இந்தியாவை மோடி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார் என கூறும் நடிகர்கள் விவேக் ஓபராய், மாதவன் ஆகியோர் ஏன் இந்தியாவை விட்டுவிட்டு வெளிநாட்டில் வசிக்கிறார்கள் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பு தலைவர் ராஜ் தாக்கரே விமர்சித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற அநவநிர்மான் சேனா அமைப்பின் 20 ஆண்டு விழா தொடக்கவிழாவையொட்டி தலைவர் ராஜ் தாக்கரே கட்சியினர் மத்தியில் பேசினார். அப்போது, ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி குறித்து படத்தை தயாரித்து அதில் பிரதமராகவே நடித்த விவேக் ஓபராய், துபாயில் வசிக்கிறார்.
அது போல் நடிகர் மாதவன், மோடி இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார் என்றும் ஏராளமான தொழிற்சாலைகளை இந்தியாவில் தொடங்க ஒப்பந்தம் போட்டுள்ளார் என்றும் பாராட்டுகிறார். அப்படி பாராட்டும் அவரும் துபாயில் செட்டிலாகிவிட்டார். பிரதமரையும் இந்திய நாட்டையும் அவர்கள் நேசிப்பதென்றால், பிரதமர் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார் என அவர்கள் நம்புகிறார்கள் என்றால் குடும்பத்தினருடன் ஏன் துபாயில் வசிக்க வேண்டும்? அரசு நிதியுதவியில் எடுக்கப்பட்ட படத்தில் நடித்துவிட்டு துபாய்க்கு சென்று விடுகிறார்கள்.
சிலர் தூரந்தர் போன்ற அரசு ஆதரவு படங்களில் நடித்து விட்டு துபாய் செல்கிறார்கள். என்னை கேட்டால் நடிகர்கள் எல்லாம் இது போன்ற லாஜிக்கே இல்லாத கருத்துகளை வெளிப்படுத்துவதை காட்டிலும் அமைதியாக இருப்பதே மேல்! என ராஜ் தாக்கரே விமர்சித்துள்ளார். மேலும் ராஜ் தாக்கரே பேசுகையில், நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வழிதவறி சென்றுவிட்டார்கள் என்றும் அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறிய கருத்துகள் தவறானவை. போராட்டத்தின் மீது மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய நிலையில் இதற்கு யார் பொறுப்போ அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.