செந்தில் பாலாஜி எச்சரிக்கை: கவுதம் அதானியை முதல்வர் சந்திக்கவில்லை..! அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை..!

கவுதம் அதானியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. கவுதம் அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை. பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவோர் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொழிலதிபர் கவுதம் அதானி குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர் விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி, நிலக்கரி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள கவுதம் அதானி, உலக பணக்காரர்களில் பட்டியலில் 17-வது இடத்திலும் இருக்கின்றார்.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு ஆணையம் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட நிலையில் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்து பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது.

இது தொடர்பாக செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலதிபர் அதானியை தமிழக முதல்வர் சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பதுபோலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலைக் கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு – தெரிவித்து வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் அதானியை சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை. அதிமுக ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதிநிலைமை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாகச் சீர்திருத்த மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் தலைநிமிர வைத்துள்ளார் முதல்வர். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடிப்படை உண்மை கிஞ்சித்தும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடு அல்ல.

“ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டும்” என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI)வுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல.

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த மின்சார வாரியங்களைப் போல தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) நிறுவனத்துடன் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்து வருகின்றது. குறிப்பாக, திமுக அரசு அமைந்தப் பிறகு, எந்த தனியார் நிறுவனங்களுடனும் மின்சார வாரியம் நேரடியாக எவ்விதமான ஒப்பந்தமும் செய்து கொள்வதில்லை.

இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், ஒன்றிய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள மரபுசாரா கொள்முதல் (RPO) இலக்குகளை அடைவதற்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்று செய்யப்பட்ட ஒப்பந்தங்களாகும். இதில், எவ்வித முறைகேடும், விதிமுறை மீறல்களும் இல்லை.

இன்னும் சொல்லப் போனால், ஒன்றிய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பெறுவது குறித்த கட்டாய விதி எதுவும் இல்லாத காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் அதானி லிமிடெட் நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஐந்து நிறுவனங்கள் மூலமாக, 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் 04/07/2015 அன்று, கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 என முடிவு செய்து, 31/03/2016க்கு முன் உற்பத்தி ஆலைகள் இயக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

அதானி நிறுவனம் 31/03/2016 க்கு முன் பல்வேறு தேதிகளில் 313 மெகாவாட் மின்சாரத்தை இயக்கி, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 உரிமை கோரியது. 31/03/2016 தேதிக்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து, 18/09/2016 அன்று 288 மெகாவாட் மின்சாரம் வழங்கியது. 31/03/2016 க்குப் பிறகு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 வேண்டுமென அதானி நிறுவனம் கோரியது.. மேலும் 22/03/2016 முதல் மின்சாரம் வழங்கிட தயாராக இருந்ததாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் (TANGEDCO) முழு செயலற்றதன்மையின் காரணமாக மின்சாரம் வழங்க முடியவில்லை எனவும் திரித்து கூறியது.

ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், அதானி நிறுவனத்தின் குற்றச்சாட்டை மறுத்து, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.5.10 கட்டணத்தை கொடுக்க முடியுமென தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் அதானி நிறுவனம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முன், MP எண்.25(2020) மற்றும் MP எண். 26(2020) என இரு மனுக்களை தாக்கல் செய்தது. ஆயினும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 20/07/2021 அன்று, அதானி நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அதானி நிறுவனம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முன் (APTEL) மேல்முறையீடு செய்தது (எண்.287 – 2021). மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அந்த மேல்முறையீட்டை அனுமதித்து, யூனிட்டுக்கு ரூ.7.01 கட்டண விகிதத்தை 07/10/2022 அன்று அங்கீகரித்தது. மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், அதானி நிறுவனம், ரூ.568 கோடிக்கான பில்களை PRAPTI (Payment Ratification and Analysis in Power Procurement) போர்ட்டலில் சமர்ப்பித்தது.. PRAPTI போர்ட்டலில் சமர்ப்பிக்கப்பட்ட பில்களை 75 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென விதி உள்ளது.

ஆயினும், மேல்முறையீட்டு ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 2022-ல், சிவில் மேல்முறையீட்டு முறையில் (எண். 38926), இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரியது. 17/02/2023 அன்று, உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. அதன் காரணமாகவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ரூ.568 கோடி செலுத்தியது. தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மேல்முறையீடு, (மேல்முறையீட்டு எண் 1274 மற்றும் 1275 – 2023) இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தமிழ்நாடு அரசின் நலனை- பகிர்மானக் கழகத்தின் நலனைக் காப்பதற்கு எங்களது வலுவான வாதத்தை எடுத்துரைக்க உள்ளோம்.

அதானி நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை ரூ.7.01க்கு நீண்ட கால அடிப்படையில் பெற 2014-ல் ஒப்பந்தமிட்ட அரசை விட்டுவிட்டு, 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற உடனே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அதானி நிறுவனத்துக்கு எதிரான வழக்கை திறம்பட நடத்தியை திராவிட முன்னேற்றக் கழக அரசை- மின்சார வாரியத்திற்கு சாதகமாக, அதாவது ரூ.5.10-க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்னும் அளவிற்கு சாதகமான ஆணையைப் பெற்ற அரசை குறை சொல்வது எந்த வகையிலும் நியாயமாகாது. அதனால்தான் அறிக்கைகள் விட ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதற்கு அடிப்படை புரிதலும் அறிவும் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டு காலமும் மின்சார கொள்முதல் குறித்து எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். அதாவது 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு நேரடியாகவே தனியார் நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ரூபாய் 7.01 என்ற அளவில் நீண்ட காலம் பெறுவதற்கு ஒப்பந்தம் போட்டதை விட, கழக ஆட்சியில் மிகக் குறைந்த அளவில், யூனிட் ரூபாய் 2.61 மட்டும் என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுவும் தனியார் நிறுவனத்துடன் அல்ல; ஒன்றிய அரசின் நிறுவனத்துடன்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மின் உற்பத்தியினைப் பொருத்தவரையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அனைத்து மின் நிலையங்களிலிருந்தும் முழுமையான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையினைப் பொறுத்து, நடுத்தர மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்கள் அடிப்படையில் யூனிட் ஒன்றிற்கு ரூ.3.45 முதல் 5.31 வரை தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒளிவு மறைவற்ற ஒப்பதப்புள்ளி வாயிலாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. 1×800 மெகாவாட் திறனுள்ள வடசென்னை அனல்மின் திட்டம், நிலை-3, கடந்த 27.06.2024 அன்று, தனது முழு நிறுவுத்திறனான 800 மெகாவாட் மின் உற்பத்தியை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

இதுவரை சுமார் 750 மில்லியன் யூனிட் மின்சாரம் வடசென்னை அனல் மின் திட்டம், நிலை-3-இல் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு பயன்பட்டுள்ளது. இதுபோன்ற அடிப்படைத் தகவல்களைக்கூட அறியாதவர்கள் போல் அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது! மின்கட்டண உயர்வு மூலம் 31,500 கோடி ரூபாய் என்று ஒரு அபத்தமான குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள்.

எப்போது மின் கட்டண உயர்வை ஏற்படுத்தினாலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவது திராவிட முன்னேற்றக் கழக அரசு மட்டுமே. இலட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு மின் மானியமாக வழங்க ஆணை வெளியிட்டு, வீடுகளுக்கான மின்கட்டண உயர்வே இல்லாமல் பார்த்துக்கொண்டவர் முதல்வர் மட்டுமே என்பதை இந்தநேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஏழை எளிய மின் நுகர்வோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும், தமிழ்நாடு அரசு 17,117 கோடி ரூபாயினை மானியமாகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வழங்கி, தமிழ்நாட்டு மக்களை தாய் உள்ளத்துடன் நடத்திச் செல்பவரும் முதல்வர் மட்டுமே என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதைவிட முக்கியமாக மின்கட்டண வருவாய் அதிகரிப்பு ஒருபுறம் என்றாலும், விலைக்குறைவான மின்கொள்முதல், செலவுகளைப் பெருமளவில் கட்டுப்படுத்தியது, உள்நாட்டு மின் உற்பத்தி என நிர்வாகத் திறன்மிக்க நடவடிக்கைகள் கழக அரசில்தான் எடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் என்பதை, அறியாமையில் உளறிக் கொட்டும் “சில” “அறிக்கை அரசியல்வாதிகள்” புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்!

ஆகவே உண்மை இவ்வாறு இருக்க, 2021-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கட்டாயத்தின் அடிப்படையில், ஒன்றிய அரசு நிறுவனமான சூரிய மின்சக்தி கழகத்திடமிருந்து இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைப் போலவே சூரிய ஒளி மின்சாரத்தைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அது சம்பந்தமாக 2024-ஆம் ஆண்டு நிறுவனத்தின் பிரதிநிதியை முதல்வரை சந்தித்ததாகக் கூறுவது முற்றிலும் தவறானது மட்டுமல்லாது, மக்களிடம் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைக் கொண்டுச் சென்று தமிழ்நாட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகவே கருத வேண்டி உள்ளது.

அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டதையும் மறைத்து- உச்ச நீதிமன்ற உத்தரவையும் அறியாதவர்கள் போல்- அதிமுக அரசின் மின்கொள்முதலை திமுக அரசின் மின் கொள்முதல் முடிவு போல் சித்தரிக்க துடிக்கும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ- அதிமுகவையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அதற்குள்தான் அதிமுக- பாஜக கூட்டணி திரைமறைவில் ஒளிந்து கிடக்கிறது.

முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசில், மின்வாரியம் நிர்வாக ரீதியாகவும், நிதிச் சுமையிலிருந்தும் சீரடைந்து, ஏழை எளிய நுகர்வோரின் நலனைப் பிரதானமாக எண்ணி நல்லாட்சிக்கு இலக்கணமாகச் செயல்பட்டு வருவதை பொறுத்துக்கொள்ள இயலாமல், “அவரைச் சந்தித்தார்” “இந்தத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார்” என்றெல்லாம் பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்: ராமதாஸுக்கு வேறு வேலையில்லை..! கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை..!

ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர், குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எதை வலியுறுத்தி பேச இருக்கின்றனர்? என்ற கேள்விக்கு “ஏற்கனவே நாங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து குளிர்கால கூட்டத்தொடரில் என்னென்ன பேச வேண்டும் என்பது குறித்து விவாதித்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதை வலியுறுத்திப் பேச வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அந்த அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள். அதானி விவகாரம் குறித்த செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, “அதானி விவகாரம் குறித்து துறையின் அமைச்சரே கூறியிருக்கிறார். அதை ட்விஸ்ட் செய்ய வேண்டாம்.

தொடர்ந்து அதானி- முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு குறித்த ராமதாஸின் அறிக்கை தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு, “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

மு.க.ஸ்டாலின்: திராவிட நல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா..!?

திமுக பொதுச் செய­லா­ளர் அமைச்­சர் துரை­மு­ரு­கன் தலைமையில், திமுக துணைப் பொதுச் செய­லா­ளர், வனத்­துறை அமைச்­சர் க.பொன்­முடி எழு­தி­ய திராவிட இயக்­க­மும் கருப்­பர் இயக்­க­மும் நூல் வெளி­யீட்டு விழா சென்னை அண்ணா அறி­வா­ல­யம் கலைஞர் அரங்­கில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு இளை­ஞர் அணிச் செய­லா­ளர் துணை முதலமைச்சர் உத­ய­நிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். துணைப் பொதுச் செய­லா­ளர் அமைச்­சர் பொன்முடி சிறப்­புரையாற்றினார். மேலும், பொன்முடி எழுதிய நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி­யிட, திரா­வி­டர் கழ­க தலை­வர் கி.வீர­மணி பெற்­று கொண்டார்.

இத்தனை தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, இந்த நூலில், அன்னைத் தமிழ்நாட்டையும் – அமெரிக்கப் பெருநாட்டையும் ஒப்பிட்டிருக்கிறார் பொன்முடி. அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பெருங்குடி மக்களின் விடியலுக்கும் – விடுதலைக்கும் – மேன்மைக்கும் தோன்றியதுதான் திராவிடர் இயக்கம். இந்தியத் துணைக் கண்டத்தில் நம் மக்கள் எப்படி, பிறப்பின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டார்களோ, அதேபோன்று அமெரிக்க மண்ணில், கருப்பின மக்கள் நிறத்தால் ஒடுக்கப்பட்டார்கள்.

திராவிட இயக்க வரலாற்றை 1916 முதல் 1949 வரையிலும், கருப்பர் இயக்க வரலாற்றை 1909 முதல் 1941 வரையிலும் எடுத்துக்கொண்டு, இந்த ஆய்வு நூலை எழுதி இருக்கிறார். திமுகவை பொருத்தவரை, சாதியின் பேரால் – சாத்திர சம்பிரதாயங்களின் பேரால் – காலம் காலமாக உருவாக்கி வைத்திருந்த அத்தனை தடைகளையும் உடைக்கும் சட்டங்களை ஆட்சி அதிகாரத்தின் மூலமாக நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். ஒருவர் இருக்கிறார், யார் என்று உங்களுக்கே தெரியும். சட்டமன்றத்தில் திராவிட மாடல் என்று எழுதி கொடுத்தால் பேசமாட்டார்.

இந்தி மாத விழா நடத்த கூடாது-என்று சொன்னால், அந்த விழாவில் திராவிடத்தை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவாங்க. ஏன், திராவிட நல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா? இப்படி பாடினால் சிலருக்கு, வாயும் வயிறும் மூளையும் – நெஞ்சும் எரியும் என்றால் திரும்பத் திரும்ப பாடுவோம். ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை – ஒடுக்குமுறையை – பழமைவாத மனோபாவத்தை – 100 ஆண்டுகளில் மாற்றிவிட முடியாது.

ஆனால், சுயமரியாதைச் சமதர்ம உலகத்தை அமைப்பதற்கான நம்முடைய பயணத்தில், நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு இன்றைக்கு முன்னோக்கிச் செல்ல திராவிட இயக்கம்தான் காரணம் என்பதை மட்டும், என்னால் உறுதியாக சொல்ல முடியும். இப்படிப்பட்ட புத்தகங்கள்தான் கட்சியையும் ஆட்சியையும் காக்கும் கேடயங்கள். இதை உருவாக்கிக் கொடுத்த நம்முடைய பொன்முடியை பாராட்டுகிறேன் என மு.க. ஸ்டாலின் பேசினார்.

எல்.முருகன் சவால்: திமுக அரசு இந்தி பாடமாக உள்ள பள்ளிகளை இழுத்து மூட தயாரா..!?

‘இந்தி வாரம்’ நடத்த கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என்று கூறி, அப்பள்ளிகளை இழுத்து மூட தயாரா என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சவால் விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு எல்.முருகன் பதிலளித்தார். அப்போது, ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியது, முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பும் செயல். ‘இந்தி வாரம்’ என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வழக்கமாக கடைபிடிக்கப்படுவதுதான்.

மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 10 ஆண்டு காலம் இருந்தபோதும், அதில் திமுக அமைச்சர்கள் இருந்ததுறைகளில் கூட இந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. தமிழை பாதுகாப்பதிலும், உலக அளவில் எடுத்துச் செல்வதிலும் முதன்மையாக பிரதமர் மோடி இருக்கிறார்.

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் குழந்தைகள் செய்தது தவறு. அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்க, அதில் ஆளுநரை சம்பந்தப்படுத்துவது, எந்த விதத்திலும் நியாயம், தர்மம் அல்ல. அவர் ஒரு சிறப்பு அழைப்பாளராக மட்டுமே அந்த விழாவில் கலந்து கொண்டார்.

மேலும், மழை, வெள்ளத்தை சமாளிக்கதிமுக அரசு சரியாக திட்டமிடவில்லை. ஒருநாள் மழையையே சரியாக கையாளவில்லை. இதில் இருந்து மக்களை திசைதிருப்ப, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, திமுக – இண்டியா கூட்டணி செயல்படுகிறது. மொழியை வைத்து ஏமாற்ற இது 1967 இல்லை. மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.

‘இந்தி வாரம்’ நடத்த கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என்று கூறி, அப்பள்ளிகளை இழுத்து மூட தயாரா, எனவே மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனிமேல் நடக்காது. திமுக ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எல்.முருகன் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் குறித்து மு.க.ஸ்டாலின்..! நிச்சயமாக மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது…!

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

M.K. STALIN: மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு #TeachersDay வாழ்த்துகள்!

ராதாகிருஷ்ணன் அவர்கள் திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற கிராமத்தில் தெலுங்கு பேசும் ஏழ்மையான குடும்பத்தில் 1888செப்டம்பர் 5 பிறந்தார். திருவள்ளூர் ‘கவுடி’ பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். சிறந்த மாணவனாக இருந்ததால் கல்வி உதவித்தொகைகள் கிடைத்தன. மேலும் திருப்பதி லுத்தரன் மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்றார். தத்துவப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். உள்நாட்டிலேயே கல்வி கற்ற இவர், உலகம் போற்றும் மேதையாகத் திகழ்ந்தார்.

இளம் வயதிலேயே பல நூல்களை எழுதியுள்ளார். பத்திரிகைகளுக்கும் பல கட்டுரைகள் எழுதினார். மேடைப் பேச்சி லும் வல்லவர், அறிஞர்கள் போற்றும் பேரறிஞராகத் திகழ்ந்தார். பதவிகளை அவர் தேடிச் சென்றதில்லை. பதவிகள்தான் அவரை தேடி வந்தன. சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகவும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். ‘இந்திய தத்துவம்’ என்ற இவரது நூல் 1923-ல் வெளியானது.

இவர் பாடங்கள் தவிர, உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு போதித்தார். ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கைக் கல்வி, பொது அறிவு ஆகியவற்றையும் கற்றுத் தந்தார். புத்த, சமண மதத் தத்துவங்களோடு, மேற்கத்திய தத்துவங்களையும் கற்று நம் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரையாற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இவரை அழைத்தது. நாடு சுதந்திரம் பெறுவதற்கான ஆயுதமாக தனது சொற்பொழிவுகளைப் பயன்படுத்தினார். வெளிநாடுகளில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் இந்தியாவின் பாரம்பரியப் பெருமைகளைப் பறைசாற்றின. இவரது புலமை, தத்துவஞானம், எதையும் புரிந்துகொண்டு விளக்கிக்கூறும் சொல்லாற்றலை மகாத்மா காந்தி வியந்து போற்றினார். இவரைப் பார்த்து ‘நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன்’ என்றாராம் காந்தி. ‘அனைவருக்கும் ஆசிரியர் போன்றவர் ராதாகிருஷ்ணன். அவரிடம் கற்க ஏராளமான விஷயங்கள் உள்ளன’ என்று நேரு புகழ்ந்துள்ளார்.

ஆந்திரப் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். பிரிட்டிஷ் அகாடமியின் ‘ஃபெலோஷிப்’ பெற்றார். யுனெஸ்கோ தூதர், பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவர், சோவியத் யூனியன் தூதர் என்று பல பொறுப்புகளை வகித்தவர். நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவராக 1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியை 2 முறை வகித்து அதனை தொடர்ந்து குடியரசுத் தலைவராக 1962-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ஏராளமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன. நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது 1954-ல் வழங்கப்பட்டது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 87-வது வயதில் அதாவது 1975 மறைந்தார். அவரைப் போற்றும் விதத்தில் ஆண்டுதோறும் அவரது பிறந்த தினம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு #TeachersDay வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் மாணவி பலாத்காரம் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவு..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிங்ஸ்லி கார்டன் மெட்ரிகுலேஷன் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, 15 நாட்களுக்குள் முழு விசாரணையையும் முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் முகாம் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெய் முரளிதரன், சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கிங்ஸ்லி கார்டன் மெட்ரிகுலேஷன் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில், NCC திட்டத்திற்கு மாணவர்களை தயார்படுத்துவற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில், போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட NCC பயிற்றுநர்கள் 6 பேரில் 5 பேரும், இந்த சம்பவத்தை காவல் துறைக்கு தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் 4 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், வழக்கின் முக்கிய எதிரி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து காவல்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போலியான NCC பயிற்றுநர்கள் இதேபோன்று மேலும் சில பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இத்தகைய பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த பள்ளிகள், கல்லூரிகளிலும் மேற்கூறிய பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்களை பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார்..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு, கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.. இதையடுத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

மு.க.ஸ்டாலின்: ஊழலை சட்டபூர்வமாக்கியவர் மோடிதான்..!

சென்னை, பெசன்ட் நகரில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, “தமிழகத்தில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கான அலை வீசிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திர ஊழல், மோடியின் கிளீன்மோடி என்கிற முகமூடியை கிழித்தெறிந்து மோடியின் ஊழல் முகத்தை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே மோடி என்ன செய்கிறார்? தன்னுடைய இமேஜே காப்பாற்றிக் கொள்ள, தேர்தல் பத்திரம் வந்த பிறகுதான், யார் யாருக்கு நிதி கொடுக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது என்று வடை சுட ஆரம்பித்துவிட்டார்”.

“நாளை மறுநாள் ஏப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், நம் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போர். நாடு காக்கும் இந்த ஜனநாயகப் போரில், இண்டியா கூட்டணிக்கு வெற்றி தேடித் தர தமிழகத்தின் தலைமகனான அண்ணாவை, முதன்முதலாக தேர்ந்தெடுத்து அனுப்பிய தென் சென்னை தொகுதிக்கு வந்திருக்கிறேன். தலைநகரில், தமிழக மக்களுக்கு இறுதி அறைகூவல் விடுக்கிறேன்.

கடந்த 22 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து இருக்கிறேன். மக்களின் முகத்தில் தெரியும் எழுச்சியும், மகிழ்ச்சியையும் வைத்து கூறுகிறேன், நாற்பதுக்கு நாற்பதும் நாம் தாம் வெல்லப் போகிறோம். நாட்டையும் நம்முடைய கூட்டணிதான் ஆளப்போகிறது. காரணம், தமிழகத்தில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கான அலை வீசிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் சர்வாதிகார மனப்பான்மை. மாநிலங்களை நசுக்கும் எதேச்சதிகாரம். ஒற்றுமையாக வாழும் மக்களிடையே, பிளவை உருவாக்கும் மதவாதப் பேச்சு. எதிர்க்கட்சிகளை ஒடுக்க எண்ணுகிற பாசிச எண்ணம்.

எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், பழங்குடியினத்தைச் சார்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்து சிறையில் அடைத்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலையும் சிறையில் அடைத்திருக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் என்பது சமமான களமாக இருந்தால், படுதோல்வி நிச்சயம் என உணர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் வங்கிக் கணக்கை முடக்குகிற தீய செயல்களில் ஈடுபட்டார். மக்களைப் பற்றி சிந்திக்காமல், கார்ப்பரேட்டுகளுக்காக மட்டுமே சிந்தித்து திட்டங்களைத் தீட்டியதால், விலைவாசி உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டுகிற அளவுக்கு இன்றைக்கு உயர்ந்திருக்கிறது.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்து ஆட்சியமைத்த மோடி, இந்த 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்தாரா? இல்லை. இந்த கேள்வியைக் கேட்டால், இளைஞர்களை பக்கோடா சுட சொன்னவர்தான் மோடி. இப்போது நடுநிலை வாக்காளர்களும் பாஜகவின் உண்மை முகத்தைத் தெரிந்துகொண்டு, வெறுக்கத் தொடங்கி விட்டனர்.

தேர்தல் பத்திர ஊழல், மோடியின் கிளீன்மோடி என்கிற முகமூடியை கிழித்தெறிந்து மோடியின் ஊழல் முகத்தை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே மோடி என்ன செய்கிறார்? தன்னுடைய இமேஜே காப்பாற்றிக் கொள்ள, தேர்தல் பத்திரம் வந்த பிறகுதான், யார் யாருக்கு நிதி கொடுக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது என்று வடை சுட ஆரம்பித்தார்.

பிரதமர் மோடி அவர்களே, உச்ச நீதிமன்றம் முதலில் பட்டியல் கேட்டபோதே ஏன் தரவில்லை? தேர்தலை சந்திக்க எல்லாக் கட்சிகளும்தான் நிதி வாங்குகின்றனர். இங்கு நிதி வாங்கியது பிரச்சினை கிடையாது. அதை எப்படி வாங்கினீர்கள்? அமாலக்கத்துறை, வருமான வரித் துறை, சிபிஐ ஆகியவைகளை கூட்டணி போல செயல்படுகிற அமைப்புகளை வைத்து தொழில் நிறுவனங்களுக்கு ரெய்டு செல்வது, அடுத்த சில நாட்களில் அந்த நிறுவனங்களிடமிருந்து பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதி வாங்கப்பட்டுள்ளது. பின்னர், அந்த நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று ஒரு மறைமுக சங்கிலித் தொடர்பு இருக்கிறதே அதுதான் பிரச்சினைக்குரியது.

முன்னணி ஊடகங்கள் இதுகுறித்து பேச மறுத்தாலும், தனிநபர் பலரும், உச்ச நீதிமன்ற அழுத்தத்தால் வெளியான பட்டியல்களை ஆய்வு செய்து சில ஊடகங்களில் பாஜகவின் தில்லமுல்லு அம்பலமானது. இந்த நாடு எத்தனையோ பிரதமர்களை பார்த்துள்ளது. ஆனால், மோடி போல வசூல் வேட்டையில் ஈடுபட்ட வசூல்ராஜாவை பார்த்தது இல்லை. கரோனாவில் கூட வசூல் வேட்டை நடத்தினார். அதற்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா? பி.எம்.கேர்ஸ் நிதி. அனைவரும் நிதி உதவி செய்யுமாறு கேட்டார். மக்களுக்கு உதவுவதற்காகத்தான் பிரதமர் கேட்கிறார் என்று, பலரும் அள்ளிக் கொடுத்தனர். அந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டால், அது தனியார் அறக்கட்டளை, அந்த விபரம் எல்லாம் சொல்ல முடியாது என்று பதில் வருகிறது.

அடுத்தது உங்களது ஆட்சிக்கு சிஏஜி கொடுத்த சர்டிபிகேட் என்ன? இதைப்பற்றி ஏன் வாயே திறக்கமாட்டேன் என்கிறீர்கள்? இதை வெளியிட்ட தணிக்கைத்துறை அதிகாரிகள் மூன்று பேரை, உடனே பணியிடமாற்றம் செய்த மர்மம் என்ன? அடுத்து ரபேல் ஊழல், காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்துக்கு ரூ.526 கோடிக்கு ஒப்பந்தம் போட்டால், பாஜக ஆட்சியில் ரூ.1620 கோடிக்கு வாங்கினார்கள். இதனால், பயனடைந்தது யார்? என்று காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு பிரதமர் இன்றுவரை பதில் சொல்லவில்லை.

கார்ப்பரேட் முதலாளிகளுக்காக எப்படி அரசை நடத்துகிறீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய போது, பதில் சொல்லாமல் அவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமா அவருடைய எம்.பி. பதவியை பறித்தனர்.

இவ்வளவும் செய்துவிட்டு பிரதமர் மோடி ஊழல் பற்றி பேசலாமா? அதனால்தான் சொன்னேன். உண்மையிலேயே ஊழலுக்கு பல்கலைக்கழகம் கட்டி அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் எனில், மோடியை விட்டு அதற்கு யாருமே கிடையாது. ஏனெனில், ஊழலை சட்டபூர்வமாக்கியவர் மோடிதான்” என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மு.க.ஸ்டாலின்: சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக இந்தியா மாற்றிவிடுவார்கள்..!

சென்னை, பெசன்ட் நகரில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை அறிமுகப்படுத்தி I.N.D.I.A. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, ‘ஊழல் மோடி’ தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது.

உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதீய ஜனதா கட்சியும் நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார்.

தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது.

வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!

வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.

இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.