ராகுல் காந்தி: அதானியை விசாரணை நடத்தினால் நரேந்திர மோடியும் விசாரணைக்கு உள்ளாவார் என்ற பயம்

அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விசாரணை நடத்த மாட்டார். ஏனென்றால் அவர் விசாரணையைத் தொடங்கினால், அவரும் விசாரணைக்கு உள்ளாவார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானி குழுமம் சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாக அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்து வருகிறார். இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதானியும் பிரதமர் மோடியும் ஒன்று தான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி விசாரணை நடத்த மாட்டார். ஏனென்றால் அவர் விசாரணையைத் தொடங்கினால், அவரும் விசாரணைக்கு உள்ளாவார்.

அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இந்த போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பிரதமர் மோடி, அதானிக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜாக்கெட் அணிந்தும் கோஷங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரா.முத்தரசன்: யோக்கியமான பிரதமராக இருந்தால் அதானியை கைது செய்யட்டும்..!

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி என்பதல்ல பிரச்சனை யோக்கியமான பிரதமராக இருந்தால் அதானியை கைது செய்யட்டும். யார், யாருக்கு லஞ்சம் கொடுத்தனர் என்ற பட்டியலை வாங்கி நடவடிக்கை எடுக்கட்டும் என இரா.முத்தரசன் தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு இரா.முத்தரசன் பதிலளித்தார்.

அப்போது, பாஜக ஆட்சியில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பாதுகாப்பு இல்லை. அதை பாதுகாக்க வேண்டும் என்று தான் இன்று உறுதிமொழி ஏற்கிறோம். இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயக முறையைத் தான் கடைபிடித்துள்ளோம். மற்றொரு முறை ஆயுதம் ஏந்திய முறை இருக்கிறது. அதை நாம் கடைபிடிக்கவில்லை.

இந்நிலையில் பாராளுமன்ற ஜனநாயக முறையை சிதைக்கும் வகையில் தான் பாஜக அரசு செயல்படுகிறது. மகாராஷ்டிரா தேர்தலில் இஸ்லாமிய பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இது எந்த ஜனநாயக முறை? வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை அதுவும் தற்போது பறிக்கப்படுகிறது. இது பேராபத்தை ஏற்படுத்தும் செயலாகும். எனவே தான் இதை பாதுகாக்க வேண்டும்.

அதானி விவகாரத்தில் பாஜக விளக்கெண்ணெய் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. யோக்கியமான பிரதமராக இருந்தால் அதானியை கைது செய்யட்டும். யார், யாருக்கு லஞ்சம் கொடுத்தனர் என்ற பட்டியலை வாங்கி நடவடிக்கை எடுக்கட்டும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி என்பதல்ல பிரச்சனை என இரா.முத்தரசன் தெரிவித்தார்.

சீமான்: அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்கு முறைவாசல் செய்யும் பாஜக..!

மக்களின் வாக்குகளின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்கு முறைவாசல் செய்திடும் பாஜகவின் ஆட்சியதிகாரம் நாட்டைப் பிடித்த பெருங்கேடு!
என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் தனது எக்ஸ் பக்கத்தில்,  பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான கெளதம் அதானி ஒன்றிய அரசின் நிறுவனத்திடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று, அதற்காக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களின் மின்சார வாரியங்களுக்கு ஏறத்தாழ 2,000 கோடி ரூபாய்க்கும் மேலாக இலஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியது அம்பலமாகி, அந்நாட்டு அரசு அதானி உள்ளிட்டோரைக் கைதுசெய்ய உத்தரவிட்டிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கும் பேரவமானமாகும்.

‘மோடியின் பினாமி’ என வர்ணிக்கிற அளவுக்கு கெளதம் அதானிக்கு நிழல்போல எல்லாவுமாக இருக்கிற பிரதமர் நரேந்திரமோடி, நாட்டையே உலுக்கியிருக்கும் இம்மாபெரும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து இப்போதுவரை வாய்திறக்காதிருப்பதேன்? நாட்டின் பெயரையும், புகழையும் சீர்குலைக்கும் வகையில் முறைகேடுசெய்து அமெரிக்க அரசால் கைதுப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அதானியின் மீதும், அவரது குழுமத்தின் மீதும் இன்னும் நடவடிக்கை எடுக்காதிருப்பது எதற்காக? இன்னும் அவரைக் காப்பாற்றவும், கரைசேர்க்கவும்தான் முயற்சிக்கிறதா பாஜக அரசு? இழிநிலை! மக்களின் வாக்குகளின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்கு முறைவாசல் செய்திடும் பாஜகவின் ஆட்சியதிகாரம் நாட்டைப் பிடித்த பெருங்கேடு!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மின்சார வாரியங்களுக்கு அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெற்றிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. 2019 – 20 -ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமானது (SECI) அதானியின் நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒப்பந்தமிட்டிருக்கிறது. அதன்படி, அதானி நிறுவனம் 8 ஜிகா வாட் மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துக்கு வழங்கும். விலை அதிகமாக இருந்ததால் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து மின்விநியோக நிறுவனங்கள் மின்சாரத்தை வாங்குவதில் சிக்கல் நிலவியது.

இந்நிலையில், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யச் சொல்லி ஆந்திரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்களுக்குக்கு 2020-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 2,000 கோடி ரூபாய்வரை இலஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறதெனக் கூறி, அதானி குழுமத்தின் மாபெரும் முறைகேட்டை ஆதாரங்களோடு வெளிப்படுத்தியிருக்கிறது அமெரிக்க அரசு.

இந்த வழக்கு அமெரிக்க நாட்டின் நியூயார்க் கிழக்கு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் தொடுக்கப்பட்டு, கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 2,000 கோடி ரூபாயை இந்தியாவின் பல்வேறு மாநில மின்சார வாரியங்களுக்கு இலஞ்சமாகக் கொடுத்து பெறப்பட்ட ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் முதலீடுகளைப் பெற முயன்றபோது ஒட்டுமொத்தமாகச் சிக்கியிருக்கிறது அதானி குழுமம்.

டிசம்பர் 1, 2021 அன்று இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துடன் 7 ஜிகா வாட் மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது ஆந்திர அரசு. இதற்காக, 1,750 கோடி ரூபாய் அம்மாநில அரசுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசின் குற்றச்சாட்டில் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல, செப்டம்பர் 21, 2021 அன்று 1000 மெகாவாட் மின்சாரத்தைப் பெற இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துடன் தமிழக மின்சார வாரியம் ஒப்பந்தமிட்டிருக்கிறது. இதற்குப் பின்புலத்தில் அதானி குழுமம் தமிழக மின்சார வாரியத்துக்குக் கோடிகளைக் கொட்டியிறைத்திருக்கிறது என்பது அமெரிக்க அரசின் குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

2012- 2016-ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில், முந்தைய அதிமுக ஆட்சியின்போது தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசிய நிறுவனத்திடமிருந்து வாங்கி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (TANGEDCO) அதானி குழுமம் மும்மடங்கு அதிக விலைக்கு விற்று, முறைகேடு செய்து 6,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது குறித்து அறப்போர் இயக்கம் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அதற்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை; இச்சமயத்தில், திமுகவின் ஆட்சி நிர்வாகத்துக்கு அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்து, இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து (SECI) அதிக விலைக்கு மின்சாரம் வாங்கச் செய்திருக்கும் செய்தி வெளியாகியிருப்பது திராவிடக்கட்சிகளின் கேடுகெட்ட ஆட்சி நிர்வாகத்துக்கான சமகாலச் சாட்சிகளாகும்.

திராவிட மாடல் ஆட்சியின் இலட்சணம் அமெரிக்காவரை சென்று தமிழ்நாட்டின் மானம் சந்தி சிரித்து நிற்கிறது. இருந்தும், இதுவரை தமிழ்நாட்டின் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வாய்திறக்காது கள்ளமௌனம் சாதிக்கிறார். எல்லாவற்றுக்கும் அறிக்கைப்போர் தொடுத்து, லாவணிக்கச்சேரி நடத்துகிற திமுக, இவ்விவகாரத்தில் அடக்கி வாசிப்பது ஏன்? என்பது புரியவில்லை. அதானி குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் இடவில்லை என்பதோடு நிறுத்திக் கொண்டுவிட்டாரே மின்சாரத்துறை அமைச்சர் தம்பி செந்தில்பாலாஜி, அதானி குழுமத்தோடு திமுக அரசு ஒப்பந்தம் இட்டதாக யாரும் குற்றஞ்சாட்டவில்லையே! அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்துதான், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து தமிழக மின்சார வாரியம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தமிட்டது என்பதுதானே குற்றச்சாட்டு.

அதுகுறித்து திமுக அரசின் நிலைப்பாடென்ன? என்ன சொல்லப்போகிறார் தம்பி செந்தில் பாலாஜி? அதானி தமிழக மின்சார வாரியத்துக்கு இலஞ்சம் கொடுக்கவில்லை; அப்பழுக்கற்ற அதானி மீது அமெரிக்க அரசு அநியாயமாகக் குற்றஞ்சுமத்துகிறதென்றா? யார் இலஞ்சம் வாங்கியது? அதிகாரிகளா? அமைச்சரா? இல்லை! முதல்வரா? அதிகாரிகள்தானென்றால், அமைச்சருக்குத் தெரியாது அதிகாரிகளுக்கு அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்துவிட முடியுமா? அரசுப்போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்த அடித்தட்டு மக்களிடமே இலஞ்சம் வாங்கிக் கைகளையும், பைகளையும் நிரப்பிய வித்தகரான தம்பி செந்தில்பாலாஜி, அதானி குழுமத்தையா விட்டுவைப்பார்? ஐயா கருணாநிதி கூறிய, தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா எனும் முதுமொழி நினைவுக்கு வருகிறதில்லையா?

ஏற்கனவே, 1.6 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேலான கடனில் தமிழக மின்சார வாரியம் சிக்கித் தவிக்கும் சூழலில், அச்சுமையை மக்களின் தலையில் மின்கட்டண உயர்வாக ஏற்றி வரும் திமுக அரசு, இனியென்ன செய்யப் போகிறது? அதானி குழுமத்திடம் பல கோடிகளை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி ஏழைகளின் வயிற்றிலடிப்பதுதான் சமூக நீதி அரசா? அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதியில் செய்திட்ட 6,000 கோடி ரூபாய் ஊழல் மீது இன்றுவரை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க மறுப்பதுதான் திராவிட மாடலா?

கடந்த சூலை 10 அன்று தமிழ்நாட்டுக்கு வந்த கெளதம் அதானி, முதல்வர் ஸ்டாலினை ரகசியமாகச் சந்தித்துச் செல்ல வேண்டிய அவசியமென்ன? சந்திப்பையே வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்னப் பேசி முடிக்கப்பட்டது? முதல்வர் ஸ்டாலின் கெளதம் அதானியைச் சந்திப்பதும், கெளதம் அதானியின் மகன் கரன் அதானி துணை முதல்வரான தம்பி உதயநிதியின் பதவியேற்புக்கு வாழ்த்துச் சொல்வதும் எதன் வெளிப்பாடு? திமுக அரசுக்கும், கெளதம் அதானிக்கும் இடையே என்ன ரகசிய உறவு? அதானி குழுமத்தின் நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து திமுகவின் ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கிறது திமுக அரசு. இத்தோடு, மோசடிப் பின்புலம் கொண்ட அதானி குழுமத்தை 42,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர் மாநாட்டின் வாயிலாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. அதானி மீது பாசத்தைப் பொழிவதிலும், அவரைக் காப்பாற்றுவதிலும் பாஜகவோடு திமுக ஏன் போட்டிபோடுகிறது? இதுதான் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கான ஆட்சியா? இதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கான அதிகாரமா? வெட்கக்கேடு! பேரவலம்!

ஆகவே, நாட்டின் மானத்தைக் கப்பலேற்றிய கெளதம் அதானி மீதும், அவரது குழுமத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து, அவரைக் கைதுசெய்யவும், அவரது குழுமத்துடான அரசின் ஒப்பந்தங்களை ரத்து செய்து, அக்குழுமத்தினை மொத்தமாகக் கறுப்புப்பட்டியலில் வைக்கவுமான செயல்பாடுகளை மேற்கொள்ள மறுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டுக்கே செய்திடும் பச்சைத்துரோகமாகும்.

இத்தோடு, பாஜக அரசை எதிர்ப்பதாக வெளிவேடமிட்டுக் கொண்டே, அவர்களோடு கொல்லைப்புற வழியாக உறவாடி, அதானிக்கு வாசல்திறந்துவிடும் திமுக அரசின் நயவஞ்சகப்போக்கு தமிழர்களது நலனை அடகு வைத்திடும் கங்காணித்தனத்தின் உச்சம். மக்களாட்சிக்கு எதிரான இச்செயல்பாடுகளுக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பதிலடி: நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தை படிக்காததால் அது வெற்று புத்தகமாக தெரிகிறது..!

அரசியலமைப்பு சட்டத்தை படிக்காததால் அது பிரதமர் நரேந்திர மோடிக்கு வெற்று புத்தகமாக தெரிகிறது என ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் அரசியல் சாசனத்தின் சிறிய அளவிலான புத்தகத்தைக் காட்டி, அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறார்.

ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகத்தின் உள்ளே வெற்றுத் தாள்களே உள்ளதாகவும், போலியான புத்தகத்தைக் காட்டி அவர் பிரச்சாரம் செய்வதாகவும், இதன் மூலம் அவர் நாட்டின் அரசியல் சாசனத்தை அவமதித்துவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோன்ற ஒரு புத்தகத்தை ஒருவர் வாங்கிப் பார்த்தபோது அதன் உள்ளே வெற்றுத்தாள்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அவர் தனது உரையில், “பொதுக்கூட்டங்களில் நான் காட்டும் அரசியல் சாசன புத்தகத்தில் வெற்றுப் பக்கங்கள் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். நரேந்திர மோடிக்கு அரசியல் சாசனம் காலியாக உள்ளது. ஏனென்றால் அவர் அதைப் படிக்கவில்லை.

அதேபோல், நான் காட்டும் புத்தகத்தின் அட்டை சிவப்பு நிறமாக இருப்பதாகக் கூறி அதிலும் அரசியல் செய்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், அதன் நிறம் எங்களுக்கு முக்கியமில்லை. ஆனால் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். அதைப் பாதுகாக்க நாங்கள் எங்கள் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்.

இந்த அரசியலமைப்பு வெற்று இல்லை. இது சுதந்திரப் போராட்ட தலைவர்களான பிர்சா முண்டா, புத்தர், காந்தி, பூலே ஆகியோரின் சிந்தனைகளைக் கொண்டுள்ளது. இந்த அரசியலமைப்பில் இந்தியாவின் ஆன்மா, இந்தியாவின் அறிவு உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை வெறுமையானது என கூறும் நரேந்திர மோடி, அம்பேத்கர், மகாத்மாகாந்தி, பிர்சா முண்டா, புத்தர்,  பூலே ஆகியோரை அவமதிக்கிறார்  என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

மல்லிகார்ஜுன கார்கே: நரேந்திர மோடியை தொடக்கப் பள்ளிக்குதான் அனுப்ப வேண்டும்..!

இந்திய அரசியலமைப்பின் சிவப்பு புத்தகத்தை நகர்புற நக்சலிசத்துடன் இணைத்து பேசியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்காக மகா விகாஸ் அகாதியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டார். பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலளித்தார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மக்களைப் பிரிப்பதற்கானது இல்லை. இதன் மூலம் மக்கள் அதிக நன்மைகளைப் பெற முடியும்.

நரேந்திர மோடி இந்தச் சிவப்பு புத்தகத்தை நகர்புற நக்சல் புத்தகம், மார்க்சிஸ்ட் இலக்கியத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிடுகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு இதே போன்ற புத்தகம் ஒன்றை அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்க்கு நரேந்திர மோடி வழங்கினார். அதில் வெற்றுப் பக்கங்கள் இருப்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.

அந்தச் சிவப்பு புத்தகம் குறிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது ஒட்டுமொத்த அரசியலமைப்பு இல்லை. பாஜகவும், பிரதமரும் சித்தரிப்பது போல இது வெற்றுக் காகிதம் இல்லை. அவரை மீண்டும் ஒரு தொடக்கப் பள்ளியில் சேர்க்க வேண்டியது அவசியம். நாட்டைப் பிரித்து வைத்தால்தான் காங்கிரஸ் பலமடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். இதற்கு என்ன அர்த்தம்? இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தங்களின் உயிரை தியாகம் செய்துள்ளனர். இதுபோன்ற முழக்கங்கள் யோகி இடமிருந்து வருகின்றது.

பிரதமர் நரேந்திர மோடியோ நீங்கள் தனித்திருந்தால் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று கூறுகிறார். இதில் எந்த கோஷம் வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஆனால், நமக்கு சுதந்திரத்தை வாங்கித் தந்தவரைக் கொன்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

நரேந்திர மோடி விமர்சனம்: சக்கரமும் பிரேக்கும் இல்லாத வாகனத்தைப் போன்றது மகாராஷ்டிர எதிர்க்கட்சி கூட்டணி..!

சக்கரமும் பிரேக்கும் இல்லாத வாகனத்தைப் போன்றது மகா விகாஸ் அகாதி கூட்டணி என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

இந்நிலையில், மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு துலேயில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது, “மகாராஷ்டிராவிடம் நான் எதை கேட்டபோதும், மகாராஷ்டிரா மக்கள் எனக்கு தாராளமாக தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கிறார்கள். 2014 சட்டமன்றத் தேர்தலின் போது இந்த துலே நகருக்கு வந்து, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைத்தேன். மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகால அரசியல் சுழற்சியை முறியடித்து பாஜகவை வரலாறு காணாத வெற்றிக்கு அழைத்துச் சென்றீர்கள்.

இன்று நான் மீண்டும் இங்கு துலே வந்துள்ளேன். மகாராஷ்டிராவில் துலேயில் இருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். இந்த கூட்டம், இந்த உற்சாகம் உண்மையில் அதிக நம்பிக்கையை அளிக்கிறது. பாஜக அங்கம் வகிக்குமு் மஹாயுதி கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளருக்கும் உங்கள் ஆசிர்வாதம் தேவை. கடந்த 2.5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் வளர்ச்சி அடைந்துள்ள வேகத்தை நிறுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம். மகாராஷ்டிராவுக்குத் தேவையான நல்லாட்சியை மகாயுதி அரசால் மட்டுமே வழங்க முடியும்.

மற்றொரு புறம் மகா விகாஸ் அகாதி கூட்டணி உள்ளது. அந்த வாகனத்தில் சக்கரங்களும் இல்லை, பிரேக்குகளும் இல்லை. ஓட்டுநர் இருக்கையில் உட்காரக்கூட சண்டை. அரசியலுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென்று இலக்கு இருக்கும். எங்களைப் போன்றவர்கள் பொதுமக்களை கடவுளின் வடிவமாகக் கருதி பொதுமக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள்.

அதே சமயம் சிலரது அரசியலின் அடிப்படையே ‘மக்களை கொள்ளையடிப்பது’ தான். மக்களை கொள்ளையடிக்கும் எண்ணம் கொண்ட மகா விகாஸ் அகாதி போன்றவர்கள் ஆட்சிக்கு வந்ததும், வளர்ச்சியை நிறுத்திவிட்டு ஒவ்வொரு திட்டத்திலும் ஊழலில் ஈடுபடுகிறார்கள். மகா விகாஸ் அகாதி கூட்டணியின் 2.5 வருட மோசடி அரசாங்கத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவர்கள் முதலில் அரசைக் கொள்ளையடித்துவிட்டு, பிறகு மகாராஷ்டிரா மக்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2.5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா, தனது பெருமையையும் வளர்ச்சியின் நம்பிக்கையையும் மீட்டெடுத்துள்ளது. வளர்ந்த மகாராஷ்டிரா மற்றும் வளர்ந்த இந்தியாவிற்கு, நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் வாழ்க்கையை எளிதாக்குவது மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது மிகவும் முக்கியம்.

பெண்கள் முன்னேறினால், ஒட்டுமொத்த சமூகமும் வேகமாக முன்னேறும். எனவே, கடந்த 10 ஆண்டுகளில் பெண்களை மையமாக வைத்து மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்க எங்கள் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை காங்கிரசாலும், அதன் கூட்டணியாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ. 1,500, ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர், ஓபிசி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதி மாணவிகளுக்கான உயர்கல்விக் கடன் தள்ளுபடி ஆகியவற்றை வழங்கும் மஜ்ஹி லட்கி பஹின் திட்டம் (Majhi Ladki Bahin Yojana) பற்றி எவ்வளவு விவாதம் நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

இந்த திட்டத்தை நிறுத்த காங்கிரஸ் சதி செய்கிறது. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டத்தை முதலில் நிறுத்த முடிவு செய்துள்ளனர். எனவே, மகாராஷ்டிராவின் ஒவ்வொரு பெண்ணும் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெண் சக்தி வலுப்பெறுவதை இவர்களால் ஏற்க முடியவில்லை.

மராத்தி மொழிக்கு நமது அரசு உயர் அந்தஸ்தை வழங்கியதில் பெருமை கொள்கிறேன். மராத்தி உயர்தர மொழி அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். மகாராஷ்டிராவிலும் மத்தியிலும் காங்கிரஸ் கட்சி ஒரே நேரத்தில் ஆட்சி அமைத்தது. ஆனால், மராத்தி ஒரு உயர்தர மொழி அந்தஸ்தைப் பெற வேண்டிய அவசியம் இருப்பதாக அவர்கள் உணரவில்லை. மராத்தி மொழிக்கு மரியாதை வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் எப்போதும் புறக்கணித்தே வந்துள்ளனர். மகாராஷ்டிரா என்ற பெயரில் அரசியல் செய்யும் இவர்களின் உண்மை முகம் இதுதான்.

பாஜக எப்போதும் ‘அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த தீர்மானத்தில் நமது பழங்குடி சமூகமும் முக்கிய அங்கம் வகிக்கிறது. நாட்டின் சுதந்திரம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய சமுதாயம் இது.

ஆனால் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பழங்குடியினரின் பெருமை மற்றும் பழங்குடியினரின் சுயமரியாதைக்கு ஒருபோதும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு வந்தபோது, ​​பழங்குடியினருக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அப்போதுதான் முதன்முறையாக இந்த சமுதாயத்தின் நலன்களும் எதிர்பார்ப்புகளும் முக்கியத்துவம் பெற்றன. பிர்சா முண்டா பிறந்த நாளை நமது அரசாங்கம் ‘பழங்குடியினரின் பெருமை தினமாக’ கொண்டாடத் தொடங்கியுள்ளது. பழங்குடி பாரம்பரியத்திற்கு அங்கீகாரம் அளிப்பதே இதன் நோக்கம்.

ஒரு சாதியை இன்னொரு சாதியை எதிர்த்துப் போராட வைக்கும் ஆபத்தான ஆட்டத்தை காங்கிரஸ் ஆடுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் முன்னேறுவதை காங்கிரஸால் ஏற்க முடியாது என்பதால் இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. இதுதான் காங்கிரஸின் வரலாறு. சுதந்திரத்தின் போது, ​​காங்கிரஸின் காலத்தில், பாபா சாகேப் அம்பேத்கர், சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தார்.

ஆனால், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்பதில் நேரு உறுதியாக இருந்தார். மிகுந்த சிரமத்துடன் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அம்பேத்கர் இடஒதுக்கீடு வழங்கினார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி வந்த பிறகும் காங்கிரசின் சிந்தனை மற்றும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவில்லை. ராஜீவ் காந்தியும் ஓபிசி இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்த்தார். SC, ST மற்றும் OBC சமூகங்கள் அதிகாரம் பெற்றால், அவர்களின் அரசியல் கடையின் ஷட்டர் இழுத்து மூடப்படும் என்பது அவர்களுக்கு தெரியும்.

ராஜீவ் காந்திக்குப் பிறகு, இப்போது இந்தக் குடும்பத்தின் நான்காம் தலைமுறை பட்டத்து இளவரசரும் அதே ஆபத்தான மனப்பான்மையுடன் செயல்படுகிறார். SC/ST சமுதாயத்தின் ஒற்றுமையை உடைப்பதும், OBC சமுதாயத்தின் ஒற்றுமையை சிதைப்பதும்தான் காங்கிரஸின் ஒரே நோக்கம். SC சமூகம் பல்வேறு சாதிகளாக சிதறி இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. இதனால் SC சமூகத்தின் கூட்டு சக்தி பலவீனமடைகிறது.

OBC மற்றும் ST சமூகங்களை பல்வேறு சாதிகளாக பிரிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. அதனால்தான் சொல்கிறேன் – உங்களிடம் ஒற்றுமை இருப்பதால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். நாம் ஒற்றுமையாக இருந்து காங்கிரஸின் ஆபத்தான விளையாட்டை முறியடித்து வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டும். காங்கிரஸின் தேச விரோத உணர்வுதான் அதன் வேரில் உள்ளது. நாட்டை உடைக்கும் சதிகளில் காங்கிரஸ் எப்போதும் அங்கம் வகிக்கிறது” என நரேந்திர மோடி உரையாற்றினார்.

ஜெகத்குரு பரமஹன்ஸ்: மோடியின் அரசியல் வாரிசு யோகி ஆதித்யநாத்..! அடுத்து யோகி ஆதித்யநாத் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது..!

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் நரேந்திர மோடியின் வாரிசாக வளர்ந்திருப்பதாக என அயோத்தி மடத்தின் தலைவர் ஜெகத்குரு பரமஹன்ஸ் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் முடிந்த தீபாவளியில் அயோத்தியின் தீப உற்சவத்தில் இரண்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு அயோத்தி உள்ளடக்கிய பைஸாபாத் மக்களவை தொகுதி எம்பியான அவ்தேஷ் பிரஸாத் அழைக்கப்படவில்லை.

உத்தரப் பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியைச் சேர்ந்த அவ்தேஷ் இதற்காக, பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்யுடன் அயோத்தியின் துறவிகளையும் மடங்களின் தலைவர்களையும் விமர்சித்து இருந்தார்.

இதை கண்டிக்கும் வகையில் அயோத்யாவின் ராம் ஜானகி கோயிலின் தபஸ்வீ மடத்தின் தலைவர் ஜெகத்குரு பரமஹன்ஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், சமாஜ்வாதி எம்.பி.,யான அவ்தேஷை கண்டித்ததுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தான் நாட்டின் அடுத்த பிரதமர் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெகத்குரு பரமஹ்ன்ஸ் தனது அறிக்கையில், அவ்தேஷ் பிரஸாத்தின் கருத்துக்களை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இவர் ஓர் ‘அழுகிய மாம்பழம்’ போல் இருப்பவர். அயோத்தியின் களங்கமாக இருப்பவருக்கு துறவிகளை விமர்சிக்கத் தகுதி இல்லை. உத்தரப் பிரதேசத்தின் திறமைப்படைத்த சிறந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து பேசவும் அவருக்கு அருகதை இல்லை.

பிரதமர் மோடியின் அரசியல் வாரிசாக வளர்ந்திருப்பவர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். பிரதமர் மோடிக்கு பின் அப்பதவியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமர்த்தப்பட வேண்டும். இந்த கோரிக்கை நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் இடையேயும் கிளம்பி வருகிறது. எனவே, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம் நாட்டின் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என ஜெகத்குரு பரமஹன்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி: பொய்யான வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து பதவியின் கண்ணியத்தை பிரதமர் அழித்துள்ளார்..!

140 கோடி இந்தியர்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து நாட்டின் மிக உயரிய மற்றும் மரியாதைக்குரிய பதவியின் கண்ணியத்தை பிரதமர் அழித்துள்ளார் என பிரியங்கா காந்தி கடுமையாக சாடி உள்ளது. நேற்றைய முன்தினம் “ஒருபோதும் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ் தற்போது மக்கள் முன் மிக மோசமாக அம்பலப்பட்டு நிற்கிறது” என காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார்.

நரேந்திர மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அதில்,“உண்மையே கடவுள்” என்று மகாத்மா காந்தி சொல்வார். உபநிடதத்தில் எழுதப்பட்ட “சத்யமேவ ஜெயதே” என்பது நமது தேசிய முழக்கம். உண்மையை நிலைநாட்டும் இந்த பொன்மொழிகள் இந்திய சுதந்திர இயக்கம், இந்தியாவின் மறுசீரமைப்பு மற்றும் பொது வாழ்க்கையின் இலட்சியங்களாக மாறியது. உண்மையே பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் நாட்டில், உயர்ந்த பதவியில் அமர்ந்திருப்பவர் அசத்தியத்தை நாடக்கூடாது.

இந்திய தேசிய காங்கிரசுக்கு எதிராக பிரதமர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது. காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அடுத்த தேர்தலுக்காக காத்திருக்காமல் ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சலப் பிரதேசம் என எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நாள்தோறும் உத்தரவாதங்கள் மூலம் பொதுப் பணம் மக்களின் பாக்கெட்டுகளில் போடப்படுகிறது.

நாட்டு மக்கள் முன் தனது வார்த்தைகளுக்கு இனி எந்த மதிப்பும் இல்லை என்பதை பிரதமர் புரிந்து கொண்டுள்ளார். சமீபத்தில், ‘100 நாள் திட்டம்’, ‘2047க்கான சாலை வரைபடத்திற்கு, 20 லட்சம் பேரின் கருத்துகளை எடுத்து’, ‘ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலை வாய்ப்பு’, ‘100 ஸ்மார்ட் சிட்டி’, ‘கறுப்புப் பணத்தை மீட்பது’, ‘பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைத்தல்’ , ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது’, ‘டாலருக்கு இணையாக ரூபாயை கொண்டு வருவோம்’, ‘நல்ல நாட்களை கொண்டு வருவோம்’… இப்படிப்பட்ட வாக்குறுதிகள் பொய் என நிரூபிக்கப்பட்டு, தற்போது நாட்டு மக்களுக்கு இதுபோன்ற வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லை. .

140 கோடி இந்தியர்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து நாட்டின் மிக உயரிய மற்றும் மரியாதைக்குரிய பதவியின் கண்ணியத்தை பிரதமர் அழித்துள்ளார். காங்கிரஸைப் பற்றி கவலைப்படாமல், உண்மையைக் கடைப்பிடித்து தனது பதவியின் கண்ணியத்தை மீட்டெடுக்க அவர் பணியாற்ற வேண்டும்.

அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுரை: நரேந்திர மோடி முதலில் படியுங்கள்..! அப்புறம் நாடு முழுவதும் அமல்படுத்துங்கள்…!

டெல்லி மாதிரியை படித்து, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு பதிலாக டெல்லி மாதிரியை நாடு முழுவதும் அமல்படுத்துங்கள் என ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுரை கூறியுள்ளார். நேற்று நரேந்திர மோடி டெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில், “டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.

உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் இணையவில்லை. அரசியல் காரணங்களுக்காக அம்மாநில ஆளும் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன. அரசியல் காரணங்களுக்காக தங்கள் மாநிலத்தின் சொந்த மூத்த குடிமக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுவது மனித நேயத்துக்கு எதிரானது.” என நரேந்திர மோடி குற்றம் சாட்டி இருந்தார்.

நரேந்திர மோடி இந்த குற்றச்சாட்டுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது எஸ்க் பக்கத்தில், மதிப்பிற்குரிய பிரதமரே, மக்களின் சுகாதார பிரச்சினையில் தவறாக பேசுவது சரியில்லை. இந்த விஷயத்தில் அரசியல் செய்வதும் சரியில்லை. டெல்லி அரசின் மருத்துவத்திட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள ஒவ்வொருவரும் முழு சிகிச்சையையும், அது எவ்வளவு செலவானாலும் அதனை முற்றிலும் இலவசமாக பெறுகிறார்கள்.

ஐந்து ரூபாய் மாத்திரை முதல் ஒரு கோடி ரூபாய் சிகிச்சை வரை டெல்லி அரசு அதன் ஒவ்வொரு குடிமக்களுக்கும் இலவசமாக வழங்குகிறது. நீங்கள் சொன்னால் இந்த திட்டத்தின் கீழ் பலனடைந்த லட்சம் பயனாளிகளின் பட்டியலை உங்களுக்கு நான் அனுப்பி வைக்கிறேன். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினால் மக்கள் பலனடைந்துள்ளார்களா? ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிஏஜி பல முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளது.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் மாநிலங்களில், இந்தநாள் வரை ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பலனடைந்தவர்கள் ஒருவரைக் கூட நான் சந்திக்கவில்லை. டெல்லி மாதிரியை படித்து, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு பதிலாக டெல்லி மாதிரியை நாடு முழுவதும் அமல்படுத்துங்கள் என்று நான் உங்களை வேண்டுகிறேன். இதனால் களத்தில் மக்கள் பலனடைவார்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் எஸ்க் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நரேந்திர மோடி: டெல்லி மற்றும் மேற்கு வங்க மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்..!

“மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் ஏற்க மறுத்து வருவதால் இத்திட்டத்தின் பயன்களை அம்மாநில மக்கள் பெற முடியாத நிலை உள்ளது. இதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் சுமார் ரூ.12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் , “டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் இணையவில்லை. அரசியல் காரணங்களுக்காக அம்மாநில ஆளும் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

அரசியல் காரணங்களுக்காக தங்கள் மாநிலத்தின் சொந்த மூத்த குடிமக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுவது மனித நேயத்துக்கு எதிரானது. நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்னால் சேவை செய்ய முடிகிறது. ஆனால், டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் சுவர்கள் காரணமாக உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை” என நரேந்திர மோடி தெரிவித்தார்.