தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு நாளை முதல் விடப்படுகிறது. இந்த அரையாண்டு விடுமுறை காலங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிக் கல்வி இயக்குனர் அதிரடியாக உத்திரப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைய உள்ளன. பொதுவாக தேர்வுகள் முடிந்த உடனே அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த கல்வியாண்டில், பருவமழை மற்றும் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால் பாடத்திட்டம் மற்றும் வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அரையாண்டு விடுமுறையை குறைத்து, பள்ளிகளை விரைவாகத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியானது. குறிப்பாக, ஜனவரி 2-ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தி மாணவர்களிடையே ஏமாற்றத்தையும் பெற்றோர்களிடையே கவலையையும் ஏற்படுத்தியது.
இந்த சூழலில்தான் ஏற்கனவே பள்ளி நாட்காட்டியில் நிர்ணயிக்கப்பட்டு இருந்த விடுமுறை அட்டவணைப்படியே விடுமுறை தொடரும் என பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்த பிறகு, ஜனவரி 5-ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். வழக்கமாக அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அதாவது, மூன்று நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரையாண்டு விடுமுறை காலங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிக் கல்வி இயக்குனர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,” அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 24-12-2025 முதல் 4-01-2026 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5-01-2026 திங்கட் கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி தலைமையாசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிக் கல்வி இயக்குனர் அதிரடியாக உத்திரப்பட்டுள்ளார்.