உதயநிதியைப் பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல.. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார். எங்களுக்கான முதலமைச்சர் அறிவாலயத்தில் இருந்து வருவார் என ஆ.ராசா தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை பிரதான அரசியல்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக தொடங்கியுள்ளது. மேலும் தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் அடுத்தடுத்து இருமுறை ஆட்சி அமைக்க முடியாமல் இருந்ததை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடைத்து அதிமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்தார் .
அதோபோல திமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற குறையை போக்க மு.க.ஸ்டாலின், தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். மறுபுறம், அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தன் மீதான தொடர் தோல்வி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறார். மேலும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் சில அமைப்புகள் 2019 தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி உருவான நிலையில் அதில் இருந்த கட்சிகள் தற்போது வரை தொடர்ந்து பக்கபலமாக இருக்கிறது.
ஆனால், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைந்திருக்கும் நிலையில், பாஜகவோடு கடந்த காலங்களில் கூட்டணி அமைத்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, மக்கள் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் சேரலாம் என கூறப்படுகிறது. மேலும் பாமகவும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கியுள்ளார். மறுபுறம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில், இரண்டு பிரதான கட்சிகளுடன் 2026 தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது.
மறுபுறம் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை அதிமுக மற்றும் பாஜக உடைக்கும் வழிகளில் முயற்சி செய்த போதிலும் அவர்களின் பாச்சா திமுக கூட்டணியில் இருபவர்களிடன் பலிக்கவில்லை. மேலும் திருமாவளவன் அவர்களுக்கு தெரியவில்லை என்று பல இடங்களில் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார். இதனால் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், பாஜக இம்முறை தென் மாவட்டங்களில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலியில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு அமித்ஷா முன்னிலையில் நடைபெற்றது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் அமித்ஷா பேசுகையில், தமிழ்நாட்டில் நடக்கவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும். பாஜக – அதிமுக கூட்டணி வெறும் அரசியல் கூட்டணி அல்ல. இந்த கூட்டணி தமிழக மக்களின் நிலையை மேம்படுத்தும். இந்த நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் ஆட்சி இங்கு நடக்கும் திமுகவின் ஆட்சிதான்.
மணல் திருட்டு, டாஸ்மாக் ஊழல், போக்குவரத்துத் துறை ஊழல், இலவச வேட்டி சேலையில் ஊழல் என்று எண்ணற்ற ஊழல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அமைச்சர்களாக இருந்த பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பல மாதங்களாக சிறையில் இருந்துள்ளனர். அவர்கள் அமைச்சர்களாகவும் இருக்க வேண்டுமா? 130-வது சட்டத்திருத்தத்தை கறுப்பு சட்டம் என்கிறார் ஸ்டாலின்.
அதனை சொல்ல அவருக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனென்றால் ஸ்டாலின் கறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர். அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை அறிவிக்க வேண்டும். இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு ஒரே லட்சியம் தான்.
சோனியா காந்திக்கு தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். அதேபோல் ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதே கனவு. இந்த இரு கனவும் பலிக்காது. ஒருநாளும் உதயநிதி ஸ்டாலினால் தமிழக முதல்வராக வர முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் அமித்ஷா பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 18 சதவிகித வாக்குகளையும், அதிமுக கூட்டணி 21 சதவிகித வாக்குகளையும் பெற்றது. இதன் மூலமாக சட்டசபைத் தேர்தலில் எளிதாக அதிமுக – பாஜக கூட்டணி 39 சதவிகித வாக்குகளைப் பெற்றுவிடும். இந்த வாக்குகளை இணைத்தாலே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்துவிடும். தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஆ.ராசா வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து எதையும் கொண்டு வரவில்லை. வழக்கம் போலவே அரைத்த மாவையே அரைத்திருக்கிறார். திராவிட மாடல் அரசைக் குறை கூறுவதற்கு எதுவும் கிடைக்காமல், ஏற்கனவே கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பொய்களைப் பேசி சென்று இருக்கிறார்.
“திருக்குறளின் வழி நின்று ஆட்சி நடத்தி வருகிறார் மோடி” எனச் சொல்லி இருக்கிறார். திருவள்ளுவர் உயிரோடு இருந்திருந்தால் குறள் பாடியே மத்திய அரசைச் சாடி இருப்பார். பொய்களை மட்டுமே கொண்டு ஆட்சியை நடத்தி கொண்டு இ ருக்கும் மத்திய அரசு திருவள்ளுவர் எழுதிய “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” என்ற குறளைப் படிக்க வேண்டும். பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும் என்கிறார் திருவள்ளுவர்.
இந்தக் குறளை அமித்ஷா படித்தால் போதும் பொது வெளியில் பொய் வடைகளை சுடுவதை நிறுத்திவிடுவார். வாக்கு திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர் ஓட்டுகளை எல்லாம் திருட முடியாது. “வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு” என்ற குறளில், ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது என்கிறார் திருவள்ளுவர்.
அளவுக்கு அதிகமாக வரி வசூலிக்கும் அரசரை வழிப்பறிக் கொள்ளையனுடன் ஒப்பிடுகிறார். ஜிஎஸ்டி என்ற கொடிய வரியை வசூலித்து மக்களை வஞ்சிக்கும் அமித்ஷா எல்லாம் திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றி பேசத் தகுதியே இல்லை. “சோனியா காந்திக்கு ஒரே லட்சியம், ராகுல் காந்தியை பிரதமராக்குவதே கனவு; அதேபோல திமுகவிற்கு உதயநிதியை முதல்வராக்குவதே கனவு. இந்த இரண்டுமே நடக்காது” எனச் சொல்லி இருக்கிறார் அமித்ஷா.
அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குச் செயலாளர் ஆனார்? அவருடைய கிரிக்கெட் அறிவு என்ன? அவரை ஓட்டு போட்டா தேர்ந்தெடுத்தார்கள்? மக்கள் வாக்களித்தால் யாரும் முதல்வர் ஆகலாம். தமிழ்நாட்டில் யார் முதல்வர் ஆக வேண்டும் என்பதை இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவரான அமித்ஷா முடிவு செய்ய முடியாது. கருணாநிதிக்கு இப்படித்தான் சொன்னார்கள். அவருடைய மகன் மு.க.ஸ்டாலினுக்கும் சொன்னார்கள்.
ஆனால், வரலாறு நடத்திக் காட்டியது. துணை முதல்வர் உதயநிதியைப் பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல.. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார். எங்களுக்கான முதலமைச்சர் அறிவாலயத்தில் இருந்து வருவார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு நாக்பூரில் இருந்துதான் வருவார்கள். “வரப்போகும் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிந்து, என்.டி.ஏ.-வின் வெற்றியை அறிவிக்க வேண்டும்” எனப் பேசி இருக்கிறார் அமித்ஷா. இந்தியாவில் இருந்தே வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டிய நச்சு செடி பாசிச பாஜக.
இந்தியா கூட்டணியும் மக்களும் அதனை நிகழ்த்திக் காட்டுவார்கள். “130-வது சட்டத்திருத்தத்தை ‘கறுப்பு சட்டம்’ என்கிறார் ஸ்டாலின்; அதைச் சொல்ல அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்கிறார் அமித்ஷா. சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் சிறை இருந்த நீங்கள் எல்லாம் இந்தச் சட்டத்தை இயற்ற தகுதியில்லாதவர். மோடியின் அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கிறது. இதில் 19 அமைச்சர்கள் மீது மிகவும் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. மோடியின் அமைச்சரவையில் 39 சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் மீதெல்லாம் 130-வது சட்டப் பிரிவு பாயுமா? தங்களுக்குப் பிடிக்காதவர்களை ஆட்சியில் இருந்து விரட்டக் கொண்டு வந்த சட்டத்தை ‘கறுப்பு சட்டம்’ என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பார்களாம்.
இது நல்ல சட்டம் என்றால், ஏன் பாஜகவுக்கு மட்டும் பொருந்துவதில்லை. 130-வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டால் தனது ஏவல்துறையான அமலாக்கத்துறையை பயன்படுத்தி எப்படியெல்லாம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய பாஜக அரசு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். தனது அரசியல் எதிரிகளை மிரட்டி தன்னால் ஆளமுடியாத மாநில அரசுகளை முடக்குவதற்காக 130வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறது பாஜக.
ஏற்கெனவே அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளை அரசியல் எதிரிகளை பழிவாங்கப் பயன்படுத்திவரும் பாஜக, இப்போதுதான் ஆள முடியாத மாநிலங்களின் முதல்வர்கள் அமைச்சர்களைக் கைது செய்து அவர்களது பதவியைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்தச் சர்வாதிகாரக் கருப்புச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் எழுப்பிய கண்டனக் குரல் அமித்ஷாவை ஆட்டங்காணச் செய்திருக்கிறது. அதனால்தான் உடனே தமிழ்நாட்டிற்கு ஓடிவந்து தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டுச் சென்றிருக்கிறார். நாட்டைச் சர்வாதிகார நாடாக மாற்றத் துடிக்கும் பாஜகவின் பாசிசத் திட்டத்திற்கு எதிரான சிம்ம சொப்பனமாக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார் என்பதைத்தான் அமித்ஷாவின் அபத்த உளறல்கள் நிரூபித்திருக்கிறது.
அமித்ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்க இது தொடைநடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல. தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தைக் காத்து நிற்கும் மானமிகு முதலமைச்சரின் அரசு. நாட்டின் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக என தேய்ந்த ரிக்கார்டு போலச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. அமித்ஷாவுக்கு நாக்கு ஒன்றுதான். வார்த்தைகள்தான் வேறு வேறு. 2018 ஜூலை 9-ம் தேதி சென்னையில் பேசிய அமித்ஷா, “நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாகத் தமிழகம் உள்ளது” என்று அன்றைக்கு இருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியைச் சொன்னார். 2016 ஏப்ரல் 14-ம் தேதி திருச்சியில் பேசிய அமித்ஷா, “நாட்டிலேயே ஊழல் மிகுந்தது ஜெயலலிதா ஆட்சிதான்” என்றார்.
ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிகளை ஊழல் ஆட்சியென்று சொல்லிவிட்டு அதிமுகவோடு கூட்டணி போடுவது எல்லாம் அமித்ஷாவின் சாணக்கியத்தனத்தில் அடங்குமா? ஊழலிலேயே திளைத்து ஊழலிலேயே தவழ்ந்து உலக மகா ஊழல் ஆட்சி நடத்திய அதிமுகவுடன் வெட்கமே இல்லாமல் ஊழல் கூட்டணி வைத்திருக்கும் அமித்ஷா, தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடக்கிறது என்று பேசுவைத் கேட்டால் சின்னக் குழந்தையும் கைகொட்டிச் சிரிக்கும். தேர்தல் பத்திர ஊழல், சிஏஜி சுட்டிக்காட்டிய 7.5 கோடி ஊழல், ரஃபேல் விமான முறைகேடு ஊழல்… என மத்திய பாஜக அரசு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அணி வகுக்கின்றன.
புலனாய்வு அமைப்புகளை வளைத்துவிட்டதால் பாஜக ஆட்சியாளர்கள் விசாரணை வளையத்தில் சிக்காமல் தப்பியோடுவது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். ஊழல் புகார்களில் சிக்கியவர்களை பாஜக வாஷிங் மெஷினில் போட்டு, தூய்மையானவர்கள் என பட்டம் கொடுத்து பதவி கொடுத்து அழகு பார்க்கும் அமித்ஷாவிற்கு ஊழலை பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது? தமிழ்நாடு இன்றைக்கு நாட்டிலேயே பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கிறது என்கிற உண்மை உறுத்தியிருப்பதால் மக்களிடம் தோற்றுப் போன இந்தப் பொய்களை நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் அமித்ஷா.
ஆயிரம் அமாவாசைகள் வந்தாலும் சரி பாஜகவின் நரித்தனம் தமிழ்நாட்டில் ஒருநாளும் வெற்றியடையாது! விடியல் ஆட்சியை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது! தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகப் பாஜகவையும் அதன் பண்ணையடிமையாக மாறிவிட்ட அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் ஓட ஓட விரட்டக் காத்திருக்கிறார்கள் என ஆ.ராசா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.