நாட்டில் கடந்த சில வருடங்களாகவே ஆண், பெண் பாகுபாடுயின்றி புது புதுவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தங்க நகைகள், நிலம், கட்டுக்கட்டாக பணம் போன்றவற்றுக்காக ஆசைப்பட்டு, இளம்பெண்களிடம் நெருங்கி பழகி மோசடி செய்யும் நபர்கள் பெருகி கொண்டிருக்கிறார்கள். இந்த மோசடியை எளிதாகவும் , சந்தேகம் வராதபடி செய்வதற்காகவும், இதுபோன்ற மோசடிக்காரர்கள் தேர்ந்தெடுப்பது மோட்ரிமோனியல் மற்றும் புரோக்கர்களைதான். இந்த திருமண மோசடிகளுக்கு ஆண், பெண் இரு தரப்பினருமே விலக்கு இல்லை… இதோ இப்போதும் ஒரு அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பழம் வியாபாரம் செய்து வரும் பாஸ்கர். இவருக்கு 35 வயதாகியும் எங்கெங்கோ முயற்சி செய்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இறுதியில் சாத்தான்குளத்தை சேர்ந்த திருமண புரோக்கர் மூக்காண்டியை அணுகினார். ஆதரவற்ற பெண்ணாக இருந்தாலும்கூட பரவாயில்லை தனக்கு பெண் தேடி தரும்படி சொல்லி உள்ளார். உடனே மூக்காண்டியும் நாகர்கோவிலை சேர்ந்த மற்றொரு திருமண பெண் புரோக்கர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் போட்டோவை காட்டி உள்ளனர். அந்த பெண் ஆதரவற்றவர் என்றும் 2 புரோக்கர்களும் கூறி உள்ளனர். இளம்பெண்ணை போட்டோவில் பார்த்ததுமே பாஸ்கருக்கு பிடித்துப்போய்விட்ட திருமணத்துக்கு பாஸ்கர் சம்மதித்தார்.

மேலும் ஆதரவற்ற பெண் என்று புரோக்கர்கள் சொன்னதால், அந்த பெண்ணிற்கு திருமணத்துக்கு தேவையான சேலை, சுடிதார் மற்றும் 4 கிராம் தங்கத்தில் தாலியும் பாஸ்கர் வாங்கி உள்ளார். பின்னர் கடந்த 20-ந் தேதி, திருச்செந்தூர் சிவன்கோயில் பின்புறத்துள்ள துர்க்கை அம்மன் கோயிலில் பாஸ்கர், அந்த பெண்ணுக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொள்ள 2 புரோக்கர்களும் தங்களுக்கு சேரவேண்டிய ரூ.40 ஆயிரம் கமிஷன் வாங்கி கொண்டனர். திருமணத்துக்கு பிறகு பாஸ்கர் ஆசை, ஆசைக்காக கட்டிய தனது புதிய வீட்டிற்கு அந்த இளம்பெண்ணை அழைத்து வந்தார்.
திருமண தம்பதியினர் இருவரும் வீட்டில் 2 நாட்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் 3-வது நாள் அதாவது 22-ந் தேதி, பாஸ்கரிடம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வரும்படி புது மனைவி சொல்லி உள்ளார். உடனே பாஸ்கரும் கடைக்கு சென்று அனைத்து பொருட்களையும் வாங்கி வந்துள்ளார். ஆனால் வீட்டில் மனைவியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்தும் எந்த பதிலும் இல்லை. பிறகு, வீட்டில் வைத்திருந்த ரூ.10,000 ரொக்கம், புதிய நகைகள் மற்றும் சமீபத்தில் திருமணத்துக்கு வாங்கிய பட்டுப்புடவை, துணிகள் அனைத்தும் காணாமல் போனதை கவனித்தார். அதுமட்டுமல்ல, திருமணக்கோலத்தில் எடுத்திருந்த போட்டோக்கள், வீடியோக்கள் செல்போனில் அழிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே புரோக்கர் மூக்காண்டியை தொடர்பு கொண்டார். ஆனால் பெண்ணைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அப்போதுதான் ஏமாந்து விட்டோம் என்பதை உணர்ந்த பாஸ்கர் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இத்தனை தொடர்ந்து காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, மாயமான இளம்பெண் மற்றும் அவருடன் தொடர்புடைய திருமண புரோக்கர் குறித்து தீவிர விசாரணை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மேலும் திருமணமாகாத ஆண்களை குறிவைத்து இப்படி பல மோசடிகளை இவர்கள் செய்திருக்கலாம் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால், மணப்பெண் போல மாறுவேடம் போட்டு ஏமாற்றிய இளம் பெண்ணுக்கும் 2 புரோக்கர்களுக்கும் வலை வீசி தேடப்பட்டு வருகின்றனர்.