திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரக்கோணம் சாலையில், புதிய பேருந்து நிலையத்தில் “உள்ளம் தேடி இல்லம்” முதற்கட்ட சுற்றுப்பயணத்தை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கினார். தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை பிரதான அரசியல்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 2026 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆளும் திமுக பல்வேறு கட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
மறுபுறம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில், இரண்டு பிரதான கட்சிகளுடன் 2026 தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. மேலும் திமுக தனது கூட்டணி குறித்து மிகத்தெளிவானை போக்கை கொண்டுள்ள நிலையில், அதிமுகவில் இன்னும் நிலையற்ற தன்மை தொடர்கிறது. அதிமுக – பாஜக கூட்டணியான NDA கூட்டணியில் இருந்ததாக சொல்லப்பட்ட இருவரில் ஒருவர் ஓபிஎஸ், மற்றொருவர் பிரேமலதா விஜயகாந்த், ஓ.பன்னீர் செல்வம் அதிகாரபூர்வமாகவே கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக -வுடன் கூட்டணியில் இருந்த ஒரே கட்சி தேமுதிக. ஏற்கனவே பேசி வைத்தபடி தேமுதிக -விற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை பெறுவோம் என பிரேமலதா உறுதியாக நம்பிய நிலையில், நாங்கள் அப்படி ஒன்றும் சொல்லவில்லை என எடப்பாடி நழுவிக்கொண்டதால் பிரேமலதா விஜயகாந்த் இன்னும் யாருடன் கூட்டணி என்பதை தெளிவுபடுத்தவில்லை.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ‘உள்ளம் தேடி’- இல்லம் நாடி’(வாக்குச் சாவடி நிர்வாகிகளுடனான சந்திப்பு), ‘கேப்டனின் ரத யாத்திரை’–’மக்களை தேடி மக்கள் தலைவர்’ (மக்களுடன் சந்திப்பு) ஆகிய பெயர்களை கொண்ட தமிழகம் முழுவதுமான முதற்கட்ட சுற்றுப்பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஆரம்பாக்கத்தில் தொடங்கினார்.

இந்த சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான நேற்று காலை திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பட்டாபிராமில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்குச் சாவடி நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதிஷ், உயர்மட்டக் குழு உறுப்பினர் நல்லதம்பி, ஆவடி மாநகர் மாவட்ட செயலாளர் நா.மு.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, மாலை பிரேமலதா விஜயகாந்த் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடைபயணம் மேற்கொண்டார். திருத்தணி அரக்கோணம் சாலையில், புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த நடைபயணம், மபொசி சாலை வழியாக சுமார் 2 கிமீ தூரத்துக்கு நடைபெற்றது. இதில், திருத்தணி முருகன் கோயில் மலை பாதை சந்திப்பு அருகே பிரேமலதா விஜயகாந்த்திற்கு, தேமுதிக நிர்வாகிகள், கிரேன் மூலம் மாலை அணிவித்ததோடு, 5 அடி உயரம் கொண்ட வெள்ளிவேல் வழங்கினர். அந்த வேலை கையில் ஏந்தியவாறும், மக்களை பார்த்து கையசைத்தவாறும் பிரேமலதா விஜயகாந்த் நடைபயணம் மேற்கொண்டார்.