சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவில் திமுக சேர்ந்த கௌசல்யா அமோக வெற்றி பெற்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 12 வார்டுகள், திமுக 9 வார்டுகள், மதிமுக 2 வார்டுகள், காங்கிரஸ், எஸ்டிபிஐ தலா ஒரு வார்டு மற்றும் சுயேச்சைகள் 5 வார்டுகள் என வெற்றி பெற்றனர். நகராட்சி தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த உமா மகேஸ்வரி, அதிமுகவை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், இருவரும் தலா 15 வாக்குகள் பெற்றதால் சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து, குலுக்கல் முறையில் நகராட்சி தலைவராக உமா மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், அதிமுக, திமுக கவுன்சிலர்கள் உட்பட 24 கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 2-ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. சங்கரன்கோவில் நகராட்சியில் 30 உறுப்பினர்களில் தீர்மானத்துக்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் நகராட்சி தலைவர் பதவியை உமா மகேஸ்வரி இழந்ததாக அறிவிக்கப்பட்டு, நகராட்சி தலைவர் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பின்னர், குரல் வாக்கெடுப்பு நடத்தியது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உமா மகேஸ்வரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீர்மானம் மீது ஜூலை 17-ஆம் தேதி மறைமுக வாக்கெடுப்பு நடத்தவும், அதன் முடிவுகளை ஜூலை 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, ஜூலை 18-ஆம் தேதி நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து உமா மகேஸ்வரி நகராட்சி தலைவர் பதவியை இழந்தார்.

இந்நிலையில், திமுக சார்பில் 6-வது வார்டு உறுப்பினர் கௌசல்யா, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியின் ஆதரவாளர் 26-வது வார்டு உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் ஆகியோர் போட்டியிடும் நிலையில் நகராட்சியில் காலியாக உள்ள தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திமுகவின் முன்னாள் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது ஆதரவாலர் 17-வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயகுமார் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மீதமுள்ள 28 பேர் வாக்களித்தனர்.

நகராட்சி ஆணையாளர் சாம் கிங்ஸ்டன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் திமுகவை சேர்ந்த கவுசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகள் மட்டும் பெற்றார். இதனால், திமுகவின் கௌசல்யா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியாதல் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சங்கரன்கோவில் நகராட்சியில் திமுக.வின் பலம் 15, அதிமுக-வின் பலம் 13 என்ற நிலையில், 7 அதிமுக கவுன்சிலர்கள் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததால், கௌசல்யா நகராட்சி தலைவராக அமோக வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.