ஜெ.பி. நாராயண் அருங்காட்சியக வாசலில் தடுப்புகள் குறித்து அகிலேஷ் யாதவ் vs பாஜக வார்த்தை போர்..!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மறைந்த சோசலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் அருங்காட்சியகம் தற்போது அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

லக்னோவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் இன்டர்நேஷனல் சென்டரின் நுழைவாயில் வியாழக்கிழமை இரவு தகரத் தடுப்புகளால் மறிக்கப்பட்டதாகவும், வெள்ளிக்கிழமை அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் சமாஜ்வாதி கட்சி ஆளும் பாஜக மீது குற்றம்சாட்டியது. ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்தநாளில் JPNICயில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மேலும் சாமஜ்வாதி கட்சி அலுவகம் முன்பு காவல்துறை தடைகள் போடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றையும் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பாஜகவினர் மற்றும் அவர்களின் அரசு என எதுவாக இருந்தாலும் அவர்களின் ஒவ்வொரு செயல்களும் எதிர்மறைகளின் குறியீடாகவே உள்ளன. கடந்த முறை நடந்தது போலவே, ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த நாளில் அவரின் சிலைக்கு சமாஜ்வாதி கட்சியினர் மரியாதை செய்வதை தடுப்பதற்காக எங்களுடைய சொந்த இடங்களைச் சுற்றி காவல்துறை தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாஜக எப்போதுமே சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், சுந்தந்திர போராட்ட இயக்கத்துக்கும் எதிரானது. காலனியாதிக்கவாதிகளுடன் இருந்தும், ரகசியமாக அவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாதைகளை எப்படித் தடுப்பது என்பதை கற்றுக்கொண்டுள்ளனர். இப்போது அனைவரும் சொல்லத் தொடங்கி விட்டனர் பாஜக எங்களுக்கு வேண்டாம்!” என தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்வின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜக தீவிரமாக பதிலடி கொடுத்துள்ளது. உத்தரப் பிரதேச பாஜகவின் செய்தித் தொடர்பாளர் அலோக் அவஸ்தி தனது எக்ஸ் பக்கத்தில், ” பாரதிய ஜனதா கட்சி எல்லா பெரிய மனிதர்களுக்கும் மதிப்பளிக்கிறது; மரியாதை செய்கிறது. தவறான ஆட்சி, அராஜகம், ஊழலுக்கு எதிரான இயக்கத்தை ஜெயபிரகாஷ் நாராயணன் வழிநடத்தினார். அவர் எளிமையின் அடையாளம்.

ஜெயபிரகாஷ் நாராயணின் ஏதாவது ஒரு குணம் உங்களிடம் உள்ளதா அகிலேஷ் யாதவ்? ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள். உங்களின் ஆட்சியில் அராஜகம், தவறான நிர்வாகம், கலவரக்காரர்கள், ஊழல்வாதிகள் ஆட்சி செய்தனர். உங்களின் நடத்தைகள் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் லோகியா ஆகியோரின் நடத்தை மற்றும் எண்ணங்களுக்கு எதிரானது” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

கட்டுமான பணி மற்றும் மழை காரணமாக பூச்சிகள் தொல்லைகளை காரணம் காட்டி, JPNICக்குள் நுழைய நேற்றிரவு அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை உருவானது. அருங்காட்சியகத்து முன்னாள் தகரத் தடுப்புகள் வைக்கப்பட்டிருத்தற்கு முன்பு நின்று அகிலேஷ், பாஜக மீது குற்றம்சாட்டி பேசினார்.

“இந்தத் தகர தடுப்புகளை வைத்திருப்பதன் மூலம் எதை மறைப்பதற்கு இந்த அரசு முயற்சி செய்கிறது. இங்கு ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட்டது.. நாங்கள் அந்த சோசலிச சிந்தனையாளர், சிறந்த மனிதருக்கு மரியாதை செய்ய விரும்புகிறோம். இந்த அரசு ஏன் அதனைத் தடுக்கிறது? இந்த அரசு பயப்படுகிறது. ஆனால் அவருடைய சித்தாந்தத்தை நிறுத்த முடியுமா?

இவ்வாறு தடுத்து நிறுத்தப்படுவது இது முதல்முறை இல்லை. ஒவ்வொரு முறையும் இந்தநாளில் பல சோசலிஸ்ட்டுகள் இங்கே கூடுகின்றனர். அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தங்களின் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். முழு புரட்சிக்கான முழக்கத்தை வழங்கிய அந்த சிறந்த தலைவர் அப்போதைய அரசின் முன்பு ஒரு போதும் பணிந்து போகவில்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டும் JPNICக்குள் நுழைய அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் திரும்பிச் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டார். என்றாலும் அவர் ஜெ.பி.நாரயணின் சிலைக்கு மரியாதை செய்ய சுவர் ஏறி குதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரா.முத்தரசன்: தோல்விக்கு பின்னரும் பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக அரசு..!

“தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி நிதி ஒதுக்கியிருப்பது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டிற்குரிய நிதியினை வழங்கிட வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாஜக தனது பத்தாண்டு கால ஆட்சியில் பாகுபாடு காட்டியது. தனது கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒரு நீதியும், பிற எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு அநீதியும் இழைத்து வந்தது. அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற வாய்ப்பளிக்கவில்லை.

தோல்விக்கு பின்னரும் தனது வெறுப்பு அரசியலை பாஜக கைவிடவில்லை என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியுள்ளது. மாநிலங்களுக்கு வரி பகிர்வு விடுவிப்பில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்குடன் குறைந்த நிதி ஒதுக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஒன்றிய அரசு என்பது, அனைத்து மாநிலங்களையும் சமமாக பாவிக்கும் பெருந்தன்மை வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கின்ற கொடிய நடைமுறையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

கூட்டாட்சி தத்துவத்தை நிராகரித்து ஒரு கட்சி ஆட்சி எனும் சர்வாதிகார போக்கை கைவிட்டு ஜனநாயக பண்புகளை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும். தமிழகத்திற்கு ரூ.7268 கோடி நிதி ஒதுக்கியிருப்பது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டிற்குரிய நிதியினை வழங்கிட வேண்டுமாய், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என ரா.முத்தரசன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

H. ராஜா கேள்வி: சிதம்பரம் நடராஜர் கோயில் நிலத்தை எப்படிப்பா தீட்சிதர்கள் விற்க முடியும்..!?

விழுப்புரத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. ஒரு காவல்துறை அதிகாரியும், இந்து அறநிலையத்துறையை சேர்ந்த 9 அதிகாரிகளும் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயிலை பற்றி தினமும் ஏதோ ஒரு தகவலை பரப்பி வருகின்றனர். 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பொது தீட்சிதர்கள் விற்றுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.

2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை யாராவது விற்க முடியுமா? ஏனென்றால் 1976-ல் கொண்டு வரப்பட்ட அரசாணையின்படி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கட்டளையாளர்கள் கொடுத்த நிலங்கள். அது தீட்சிதர்களுக்கான நிலங்கள் அல்ல. கோயிலுக்கு கொடுத்த இடம். இவர்கள் கூறியவாறு 3 ஆயிரம் ஏக்கர் இல்லை. 3,347 ஏக்கர் நிலம் இருக்கு. அது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தனி தாசில்தாரிடம் இருக்கிறது. இதனை எப்படி பொது தீட்சிதர்கள் விற்பனை செய்ய முடியும் என H. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

அட்டை பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து பணி செய்த அதிஷி மெர்லினா சிங்..!

டெல்லியில் முதலமைச்சர் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் முதலமைச்சர் அதிஷி மெர்லினா சிங் தனது கல்காஜி குடியிருப்பில் இருந்து பணிகளை மேற்கொண்டார்.

டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து முதலமைச்சராக ஆம் ஆத்மியின் அதிஷி மெர்லினா சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்த நிலையில், முதலமைச்சர் அதிஷி மெர்லினா சிங் அங்கு குடியேறினார்.

 

இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் உடைமைகளை நேற்று முன்தினம் எடுத்து வெளியே வைத்து முதலமைச்சரின் இல்லத்தை பூட்டி சீல் வைத்தனர். பொதுப்பணித்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே முதலமைச்சர் பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிஷி மெர்லினா சிங் தனது கல்காஜி குடியிருப்புக்கு திரும்பினார். அங்கு அவரது உடைமைகள் வைத்த பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து அரசு கோப்புக்களில் கையெழுத்திடுகிறார். இந்த புகைப்படத்தை ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் சிங், ‘‘டெல்லி மக்களுக்காக உழைக்கும் அதிஷி மெர்லினா சிங்கின் உறுதிப்பாட்டை பாஜகவால் பறிக்க முடியாது. நவராத்திரி விழா நடந்து வரும் நிலையில் ஒரு பெண் முதலமைச்சரின் பொருட்களை குடியிருப்பில் இருந்து பாஜக தூக்கி எறிந்துள்ளது. முதலமைச்சரிரின் இல்லத்தை பலவந்தமாக கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது ஆளுநர் சக்சேனா உத்தரவின்பேரில் தான் முதலமைச்சரின் உடைமைகள் அகற்றப்பட்டுள்ளது” என சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

தளவாய் சுந்தரம் மிக விரைவில் பாஜகவில் சேர திட்டமா..!?

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவை வழிநடத்தும் முக்கிய பொறுப்புகளை கடந்த 20 ஆண்டுகளாகவே தளவாய் சுந்தரம் MLA. இருந்து வருகிறார். சமீப காலமாக அவர், இந்து கோயில்கள், அமைப்புகள் மற்றும் இந்து சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வந்தார்.

குறிப்பாக கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தளவாய் சுந்தரத்தின் பெயர் முதன்மையாக இருக்கும். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடைபெறும் ஆரத்தி வழிபாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். விவேகானந்தா கேந்திராவுக்கு RSS பொறுப்பாளர்கள் வரும்போது, அவர்களை சந்தித்து பேசுவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில், தளவாய் சுந்தரம் வகுத்து வந்த அமைப்புச் செயலாளர், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து அவரை நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளவாய் சுந்தரத்தை அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கியதற்கு, பாஜகவினருடன் அவர் கொண்டிருந்த நெருக்கமே காரணம் எனக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மக்களவைத் தேர்தல், விளவங்கோடு சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று அதிமுக டெபாசிட் இழந்தது. இத்தேர்தலில் அதிமுக பொறுப்பாளராக இருந்த தளவாய் சுந்தரம், தேர்தல் பணியில் பாஜகவுக்கு சாதகமாக இருந்ததாக அப்போதே கட்சியினர் குற்றம்சாட்டினர். கடந்த 6-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்தில் நடந்த RSS ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக கட்சி தலைமைக்கு புகார் சென்றிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றபோது மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் இணக்கமாக இருந்து பாஜக நிர்வாகியைப் போன்று தளவாய் சுந்தரம் செயல்பட்டார் போன்ற கருத்துக்களுக்கு நிலவி வருகின்றது. எது எப்படியோ தளவாய் சுந்தரம் விரைவில் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணமுள்ளது.

அதிஷி மெர்லினா சிங்: அரசு பங்களா தேவையில்லை நாங்கள் சாலையில் அமர்ந்து ஆட்சி செய்வோம்..!

பெரிய பங்களாவில் வாழ்வதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைபட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம் என டில்லி முதலமைச்சர் அதிஷி மெர்லினா சிங் தெரிவித்தார்.

டில்லி ஆம் ஆத்மி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இத்தனை தொடர்ந்து செப்டம்பர் 21-ஆம் தேதி டில்லி புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா சிங் பதவிறே்றார்.

இந்நிலையில் டில்லி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பங்களாவான எண் 6, பிளாக் ஸ்டாப் சாலையில் கடந்த 6-ஆம் தேதி அதிஷி மெர்லினா சிங் குடியேறினார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் திடீரென அவரது உடமைகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தூக்கி வெளியே வீசப்பட்டன. மேலும் அதிஷி மெர்லினா சிங்கை கட்டாயப்படுத்தி அரசு பங்களாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பின்னணியில் துணை நிலை கவர்னரும், பாஜகவும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தனை தொடர்ந்து நேற்று முதலமைச்சர் அதிஷி மெர்லினா சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆப்ரேஷன் தாமரையை துவங்கிய பாஜக எங்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாததால் மிகுந்த கவலையில் உள்ளது. இப்போது முதல்வர் இல்லத்தையும் பாஜகவினர் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர்.

சொகுசு காரில் செல்வதற்கும், அரசு பங்களாவில் வாழ்வதற்காகவும் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைப்பட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம். மக்கள் மனதில் நாங்கள் உள்ளோம் என காரசாரமாக அதிஷி மெர்லினா சிங் பேசினார்.

வாக்கு எண்ணும் போது மின்னணு வாக்கு இயந்திரங்கள் 99% சார்ஜ் இருந்தது எப்படி..!?

ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் போது சில வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்த முரண்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென தகுந்த ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தேர்தல் அதிகாரிகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், ஹரியானா தேர்தல் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாதது என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் உயர்மட்ட குழு நேரில் புகாரளிக்க அனுமதி கேட்டு இருந்த நிலையில், ஹரியானா முன்னாள் முதலமைச்சர்கள் அசோக் கெலாட், பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், பவன் கேரா, ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் கொண்ட உயர்மட்ட குழுவினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதன் பின் பூபிந்தர் சிங் ஹூடா, பவன் கேரா உள்ளிட்டோர் செய்தியாளர்களுக்கு அளித்தனர். அப்போது, பொதுவாக வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்கு இயந்திரங்கள் 60 அல்லது 70 சதவீத பேட்டரி சார்ஜூடன் இருப்பது வழக்கம். நாள் முழுவதும் வாக்குப்பதிவு நடக்கும் போது சார்ஜ் குறையும்.

பின்னர் அவை சீலிடப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த இயந்திரங்கள் வாக்குப்பதிவு நாளில் மட்டுமே வெளியில் கொண்டு வரப்படும். அப்படி இருக்கையில், ஹரியானாவில் சில மின்னணு வாக்கு இயந்திரங்கள் 99 சதவீத பேட்டரி சார்ஜூடன் இருந்துள்ளன. இதுதொடர்பாக 7 தொகுதிகளில் இருந்து எங்கள் வேட்பாளர்களிடம் இருந்து 20 புகார்கள் வந்துள்ளன.

இதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி உள்ளோம். கூடுதல் ஆதாரங்களை அடுத்த 48 மணி நேரத்தில் சமர்பிப்பதாக கூறி உள்ளோம். இந்த வெளிப்படையான முறைகேடு தேர்தல் முடிவையே மாற்றக் கூடியது. எனவே இது தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும். விசாரணை முடியும் வரை சம்மந்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

வானதி சீனிவாசன் சாடல்: ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்ப்பு..!

“ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தல் முடிவுகளால் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது,” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48-ல் வென்று தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும், 99 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, தான் வென்று விட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைவராக இல்லாமல் அக்கட்சியை வழிநடத்தி வரும் ராகுல் காந்தியை பெரும் தலைவர் போல ஊடகங்கள் சித்தரித்தன. ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். ராகுல்காந்தி மாயாஜாலம் நிகழ்த்துவார் என, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஊடகங்களில் ராகுல் காந்தி குறித்த செய்திகளே அதிகம் வந்தன. ஆனால், மக்கள் பாஜகவையே தேர்ந்தெடுத்துள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு கட்சி ஆட்சியை தக்க வைப்பது சாதாரணமான விஷயம் அல்ல. தமிழகத்தில் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டால், ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றது எவ்வளவு பெரிய சாதனை என்பது புரியும். ஜம்மு – காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின், சட்டப்பேரவை தேர்தல் நடப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் 62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 29-ல் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் 25.64 சதவீதம் அதாவது 14 லட்சத்து 62 ஆயிரத்து 225 வாக்குகளைப் பாஜக பெற்று, அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகளால் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவின் வெற்றி தொடரும்,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது .

H. ராஜா: கோயிலில் கிரிக்கெட் விளையாடினா என்ன தப்பு..!? கர்ப்பகிரகத்திலா விளையாடினார்கள்…!?

கோயிலில் கிரிக்கெட் விளையாடினால் என்ன தப்பு.. கர்ப்பகிரகத்திலா விளையாடினார்கள் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் H. ராஜா பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம் பிடித்ததால் தாக்கப்பட்டதாக விசிக நிர்வாகி காவல் நிலையில் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து தீட்சிதர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை முகாம் செயலாளராக உள்ளார். இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, தீட்சிதர்கள் சிலர் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த இளையராஜா அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து, இளையராஜாவிடம் இருந்து தீட்சிதர்கள் செல்போனைப் பறித்து, அவரை திட்டியதுடன் தாக்கியதாவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த இளையராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கோயில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தீட்சிதர்கள் 5 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் H. ராஜா செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஏன் கிரிக்கெட் விளையாடினா என்ன தப்பு. கர்ப்பக்கிரகத்தில் விளையாடினாங்களா. கிரவுண்டுல விளையாடலாம் இல்லையா.

நான் உடற்கல்வி பேராசிரியரின் மகன். என் தகப்பானரின் மூன்று ஆராய்ச்சி சப்ஜக்ட் லெஸிம், லாட்டி, மால்கம். மால்கம் என்பது தூண் வைத்து உடற்பயிற்சி செய்வது, லாட்டி சிலம்பம், லெஸிம் சலங்கை வைத்து செய்வது. இதெல்லாம் கற்றுக்கொண்டது தவறு என்று கூறுவீர்களா. உடற்பயிற்சி, விளையாட்டு என்பது எல்லோரும் செய்ய வேண்டும். இதில் எந்தவொரு தப்பும் இல்லை என H. ராஜா கேள்வி எழுப்பி மேலும் இந்த விஷயத்தை பரப்பாக்கியுள்ளார்.

இனி செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம்..!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மதுரை மாவட்ட தலைவர் எச்சரித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார். பேச்சை முடிக்கும்போது நான் பேசுவதற்கெல்லாம் தலையாட்டக் கூடாது, ஆடு மாதிரி ஆட்ட கூடாது ஏனென்றால் ஆடு லண்டன் சென்று விட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக சுட்டிக் காட்டிய செல்லூர் ராஜு தலையை ஆட்டி கொண்டு இல்லாமல் உண்ணாவிரதத்திற்கு குறைந்தபட்சம் 200 நபர்கள் ஆவது ஒவ்வொருவரும் அழைத்து வர வேண்டும் என செல்லூர் ராஜு பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தெர்மாகோல் விஞ்ஞானி, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தொடர்ந்து தரம் தாழ்ந்து எங்களது மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார். அண்ணாமலையிடம், செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையென்றால், எந்தவொரு தனித் தகுதியும் இல்லாத நிலையில், ஜெயலலிதாவின் பாதம் பிடித்து அமைச்சர் பதவி பெற்று இன்று வரை, செல்லூர் ராஜூவாகிய நீ வகித்த பதவிகளில் பல கோடிகள் ஊழல் செய்து, தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளம் காட்டிக் கொள்ளும் உனக்கு, மிக விரைவில் பாஜக சார்பில், நீ செல்லும் இடம் எல்லாம் உனக்கு எதிராக பிரமாண்டமான ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.