பீகாரில் நடக்கும் வாக்காளர் உரிமை யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உடன் இணைந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாக்குகள் திருட்டு குற்றச்சாட்டை தெரிவித்தும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வாக்காளர் உரிமை யாத்திரை பேரணியில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சமீபத்தில் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், இது தொடர்பாக வாக்காளர் பட்டியலில் போட்டோக்களையும் வெளியிட்ட ராகுல் காந்தி, ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும் சாடியுள்ளார்.

அவர் தனது புகாரில், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்? வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்? எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்? பாஜகவின் ஏஜண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராக ராகுல் காந்தி ‘வாக்காளர் அதிகாரம்’ என்கிற பெயரில் பீகாரில் வாக்குரிமை பயணத்தை ஆகஸ்ட் 17 -ஆம் தேதியில் இருந்து மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தியுடன் கைகோர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் பேரணியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள். திறந்த வாகனத்தில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்து பேரணியாக சென்றார். அப்போது கூடியிருந்த பீகார் பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

”பிகாரை அடைந்துவிட்டேன். மதிப்புக்குரிய லாலு பிரசாத் யாதவின் நிலம் நெருப்பாக என்னை வரவேற்றது. திருடப்பட்ட ஒவ்வொரு வாக்கினாலும் அந்த மண் கனமாகியிருந்தது. மக்களின் வலியை தீர்க்கமான வலிமையாக மாற்றும் ‘வாக்கு அதிகார பேரணி’யில் என் சகோதரர்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருடன் இணைந்திருக்கிறேன்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.