கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் கபினி அணை உடையும் அபாயத்தில் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்குப் பருவமழை கடந்த 2 மாதமாக வழக்கமான அளவு பெய்யவில்லை. ஆகையால் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் சரியான . மழை பெய்யாத காரணத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய கர்நாடகாவிலுள்ள 4 அணைகளுக்கும் நீர்வரத்து இன்றி நீர்மட்டம் குறைவாக இருந்தது.
இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. தமிழக அரசு ஜூலை 28 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முறையிட்டதை அடுத்து, 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. ஆனால் தண்ணீர் திறக்க கர்நாடக மறுப்பு தெரிவித்தது. காவிரி பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் – கர்நாடகா இடையே மோதல் முற்றி வந்தது.
இந்நிலையில், ஜூலை 31-ந் தேதி முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, வயநாட்டில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை கொட்டியதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் கபினி அணையின் வேகமாக நிரம்ப தொடங்கியதன் விளைவு கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று பிற்பகல் முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. மேலும் நேற்று மாலை 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இரவில் 25,000 கன அடியாக மேலும் அதிகரிக்கப்பட்டது. அதன்பின்னர் மழை நின்றதால், நீர்திறப்பு சுமார் 17,000 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையின் நீர்மட்டம் 95 அடியை கடந்துள்ளது. ஹேமாவதி அணை நிரம்பிய நிலையில் அணையில் இருந்து 11,884 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஹாரங்கி அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. கபினி அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து கொண்டு வருகிறது.
வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் கபினி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று மதியம் 12 மணி அளவில் அணைக்கு வரும் 23 ஆயிரம் கன அடி உபரி தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வந்தது. தற்போது விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1,768 கன அடி நீர் காவிரியிலும், கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் காவிரி ஆற்றில் சீறி பாய்ந்தபடி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு அல்லது நாளை காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை இந்த நீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.