ஆந்திரா மாநிலம், கர்நூலைச் சேர்ந்த கருணாகர் என்பவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் இவர் பள்ளியில் படிக்கும்போது போயா வசுந்தரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். போயா வசுந்தராவும் கருணாகரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் இருவரும் பள்ளி படிப்பை முடித்தனர்.
இந்நிலையில் போயா வசுந்தரா செவிலியருக்கு படித்து செவிலியராகப் பணியாற்றி வந்தார். அப்போதும் இருவரும் காதலித்து கொண்டே வந்தனர். ஆனால் காலப்போக்கில் இந்த இருவரின் காதல் முறிந்தது. இதையடுத்து கருணாகர், தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியாக பணியாற்றி வரும் பெண் மருத்துவரை திருமணம் செய்துகொண்டார்.

தன்னுடைய காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது போயா வசுந்தராவால் ஏற்கவே முடியவில்லை. கடும் மனவேதனையில் ஆழ்த்தியது. அந்த வேதனையே, நாளடைவில் பொறாமையாகவும், கோபமாகவும் போயா வசுந்தராவுக்குள் மாறியது. “அவர்களது வாழ்க்கையை நான் சீரழிக்க வேண்டும்” என்ற மோசமான எண்ணம் போயா வசுந்தராவின் மனதில் ஆழமாக பதிந்தது. இந்த நேரத்தில்தான் மிக கொடூரமான திட்டத்தை போயா வசுந்தரா போட்டார்.
அதோனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் கோங்கே ஜோதி என்ற பெண்ணின் உதவியை போயா வசுந்தரா நாடினார். தன்னுடைய பிளானுக்கு உதவி செய்தால் பணம் தருவதாக சொல்லி கோங்கே ஜோதியையும், அவரது மகன்களான பூமா ஜஸ்வந்த் மற்றும் பூமா ஸ்ருதி ஆகியோரையும் சம்மதிக்க வைத்தார்.

இத்தனை தொடர்ந்து கடந்த 9-ந் தேதி மதியம், காதலரின் மனைவி தன்னுடைய பணியை முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கர்நூல் விநாயக் காட் அருகே கே.சி. கேனல் பகுதியில் வந்தபோது, முன்பே திட்டமிட்டபடி பூமா ஜஸ்வந்த் மற்றும் ஸ்ருதி பைக்கில் வேகமாக வந்து, பெண் மருத்துவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்கள். இதில் நிலைதடுமாறி விழுந்த பெண் மருத்துவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது.
இதை பார்த்து பதறிப்போய், அவருக்கு உதவி செய்வது போல நடித்து போயா வசுந்தரா ஓடி வந்து ஆட்டோ ஒன்றை நிறுத்தினார். மருத்துவமனைக்கு உடனே அழைத்து போகிறேன் என்று சொல்லி, அந்த பெண் மருத்துவரை ஆட்டோவில் ஏற்றினார். முன்னதாக, HIV பாதித்த ரத்தத்தை ஊசி ஒன்றை ஏற்கனவே தயாராக மறைத்து வைத்திருந்த போயா வசுந்தரா அந்த ஊசியை ஆட்டோவில் வைத்தே பெண் மருத்துவரின் கையில் செலுத்தினார். ஆனால் ஆட்டோ போகும்போதே ஊசியை செலுத்தியதால், திடீரென ஏற்பட்ட வலியால் அந்த பெண் மருத்துவர் அலறினார். உடனே போயா வசுந்தராவும், கோங்கே ஜோதியும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

இந்த சம்பவம் குறித்து பெண் மருத்துவர் தன்னுடைய கணவரிடம் விஷயத்தை சொல்லவும், அதைக்கேட்டு பதறிப்போன கணவர் கருணாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இத்தனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில், போயா வசுந்தராவின் சதித் திட்டம் முழுவதுமாக வெளிச்சத்துக்கு வந்தது.
அதாவது அரசு மருத்துவமனையில் இருந்து டெஸ்ட் என்ற பெயரில் HIV பாதித்த ரத்தத்தை கோங்கே ஜோதி, பெற்றுவந்து, தன்னுடைய வீட்டின் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்துள்ளார். சம்பவத்தன்று அதை எடுத்து சென்று திட்டமிட்டு பெண் மருத்துவருக்கு செலுத்தியதும் விசாரணையில் உறுதியானது. இப்போது போயா வசுந்தரா, கோங்கே ஜோதி மற்றும் அவரது இரண்டு மகன்கள் என நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பெண் மருத்துவர் மருத்துவமனையில் தீவிரமான மருத்துவ கண்காணிப்பில் உள்ள நிலையில் அவருக்கு இதனால் எந்த தொற்றும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள், தெரிவித்துள்ளனர்.