தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரம்பலூர் மற்றும் சிதார் மருத்துவமனை, திருச்சி ஆகிய மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள காவேரி ஆர்.எஸ், அன்னை சத்தியா நகர், குமாரபாளையம், வெப்படை சுற்று பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து அவர்களது வறுமையை பயன்படுத்தி கொள்ளும் சிறுநீரக விற்பனை கும்பல், அறுவை சிகிச்சை மூலம் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தை விற்பனை செய்து 10 லட்சம் ரூபாய் வரை பெற்று தருவதாக கூறி தொழிலாளர்களை மூளை சலவை செய்துள்ளனர். பின்னர் ஈரோடு, பெரம்பலூர், திருச்சி, கொச்சின், பெங்களூரு போன்ற இடங்களில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிறுநீரகத்தை விற்பனை செய்கின்றனர்.
அதன் பின்னர் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவது தெரிய வந்து இருக்கிறது. இதுதொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில்,” தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்திகளில் வரப்பெற்ற முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவர் எஸ். வினீத், அவர்களை நியமித்து 18.07.2025 அன்று ஆணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவர் எஸ். வினீத், மருத்துவர் இரா. ம. மீனாட்சிசுந்தரி, இணை இயக்குநர் (சட்டம்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை, மருத்துவர் A. ராஜ்மோகன், இணை இயக்குநர் நலப்பணிகள் நாமக்கல், மருத்துவர் கே. மாரிமுத்து, இணை இயக்குநர் நலப்பணிகள் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், சீத்தாராமன், காவல் துணை கண்காணிப்பாளர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை ஆகியோர் அடங்கிய குழு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, பெரம்பலூர் மற்றும் சிதார் மருத்துவனை, திருச்சி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

இவ்விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையினை மருத்துவர் எஸ்.வினீத், அவர்கள் அரசுக்கு அனுப்பியுள்ளார். அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரம்பலூர் மற்றும் சிதார் மருத்துவமனை, திருச்சி ஆகிய மருத்துவமனைகளுக்கு மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994 பிரிவு 16 உட்பிரிவு (2) ன்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அவர்களால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.