ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந் தேதி போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை இன்று மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் தொடர்பான முதல் பன்னாட்டு மாநாடு 1909 ஆம் ஆண்டு ஷாங்காயில் நடைபெற்றது. படிப்படியாக, போதைப்பொருள் உற்பத்தி, கடத்தல் மற்றும் முறை தவறியப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பில் 1961, 1971 மற்றும் 1988 என்று மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற கூட்டங்களில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு மரபுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
1987 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம், போதைப்பொருள் முறை தவறிய பயன்பாடு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு நாளினைக் கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது. அந்தவகையில் போதைப்பொருள் முறைதவறிய பயன்பாடில்லாத ஒரு பன்னாட்டுச் சமூகத்தின் இலக்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பைத் தூண்டுவதற்காக, 1988 -ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் 1200-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்கள்.
அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மேலும் அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் .ரகுபதி ,கயர்லாபாத் காவல் ஆய்வாளர் .வேலுச்சாமி, அரியலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் .பிரகாஷ் உடன் இருந்தார்கள். அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் .கார்த்திகேயன் விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்கள்.மாணவ- மாணவிகள் போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர்.
நடைப்பேரணி அரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கி,கடை வீதி, சத்திரம் வழியாக சென்று காமராஜர் ஒற்றுமை திடலில் முடிவடைந்தது. இறுதியாக பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.