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்தாரா? இல்லை. இந்த கேள்வியைக் கேட்டால், இளைஞர்களை பக்கோடா சுட சொன்னவர்தான் மோடி. இப்போது நடுநிலை வாக்காளர்களும் பாஜகவின் உண்மை முகத்தைத் தெரிந்துகொண்டு, வெறுக்கத் தொடங்கி விட்டனர்.

தேர்தல் பத்திர ஊழல், மோடியின் கிளீன்மோடி என்கிற முகமூடியை கிழித்தெறிந்து மோடியின் ஊழல் முகத்தை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே மோடி என்ன செய்கிறார்? தன்னுடைய இமேஜே காப்பாற்றிக் கொள்ள, தேர்தல் பத்திரம் வந்த பிறகுதான், யார் யாருக்கு நிதி கொடுக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது என்று வடை சுட ஆரம்பித்தார்.

பிரதமர் மோடி அவர்களே, உச்ச நீதிமன்றம் முதலில் பட்டியல் கேட்டபோதே ஏன் தரவில்லை? தேர்தலை சந்திக்க எல்லாக் கட்சிகளும்தான் நிதி வாங்குகின்றனர். இங்கு நிதி வாங்கியது பிரச்சினை கிடையாது. அதை எப்படி வாங்கினீர்கள்? அமாலக்கத்துறை, வருமான வரித் துறை, சிபிஐ ஆகியவைகளை கூட்டணி போல செயல்படுகிற அமைப்புகளை வைத்து தொழில் நிறுவனங்களுக்கு ரெய்டு செல்வது, அடுத்த சில நாட்களில் அந்த நிறுவனங்களிடமிருந்து பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதி வாங்கப்பட்டுள்ளது. பின்னர், அந்த நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று ஒரு மறைமுக சங்கிலித் தொடர்பு இருக்கிறதே அதுதான் பிரச்சினைக்குரியது.

முன்னணி ஊடகங்கள் இதுகுறித்து பேச மறுத்தாலும், தனிநபர் பலரும், உச்ச நீதிமன்ற அழுத்தத்தால் வெளியான பட்டியல்களை ஆய்வு செய்து சில ஊடகங்களில் பாஜகவின் தில்லமுல்லு அம்பலமானது. இந்த நாடு எத்தனையோ பிரதமர்களை பார்த்துள்ளது. ஆனால், மோடி போல வசூல் வேட்டையில் ஈடுபட்ட வசூல்ராஜாவை பார்த்தது இல்லை. கரோனாவில் கூட வசூல் வேட்டை நடத்தினார். அதற்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா? பி.எம்.கேர்ஸ் நிதி. அனைவரும் நிதி உதவி செய்யுமாறு கேட்டார். மக்களுக்கு உதவுவதற்காகத்தான் பிரதமர் கேட்கிறார் என்று, பலரும் அள்ளிக் கொடுத்தனர். அந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டால், அது தனியார் அறக்கட்டளை, அந்த விபரம் எல்லாம் சொல்ல முடியாது என்று பதில் வருகிறது.

அடுத்தது உங்களது ஆட்சிக்கு சிஏஜி கொடுத்த சர்டிபிகேட் என்ன? இதைப்பற்றி ஏன் வாயே திறக்கமாட்டேன் என்கிறீர்கள்? இதை வெளியிட்ட தணிக்கைத்துறை அதிகாரிகள் மூன்று பேரை, உடனே பணியிடமாற்றம் செய்த மர்மம் என்ன? அடுத்து ரபேல் ஊழல், காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்துக்கு ரூ.526 கோடிக்கு ஒப்பந்தம் போட்டால், பாஜக ஆட்சியில் ரூ.1620 கோடிக்கு வாங்கினார்கள். இதனால், பயனடைந்தது யார்? என்று காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு பிரதமர் இன்றுவரை பதில் சொல்லவில்லை.

கார்ப்பரேட் முதலாளிகளுக்காக எப்படி அரசை நடத்துகிறீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய போது, பதில் சொல்லாமல் அவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமா அவருடைய எம்.பி. பதவியை பறித்தனர்.

இவ்வளவும் செய்துவிட்டு பிரதமர் மோடி ஊழல் பற்றி பேசலாமா? அதனால்தான் சொன்னேன். உண்மையிலேயே ஊழலுக்கு பல்கலைக்கழகம் கட்டி அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் எனில், மோடியை விட்டு அதற்கு யாருமே கிடையாது. ஏனெனில், ஊழலை சட்டபூர்வமாக்கியவர் மோடிதான்” என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மு.க.ஸ்டாலின்: இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்..!

சென்னை, பெசன்ட் நகரில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை அறிமுகப்படுத்தி I.N.D.I.A. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள். தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்து உள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், ” புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு , ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்’ என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்” என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். ‘இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்’ என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

இதே ஆர்வமும் சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று ‘எப்போதும் வென்றான்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.

ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது – பசி நோக்காது – கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும்.

தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும்.

தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும்.

தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றமே ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம்.

ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் என என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.