நாடு முழுவதும் கடந்த 2 மாதத்தில் 808 அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 42 லெட்டர் பேட் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் , மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பிரிவு 29A-ன் கீழ், தேசிய, மாநில மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளை பதிவு செய்கிறது. ஒரு முறை பதிவு செய்யப்பட்ட பின், அந்த கட்சிகளுக்கு தேர்தல் சின்னம், வரிவிலக்கு போன்ற பல சலுகைகள் கிடைக்கும். ஆனால், வழிகாட்டுதலின் படி, எந்தக் கட்சியும் தொடர்ந்து 6 ஆண்டுகள் ஒரு தேர்தலிலும் போட்டியிடாத பட்சத்தில், அது பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
தேர்தல் ஆணையம், 2019 முதல் நாட்டளவில் முழுமையான ஆய்வு நடத்தி வருகிறது. தொடர்ந்து 6 ஆண்டுகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்ட நடவடிக்கையாக 2025 ஆகஸ்ட் 9-ந் தேதி 334 கட்சிகள் நீக்கப்பட்டன. இரண்டாம் கட்ட நடவடிக்கையாக செப்டம்பர் 18-ந் தேதி 474 கட்சிகள் நீக்கப்பட்டன. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் மொத்தம் 808 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள 42 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.