பள்ளி விடுதியில் 3, 4 மற்றும் 5 -ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 8 மாணவர்கள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது கண்களில் பசையைப் பூசிப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் சாலகுடாவில் உள்ள சேவாஷ்ரம் பள்ளி விடுதியில் 3, 4 மற்றும் 5 -ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 8 மாணவர்கள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது வகுப்பு தோழர்கள் சிலர் அவர்களின் கண்களில் ஃபெவிகுவிக்(Feviquick) பசையைப் பூசினர். இதனால், சிறுவர்கள் வலி மற்றும் எரிச்சலுடன் விழித்து எழுந்தனர்.
ஆனால் அவர்களின் கண் இமைகள் மூடப்பட்டதால், சிறுவர்களின் அலறல் விடுதி அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் சிறப்பு சிகிச்சைக்காக புல்பானியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். சிறுவர்கள் கண்களை மூடிய நிலையில், சிலர் அழுதுகொண்டே இருக்கும்போது கண் இமைகளை பிரிக்க மருத்துவர்கள் கவனமாக முயற்சி மேற்கொண்டனர்.

மேலும் பசை சிறுவர்களின் கண்களில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், ஆனால் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்ததால் சிறுவர்களுக்கு நிரந்தர பார்வை இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ஒரு மாணவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்னமும் 7 பேர் சிறுவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோரஞ்சன் சாஹுவை அலட்சியப் போக்கே காரணம் என கூறி தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுமட்டுமின்றி இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய உயர் மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி ஒருவர் மருத்துவமனைக்குச் சென்று மாணவர்களைப் பார்வையிட்டார். இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.