ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந் தேதி போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட மனநல திட்டம் சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு வாரம் ஜூன் 19-26 வரை கடைபிடிக்கபட்டது இளைய தலைமுறையினரிடம் போதை பழக்கம் பரவுவதை தடுக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தியுள்ள சீரிய நடவடிக்கைளான போதையில்லா தமிழகம் செயலி , whatsapp சிறப்பு அழைப்பு எண்கள் 9487545177(தென்காசி மாவட்டம்) 9498410581(தமிழ்நாடு) டெலிமனஸ் (நட்புடன் உங்களோடு) மனநல சிறப்பு ஆலோசனை எண் 14416, ஆகியவற்றை மையப்படுத்தி பள்ளி மாணவர்களக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு வாரத்தின் நிறைவு நிகழ்ச்சியாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இணை இயக்குநர்(பொ) மருத்துவர் கீதா தலைமையில் நடைபெற்றது. பள்ளிப்பருவத்தில் நட்பு வட்டாரத்தினர் கொடுக்கும் அழுத்தத்தினாலும், வசிப்பிட சூழல்களாலும், திரைபிரபலங்கள் போன்றவர்களை பார்த்தும் பழகுதல்.

சுயவிருப்பம் தற்காலிக மகிழ்ச்சிக்காக மற்றும் சிலரின் தவறான நட்பு போன்ற பல காரணங்களால் போதை பழக்கம் ஏற்படுகிறது என போதை பழக்கம் ஏற்பட காரணங்கள் பற்றி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் அவர்கள் சிறப்புரையாற்றினார் . மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றுள் மிக முக்கியமான ஒன்று போதைப் பழக்கம் ஆகும்.
மூளையை மழுங்கச் செய்து, புத்தியைத் தடுமாறச் செய்து பலவித உடல் நல கோளாறுகளை போதை பழக்கம் ஏற்படுத்துகிறது. போதையில் கிடைக்கும் கிறக்கதினால் வாழ்வை மட்டுமல்லாமல் குடும்பத்தையும் பலர் தொலைத்திருக்கிறார்கள்.இளைய தலைமுறை போதைபழக்கத்தை விடுத்து நல்லொழுக்க சிந்தனைகளோடு வாழ்வில் உயர வேண்டும் என மாவட்ட மனநல மருத்துவர் நிர்மல் சிறப்புரையாற்றினார். செவிலிய கல்லூரி மாணவிகள் பங்கு கொண்ட இந்நிகழ்வில் உறைவிட மருத்துவர் செல்வபாலா, மனநல மருத்துவர் முகமது இப்ராஹிம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் , பணியாளர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.