68 வயது மணமகளுக்கும் , 64 வயது மணமகனுக்கும் காதல் திருமணம்..!

64 வயது மணமகனுக்கும், 68 வயது மணமகளுக்கும் முதியோர் காப்பகத்தில் காதல் திருமணம் நடைபெற்றது. ஆந்திராவின் ராஜமுந்திரியில் சுவர்ணாந்திரா சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ள முதியோர் இல்லம் செயல்படுகிறது. இந்த முதியோர் இல்லத்தில் நாராயணபுரி பகுதியை சேர்ந்த மூர்த்தி 64 வயதான என்பவர் 2 ஆண்டுகளாக தங்கி உள்ளார். இவருக்கு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துவிட்டது.

அதே முதியோர் இல்லத்தில் வசிக்கும் கடப்பா மாவட்டம், கம்முலகுண்டா பகுதியை சேர்ந்த 68 வயதான ராமலட்சுமி, மூர்த்திக்கு உதவிகளை செய்து வந்தார். மருத்துவர்கள் எழுதி கொடுத்த மருந்துகளை நேரம் தவறாமல் கொடுத்தார். இதில் மூர்த்தி ஓரளவுக்கு குணமானார்.

வயதான காலத்தில் துணை அவசியம் என்பதை இருவரும் உணர்ந்தனர். இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழ முடிவு எடுத்தனர். இதுகுறித்து முதியோர் காப்பக நிர்வாகியான ராம்பாபுவிடம் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இருவருக்கும் நெருங்கிய சொந்தபந்தம் இல்லை என்பதால், முதியோர் இல்லத்திலேயே திருமணம் செய்து வைக்க ராம்பாபு சம்மதம் தெரிவித்தார். அதன்பேரில் கடந்த வெள்ளிக்கிழமை மூர்த்தி, ராமலட்சுமி இருவருக்கும் முதியோர் இல்லதிலேயே திருமணம் செய்து வைத்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்: ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு மிகப்பெரிய ஊழல்..!

ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டின் மிகப்பெரிய ஊழல் திட்டம் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்தார். அப்போது, “இது ஒரு போலியான திட்டம் என்று உச்ச நீதிமன்றமும் கூறியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு மிகப்பெரிய மோசடி என்பது நாடு முழுவதில் இருந்தும் வெளிவந்துள்ளது. தற்போது இருக்கக்கூடிய மத்திய அரசு மாறிய பிறகு நடத்தப்படும் விசாரணை மூலம்தான் இந்த திட்டம் எவ்வளவு பெரிய மோசடி என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும்” என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ஹரியானாவில் MBBS செமஸ்டர் தேர்வில் முறைகேடு..! நீட் நுழைவுத் தேர்விலும் முறைகேடா..!?

MBBS செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹரியானாவின் ரோத்தக் நகரில் பண்டிட் பகவத் தயாள் சர்மா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஹரியானா அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியின் MBBS செமஸ்டர் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஒரு மாணவர் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து ரோத்தக் நகர காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரங்களில்,பண்டிட் பகவத் தயாள் சர்மா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சில ஊழியர்கள் MBBS செமஸ்டர் தேர்வில் முறைகேடுகளை செய்துள்ளனர். இதன்படி குறிப்பிட்ட சில மாணவர்கள், அழிந்து போகும் மையை பயன்படுத்தி செமஸ்டர் தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு எழுதிய சில மணி நேரங்களில் அந்த மை அழிந்துவிடும்.

செமஸ்டர் தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் குறிப்பிட்ட ஊழியர் ஒருவரின் வீட்டுக்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த ஊழியரின் வீட்டுக்கு மருத்துவ மாணவர்கள் சென்று, பாடப்புத்தகங்களின் உதவியுடன் தங்களது விடைத்தாளில் சரியான விடைகளை எழுதி உள்ளனர். இவ்வாறு ஒரு பாடத்துக்கு தேர்வு எழுத ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான வீடியோ ஆதாரம் வெளியானதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்த விவகாரம் தொடர்பாக பண்டிட் பகவத் தயாள் சர்மா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ரோஷன் லால், ரோஹித் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தீபக், இந்து, ரித்து ஆகியோரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். நீட் நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த இதர நுழைவுத் தேர்வுகளிலும் இவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

சேவல் சண்டையில் சண்டையே போடாமல் வேடிக்கை பார்த்த சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு..!

சேவல் சண்டையில் சண்டையே போடாமல் கடைசி வரை களத்தில் நின்ற வேடிக்கை பார்த்த சேவல் வெற்றி பெற்றதாக அறிவிப்பு சேவலின் உரிமையாளருக்கு ரூ.1.25 கோடி பரிசாக அளிக்கப்பட்டது. ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கோதாவரி மாவட்டம், என்.டிஆர், கிருஷ்ணா, ஏலூரூ உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் சண்டை மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த போட்டிகளுக்கு நுழைவு கட்டணம் பெற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு இணையாக சேவல் சண்டை நடத்தப்பட்டது.

இந்நிலையில் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த சேவல் சண்டையில் ஒரு வட்டத்தில் ஐந்து சேவல்கள் சண்டைக்கு விடப்பட்டது. இதில் நான்கு சேவல்கள் போட்டியிட்டு சண்டையிட்டது. ஆனால் ஒரு சேவல் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் ஒதுங்கி நின்றது. இதற்கிடையில், மற்ற நான்கு சேவல்களில் முதல் இரண்டு சேவல்கள் சண்டையிட்டு அதன் கால்களில் கட்டப்பட்ட கத்தியில் வெட்டுப்பட்டு இறந்தன.

மேலும் இரண்டு சேவல்கள் சண்டையிட்டு முதலில் ஒன்று சரிந்து விழுந்து இறந்தது. இதில் உயிர் பிழைத்த சேவல், ஆரம்பத்தில் இருந்து ஒதுங்கி நின்ற சேவலுடன் சண்டையிடும் என்று நினைத்த பார்வையாளர்கள் பரபரப்பாக பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால் சில நொடிகளிலேயே அதுவரை நன்றாகச் செயல்பட்டு வந்த நான்காவது சேவலும் சரிந்து விழுந்து இறந்தது. இதனால் சண்டையிடாத சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதுவும் செய்யாமல் பந்தயத்தில் வென்ற சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு கிடைத்தது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஜக்ஜித் சிங் தல்லேவால் ஆதரவாக 111 விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம் தொடக்கம்..!

சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு அலட்சியப் போக்காக இருப்பதைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் 51-வது நாளாக இருந்து வரும் ஜக்ஜித் சிங் தல்லேவாலுக்கு ஆதரவாக 111 விவசாயிகள் அடங்கிய குழு ஒன்று நேற்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது.

பயிர்களுக்கும் சட்டபூர்வ குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால் கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி முதல் பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள கன்னவுரியில், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து மருத்துவ உதவிகளையும் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கு காவல்துறை தடை விதித்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் சம்பு மற்றும் கன்னவுரி எல்லைகளில் SKM மற்றும் கிஷான் மஸ்தூர் மோர்ச்சா தலைமையின் கீழ் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, தல்லேவாலுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றி வரும் விவசாய தலைவர் அபிமன்யு கோஹர், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாததற்காக கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து அபிமன்யு கோஹர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “தல்லேவாலின் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் 51-வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு எதையும் கேட்கத் தயாராக இல்லை. மாறாக, கோரிக்கைகளை ஏற்காமல் பேச்சுவார்த்தையை தொடங்குகிறது. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. அவரது உடல் தண்ணீரைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவர் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் வாந்தியெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் அனைவரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளனர். அவர்களும் தல்லேவாலைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அமைதியான முறையில் சாகும் வரை உண்ணாவிரதம் முடிவெடுத்துள்ளனர்” என தெரிவித்தார்.

புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் வடமாநில மாணவி கூட்டு பலாத்கார முயற்சியா..!?

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழகத்திலும் இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வு இன்னும் தணியவில்லை. அதற்குள் புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் செடி, கொடிகள் அடர்ந்துள்ள பகுதியில் காதலனுடன் தனிமையில் பேசிக்கொண்டு இருந்த வடமாநில மாணவியை ஒரு கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் புதுச்சேரி பொறியியல் கல்லூரி, சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கி முதலாமாண்டு இளநிலை பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இந்த மாணவி இதே கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 11-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை என்பதால், இருவரும் கல்லூரி வளாகத்தில் வேதியியல் பிரிவு கட்டிடத்தின் பின்புறம் செடி, கொடிகள் அடர்ந்துள்ள பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டடு இருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த 3 பேர் கும்பல், அங்கிருந்த ஜோடியிடம் சென்று இங்கு என்ன செய்கிறீர்கள்? எதற்காக வந்தீர்கள் எனக்கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் மாணவனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்த மாணவியை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளனர்.

அந்த மாணவி கும்பலிடம் தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் மாணவியை மீண்டும் துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கி கூட்டு பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க மாணவி கத்தி கூச்சலிட்ட, பயந்து போன அவர்கள் மாணவியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளது. இதில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பி உள்ளார்.

பாதிக்கப்பட்டவர் வடமாநில மாணவி என்பதால் காவல்துறைக்கு செல்ல பயந்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் வெளியே வந்தால் பல்கலைக்கழகத்துக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்பதால் இச்சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

1947-ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்று RSS தலைவர் பேச்சுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!

RSS தலைவர் மோகன் பாகவத்1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை என கூறி இருப்பது, ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல்; இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கமுடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவன்’ அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தியால் டெல்லியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பேசிய ராகுல் காந்தி, “மிகவும் முக்கியமான ஒரு தருணத்தில் நாம் நமது புதிய தலைமையகத்தைத் திறந்து வைத்துள்ளோம். RSS தலைவர் மோகன் பாகவத் நேற்று பேசும்போது, 1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை; அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோது தான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்று கூறி இருந்தார்.

இந்தக் கட்டிடம் சாதாரணமானது அல்ல. இது இந்த நாட்டின் மண்ணில் இருந்து எழுந்தது. இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு. சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும். மோகன் பாகவத் நேற்று பேசும்போது, அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மறைமுகமாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி எப்போதும் உயர் மதிப்பீடுகளைக் காக்க பாடுபட்டு வருகிறது. அத்தகைய மதிப்பீடுகள், இந்தக் கட்டிடத்தில் பிரதிபலிக்கப்படுவதைக் காணலாம்.

நியாயமாக நடக்கும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது என்று நினைக்காதீர்கள். பாஜக மற்றும் RSS என்ற அரசியல் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவர்கள் நம் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளனர். இப்போது நாங்கள் பாஜக மற்றும் RSS ஸை மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்த்துப் போராடுகிறோம்.

இந்த கட்டிடத்தில், திறமைகளின் ஆழத்தை நீங்கள் காண்பீர்கள். இந்தியாவின் ஆன்மாவில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். இங்கே ஒரு வளமான வரலாறு உள்ளது; உண்மையில், நமது அடையாளத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியம் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். காங்கிரஸ் உறுப்பினர்களாகிய நமக்கு, நாம் யார், நமது பாரம்பரியம் என்ன, நமது வரலாறு என்ன, நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதை அறிந்து கொள்வது அவசியம். காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பின் அடித்தளத்தில் உழைத்து இந்த நாட்டின் வெற்றியைக் கட்டியெழுப்பியுள்ளது. இதைத்தான் இந்தக் கட்டிடம் குறிக்கிறது

கட்டிடத்தின் உள்ளே, மகாத்மா காந்தி, சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் எண்ணற்ற தொண்டர்கள், முதலமைச்சர்கள், ஆளுநர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள், வெளியுறவு அமைச்சர்கள் என பலரை நீங்கள் காண முடியும். அவர்கள் அனைவரும் நமது நாட்டின் அரசியலமைப்புக்கு சேவை செய்து மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தியவர்கள்.

இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்துவதில்லை. தேசியக் கொடியையோ அல்லது அரசியலமைப்பையோ நம்புவதில்லை. அவர்கள் இந்தியாவுக்கு மிகவும் மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளனர். இந்தியா ஒரு ரகசிய சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஒரு நபரால் நடத்தப்பட வேண்டும், நமது நாட்டின் குரல்களை நசுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தலித்துகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை மவுனமாக்க அவர்கள் விரும்புகிறார்கள். இதுதான் அவர்களின் நிகழ்ச்சி நிரல். அவர்களை வேறு எந்தக் கட்சியாலும் தடுக்க முடியாது. அவர்களைத் தடுக்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். ஏனென்றால் நாம் ஒரு சித்தாந்தக் கட்சி.

வெளிப்புற சுயத்தில் கவனம் செலுத்தும் மேற்கத்திய உலகத்தைப் போலல்லாமல், உள்முக சுயத்தை புரிந்துகொள்வதை வலியுறுத்தக்கூடியது இந்திய சிந்தனை. நமது மிகப் பெரிய குருமார்களின் புரிதல் அனைத்தும் துல்லியமானது. நீங்கள் யார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், உங்கள் இயல்பு என்ன? என்பனபோன்ற அடிப்படை கேள்விகளைப் பற்றியே பகவத் கீதை, பகவான் சிவன், குருநானக், துறவி கபீர் போன்றவர்கள் பேசுகிறார்கள்.

இந்தியாவில் நடைபெறும் முக்கியப் போராட்டம் இதுதான். இங்கே ஒன்றோடு ஒன்று மோதும் இரண்டு பார்வைகள் உள்ளன. ஒன்று நமது பார்வை. அது அரசியலமைப்பின் பார்வை. மற்றொன்று RSS ஸின் பார்வை. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று ஒரு பார்வை கூறுகிறது. இந்த இந்திரா பவனில், பட்டியலிடப்பட்ட அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த மொழி – தாழ்ந்த மொழி, கலாச்சாரம் அல்லது சமூகம் என்றில்லாமல், இந்த கட்டிடம் இந்த பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது.

மறுபுறம், ஒரு மையப்படுத்தப்பட்ட அறிவு மற்றும் புரிதலின் பார்வை உள்ளது. சுதந்திரப் போராட்டம் குறித்தும் தேசம் குறித்தும் அவர் என்ன நினைக்கிறார் என்பதை நமக்குத் தெரிவிக்கும் துணிச்சல் மோகன் பாகவத்துக்கு இருக்கிறது. நேற்று அவர் கூறியது தேசத்துரோகம். ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டம் மதிப்பற்றது என்றும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் மதிப்பற்றது என்றும் அவர் கூறுவாரேயானால் அது தேசத்துரோகம். வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு பேசியவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார். 1947-ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்று சொல்வது ஒவ்வொரு இந்தியரையும் அவமதிப்பதாகும். இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கமுடியாது” என ராகுல் காந்தி பேசினார்.

‘இந்திரா பவனை’ திறந்து வைத்த சோனியா காந்தி..!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவனை’ அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். புதுடெல்லி எண் 24, அக்பர் சாலையில் இயங்கி வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் 9A, கோட்லா சாலை இன்று திறக்கப்பட்டது. மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் நினைவாக ‘இந்திரா பவன்’ என இந்த தலைமையகத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் இணைந்து ரிப்பன் வெட்டி தலைமையகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். இவ்விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மம்தா பானர்ஜி: இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க தயார்..!?

வாய்ப்பு கிடைத்தால் இண்டியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன். இண்டியா கூட்டணிக்குத் தலைமையேற்கத் தயார் என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் கட்சி திமுக, ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், ஜேஎம்எம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என மாநிலத்தில் ஆளும் கட்சிகள் பல அங்கம் வகிக்க இண்டியா கூட்டணி முன்னிறுத்தி உருவாக்கப்பட்டது .

ஆனால், இண்டியா கூட்டணி தொடங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு கூட்டணி பிரச்சினைகளும் இருந்து வந்த நிலையில் கூட்டணியை ஒன்று சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த பிஹார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் சேர்ந்தார். மேலும் டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட்டது.

மேலும், மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட்டணி விவகாரங்களில் பிடிகொடுக்காமல், மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட்டார். ஆனால், மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இண்டியா கூட்டணி 239 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தற்போது இண்டியா கூட்டணிக்குத் தலையேற்கத் தயார் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதளித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நான் இண்டியா கூட்டணியை உருவாக்கினேன். ஆனால், அவர்களால் [எதிர்க்கட்சித் தலைவர்கள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் இண்டியா கூட்டணிக்குத் தலைமை தாங்கவில்லை.

கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதைப் பார்க்க வேண்டும். அவர்கள் என்னைப் பொருட்படுத்துவதே இல்லை, ஆனால் நான் அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணி வருகிறேன். வாய்ப்பு கிடைத்தால் இண்டியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன். இண்டியா கூட்டணிக்குத் தலைமையேற்கத் தயார். நான் மேற்கு வங்கத்துக்கு வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் மேற்கு வங்கத்தில் இருந்தே கூட்டணியை இயக்க முடியும் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

ராகுல் காந்தி: அதானியை விசாரணை நடத்தினால் நரேந்திர மோடியும் விசாரணைக்கு உள்ளாவார் என்ற பயம்

அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விசாரணை நடத்த மாட்டார். ஏனென்றால் அவர் விசாரணையைத் தொடங்கினால், அவரும் விசாரணைக்கு உள்ளாவார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானி குழுமம் சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாக அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்து வருகிறார். இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதானியும் பிரதமர் மோடியும் ஒன்று தான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி விசாரணை நடத்த மாட்டார். ஏனென்றால் அவர் விசாரணையைத் தொடங்கினால், அவரும் விசாரணைக்கு உள்ளாவார்.

அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இந்த போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பிரதமர் மோடி, அதானிக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜாக்கெட் அணிந்தும் கோஷங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.