அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் பட்டியலின மற்றும் பழங்குடியினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. SIR என்னும் பெயரில் மத்திய பாஜக அரசு வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை குறித்து மாலை முரசு தொலைக்காட்சியில் நேற்று இரவு 8.00 மணிக்கு நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற கோவை சத்யன், “வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை மட்டுமே பாதிக்கிறது என்று சொல்வது உண்மையல்ல. பெயரை பார்த்தவுடன் இவர் பாடியலினத்தை சேர்ந்தவர்.., இவர் ஒடுக்கப்பட்டவர்…, இவர் பிடுக்கப்பட்டவர்…, நசுக்கப்பட்டவர்… இவர் ஏது, எதுன்னு சொல்லமுயுமா… என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை அவதூறாக பேசினார். அவரது பேச்சு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றாகும்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர், முனைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன், துணைத் தலைவர், எழுத்தாளர் இமையம் (வெ.அண்ணாமலை), உறுப்பினர் மு.பொன்தோஸ் ஆகியோரை கொண்ட இவ்வாணையத்தின் சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து கோவை சத்யன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்கிறது. அதன்படி, மாலை முரசு தொலைக்காட்சி அமைந்துள்ள சரகத்தின் காவல் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் சம்பந்தப்பட்ட கோவை சத்யன் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, அதன் விபரத்தினை அறிக்கையாக இவ்வாணையத்திற்கு 10.11.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்படுகிறது” என தெரிய வருகிறது.