சோனியா காந்திக்கு தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். அதேபோல் ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதே கனவு. இந்த இரு கனவும் பலிக்காது. ஒருநாளும் உதயநிதி ஸ்டாலினால் தமிழக முதல்வராக வர முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை பிரதான அரசியல்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக தொடங்கியுள்ளது.
மேலும் தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் அடுத்தடுத்து இருமுறை ஆட்சி அமைக்க முடியாமல் இருந்ததை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடைத்து அதிமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்தார் . அதோபோல திமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற குறையை போக்க மு.க.ஸ்டாலின், தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். மறுபுறம், அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தன் மீதான தொடர் தோல்வி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் சில அமைப்புகள் 2019 தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி உருவான நிலையில் அதில் இருந்த கட்சிகள் தற்போது வரை தொடர்ந்து பக்கபலமாக இருக்கிறது. ஆனால், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைந்திருக்கும் நிலையில், பாஜகவோடு கடந்த காலங்களில் கூட்டணி அமைத்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, மக்கள் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் சேரலாம் என கூறப்படுகிறது. மேலும் பாமகவும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கியுள்ளார். மறுபுறம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில், இரண்டு பிரதான கட்சிகளுடன் 2026 தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது.
மறுபுறம் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை அதிமுக மற்றும் பாஜக உடைக்கும் வழிகளில் முயற்சி செய்த போதிலும் அவர்களின் பாச்சா திமுக கூட்டணியில் இருபவர்களிடன் பலிக்கவில்லை. மேலும் திருமாவளவன் அவர்களுக்கு தெரியவில்லை என்று பல இடங்களில் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார். இதனால் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், பாஜக இம்முறை தென் மாவட்டங்களில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலியில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு அமித்ஷா முன்னிலையில் நடைபெற்றது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் அமித்ஷா பேசுகையில், தமிழ்நாட்டில் நடக்கவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும். பாஜக – அதிமுக கூட்டணி வெறும் அரசியல் கூட்டணி அல்ல. இந்த கூட்டணி தமிழக மக்களின் நிலையை மேம்படுத்தும். இந்த நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் ஆட்சி இங்கு நடக்கும் திமுகவின் ஆட்சிதான்.
மணல் திருட்டு, டாஸ்மாக் ஊழல், போக்குவரத்துத் துறை ஊழல், இலவச வேட்டி சேலையில் ஊழல் என்று எண்ணற்ற ஊழல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அமைச்சர்களாக இருந்த பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பல மாதங்களாக சிறையில் இருந்துள்ளனர். அவர்கள் அமைச்சர்களாகவும் இருக்க வேண்டுமா? 130-வது சட்டத்திருத்தத்தை கறுப்பு சட்டம் என்கிறார் ஸ்டாலின்.
அதனை சொல்ல அவருக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனென்றால் ஸ்டாலின் கறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர். அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை அறிவிக்க வேண்டும். இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு ஒரே லட்சியம் தான்.
சோனியா காந்திக்கு தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். அதேபோல் ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதே கனவு. இந்த இரு கனவும் பலிக்காது. ஒருநாளும் உதயநிதி ஸ்டாலினால் தமிழக முதல்வராக வர முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் அமித்ஷா பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 18 சதவிகித வாக்குகளையும், அதிமுக கூட்டணி 21 சதவிகித வாக்குகளையும் பெற்றது. இதன் மூலமாக சட்டசபைத் தேர்தலில் எளிதாக அதிமுக – பாஜக கூட்டணி 39 சதவிகித வாக்குகளைப் பெற்றுவிடும். இந்த வாக்குகளை இணைத்தாலே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்துவிடும். தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்தார்.