மதுரையில் நடந்த தவெக மாநாட்டின் போது, ரேம்ப் வாக் சென்ற விஜய்யை பார்க்க சென்ற தன்னை விஜய்யின் பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே போட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் தவெக தொண்டர் சரத்குமார் என்பவர் தனது தாயுடன் சென்று புகார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சுமார் 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் ரேம்ப் வாக் செய்யும் மேடையை சுற்றி உள்ள கம்பி, அந்த கம்பிகளில் க்ரீஸ் தடவப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொண்டர்கள் சிலர் கம்பியை தாண்டி சென்றனர். அப்போது விஜய்யை நெருங்க விடாமல் அவரது பவுன்சர்கள் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். சிலர் அப்படியே தொண்டர்களை கீழே தள்ளிவிட்டனர்.
இந்நிலையில், விஜய் வழக்கம்போல் ரேம்ப் வாக் வர இந்த நேரத்திலேயே தொண்டர்கள் அந்த கிரீஸை தொடைத்துவிட்டு ரேம்ப் வாக்கில் ஏறத் தொடங்கினர். விஜய் ரேம்ப் வாக் செய்துகொண்டு இருந்தபோதே தொண்டர்களும் ஏறிவிட்டனர். அவர்கள் விஜய்யை நோக்கி ஓடி வந்து கை குலுக்கினர். சிலர் கட்டி பிடித்தனர். நாலாபுறமும் விஜய்யை சூழ்ந்துகொண்டு அவரை நெருங்கி வந்ததால் விஜய்யின் பவுன்சர்கள் அவர்களை நெருங்கவிடாமல் தடுத்தனர்.

ஒவ்வொரு பவுன்சர்களும் சுமார் 2 பேரை அப்படியே அலேக்காக பிடித்து கீழே இறக்கி விட்டனர். ஒரு சில பவுன்சர்கள் தொண்டர்களை அப்படியே தூக்கி கீழே தள்ளிவிடுவது போலவும் சில வீடியோ காட்சிகள் பரவின. மனசாட்சி இல்லாமல் விஜய்யின் பவுன்சர்கள் கீழே தூக்கி போட்டதாகவும் சிலர் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் பெரம்பலூர் காவல் நிலையத்தில் விஜய் ரசிகர் ஒருவர், ரேம்ப்வாக்கில் விஜய்யை சந்திக்க சென்றபோது அவரது ரசிகர்கள் தூக்கி கீழே போட்டதாக புகார் கூறியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் பகுதியை சேர்ந்த சரத்குமார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தொண்டராக இருந்து வருகிறார். இவர் மதுரையில் நடந்த தவெக மாநாட்டுக்கு சென்று இருந்தார்.
அப்போது விஜய்யை பார்ப்பதற்காக ரேம்ப் வாக்கில் ஏறி இருக்கிறார். அப்போது விஜய்யின் பவுன்சர்கள் தன்னை குண்டுக்கட்டாக தூக்கி போட்டதாகவும், விஜய்யின் பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திலும் விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.