புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள தீத்தான்விடுதி கிராம நிர்வாக அலுவலர் பட்டா பெயர் மாறுதலுக்கு முன்பணமாக ரூ. 4000 லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நாட்டில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருக்கும் நிலையில், வருவாய்துறை அலுவலங்களில் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. நிலத்தை அளக்க வரும் சில நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர்கள், இடைத்தரர்கள், நிலத்தை அளந்து கொடுத்து பத்திரம் வாங்க கணிசமான பணம் கையூட்டு கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன .
ஆனால் வருவாய்துறை உற்பட எந்த ஒரு துறையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளிக்க முடியும். ஆதாரத்துடன் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புதுறை, ரசாயணம் தடவிய நோட்டுகளை தருவார்கள். அதன்பின்னர் யார் லஞ்சம் கேட்டாரோ அவரை நேரில் போய் பணத்தை தர வேண்டும்.
அப்படி பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்புதுறை கையும் களவுமாக பிடிப்பார்கள். அவர்களிடம் லஞ்சப்பணத்துடன் அதிகாரிகள் சிக்கினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுவதுடன், அவருக்கு அது பணிக்காலம் முழுவதும் கறையாக தொடரும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இப்படி சிக்கல்கள் இருந்தும் லஞ்சம் வாங்குவதை சில அரசு ஊழியர்கள் தொடருகிறார்கள்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள தீத்தான்விடுதி கிராமத்தை தேவதாஸ் தனக்கு சொந்தமாக உள்ள நிலத்திற்கு பட்டா பெயர் மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானுவை சென்று பார்த்துள்ளார். ஆனால் பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ. 10,000 லஞ்சம் கேட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, தீத்தான்விடுதி கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு அவரிடம் தேவதாஸ் ரூ. 4000 யை முன்பணமாக கொடுத்துவிட்டு மீதத் தொகையை தீபாவளி முடிந்து தருவதாக தெரிவித்து. அந்த ரூ. 4000 பணத்தை கிராம வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு பணத்தை டிராவில் வைத்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.