கடந்த 26-ந் தேதி இரவு சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது கணவருடன் அதே பகுதியில் உள்ள ஓரண்டியம்மன் கோயில் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரில், பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென இளம் பெண்ணின் பின்புறத்தில் தட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். உடனே அவரது கணவர் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், பைக்கை மறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அந்த நபர், தன்னை காவல்துறையில் பணியாற்றுவதாகக் கூறி மிரட்டிவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றார். பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் புகார்தாரர் தெரிவித்த பைக் எண் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

இதில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் மணிமாறன் என்பது தெரியவந்தது. அவர் குடும்பத்துடன் சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வருவதாகவும், சம்பவத்தன்று தனது உறவினருடன் மது அருந்திவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பும் வழியில் இச்செயலில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, வேளச்சேரி காவல்துறையினர் மணிமாறன் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மணிமாறனை அடுத்த மாதம் 11-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து கைது செய்யப்பட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் தனியாக விசாரித்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.