கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் அடுத்துள்ள சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மனைவிக்கு, கருணை அடிப்படையில், காவல்துறையில் கணினி பிரிவில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை கிடைத்தது. ஆரம்ப காலத்தில், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அந்த பெண், அதன்பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அவர் பணிமாறுதல் செய்யப்பட்டு, அங்கு பணியாற்றி வருகிறார். தினந்தோறும் அந்த பெண் ஊழியர் பணி முடிந்து, ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து, தனது கிராமமான சத்தியமங்கலத்திற்கு பஸ்சில் செல்வது வழக்கம். கடந்த 16-ந் தேதி மாலை, பணி முடிந்து தனியார் பேருந்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநரான மூர்த்தி என்பவர், தனது டெம்போவில் அந்த பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்றவுடன், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தினார். இதுகுறித்து அந்த பெண் கேட்ட போது, அவரை வாகனத்தின் இருக்கைகளுக்கு இடையே கீழே தள்ளி, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டும், அக்கம்பக்கம் யாருமில்லாததால் உதவிக்கு வரவில்லை. பின்னர், மூர்த்தியிடம் இருந்து தப்பித்து தனது வீட்டுக்கு சென்ற பெண் ஊழியர், நடந்த சம்பவம் குறித்து தனது பார்வை இழந்த தாயார் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் (17ம் தேதி) பாகலூர் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார். புகாரின் பேரில் விசாரணையில், மூர்த்தியின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த மூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், பாகலூர் காவல் நிலையத்திற்கு வந்த ஓட்டுநர் மூர்த்தி, காவல்நிலையத்தின் நுழைவுவாயில் அருகே, தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.