நாட்டின் கல்வித் துறையையே உலுக்கி வரும் NEET-UG 2026 தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் Cockroach Janta Party தலைமையில் தற்போது மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டத்தை வழிநடத்த CJP கட்சி தலைவர் அபிஜீத் திப்கே அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்ததுமும் விமான நிலையத்திலேயே ஜெய் பீம் மொமென்ட் உருவானது மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகக் குழுவில் 2020 முதல் 2023 வரை, தன்னார்வலராகப் பணியாற்றிய அபிஜீத் திப்கே. அங்கு மீம்கள் மூலமாக டிஜிட்டல் பிரச்சாரங்களை மேற்கொள்வதில் நிபுணத்துவம் பெற்றார். டெல்லி அரசாங்கத்தின் கல்வித் துறைக்கான தகவல் தொடர்பு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அபிஜீத் திப்கே அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு பிரிவில் முதுகலை அறிவியல் என்ற பட்டத்தைப் படிக்க 2023 ஆம் ஆண்டு சென்றார். 2025-2026 கல்வி ஆண்டில் அபிஜீத் திப்கே படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
கடந்த மே 15-ந் தேதி, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் வேலையில்லாத இளைஞர்கள் குறித்துப் பேசுகையில் ‘கரப்பான்பூச்சி’ மற்றும் சமூகத்தின் ஒட்டுண்ணிகள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அடுத்த நாளான மே 16 அன்று அபிஜீத் திப்கே, “சமூகத்தில் கரப்பான்பூச்சிகள் என ஒதுக்கப்படும் இளைஞர்கள் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகள் அனைவரும் ஒன்றிணைவோம்” என்று கூறி கிண்டலாக இந்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யை சமூக வலைதளங்களில் தொடங்கினார்.

ஆரம்பத்தில் வேடிக்கையாகத் தொடங்கப்பட்டாலும், நாட்டில் நிலவும் கடுமையான இளைஞர் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த ‘ஜென்-ஜி’ தலைமுறை இளைஞர்களும் இந்த அமைப்பைத் தங்களின் குரலாக ஏற்றுக் கொண்டனர். இதனால் வெறும் 5 நாட்களில் பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை விட அதிக ஃபாலோயர்களைப் பெற்று, 2.2 கோடி பேராதரவுடன் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் இயக்கமாக இது உருவெடுத்தது.
சமூக ஊடகங்களில் மிகக் குறுகிய காலத்தில் 2 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்று ஆச்சரியப்பட வைத்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்து இன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார்.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 30 வயதான அபிஜீத் திப்கே, இந்தியாவுக்குப் புறப்படும் முன்பே ஜூன் 6-ஆம் தேதி டெல்லியில் மெகா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தார். அவர் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய போது, இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சுயசரிதை புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி விமான நிலையத்தை விட்டு வெளியே பலத்த பாதுகாப்புடன் வந்தார்.
மேலும் அபிஜீத் திப்கே எக்ஸ் பக்கத்தில், “இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். என் தலைவிதியை இந்திய அரசியல் சாசனத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன். ஜெய் பீம்!” என்று பதிவிட்டதுடன், டெல்லி ஜந்தர் மந்தரில் அனைவரையும் அன்போடும் அமைதியோடும் இந்த இயக்கத்தை வழிநடத்த அழைத்துள்ளார். அவர் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவிய போதிலும், துணிச்சலுடன் அவர் இந்தியாவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி காவல்துறையின் முறையான அனுமதியைப் பெற்று ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று காலை முதலே ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ ஆதரவாளர்களும், பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான நீட் தேர்வு மாணவர்களும் போராட்டம் நடத்துவதற்காக குவியத் தொடங்கினர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டக்காரர்கள் கோரி முழக்கமிட்டு வருகின்றனர். “நாங்கள் கேட்டது ‘மேக் இன் இந்தியா’ .
ஆனால் நீங்கள் கொடுத்ததோ ‘லீக் இன் இந்தியா’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இவர்களுடன் கல்வியில் பெரும் புரட்சி செய்த சோனம் வாங்சுக் போன்ற முக்கிய தலைவர்கள் இந்த நியாயமான மாணவர் போராட்டத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் உருவான ஒரு மீம்ஸ் இயக்கம், தற்போது நிஜ உலகில் ஒரு மிகப்பெரிய அரசியல் அமைப்பாக மாறி வருகிறது. இந்த போராட்டம் காரணமாக டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலையம், மாநில எல்லைப் பகுதிகள் மற்றும் ஜந்தர் மந்தர் சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கணக்கான ஆயுதப்படை காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் உளவுத்துறையும் இந்தத் திடீர் இளைஞர் எழுச்சியை மிக தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.