நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாத நிலையில் கடந்த சில நாட்களாக திமுக கூட்டணி கட்சிகளுடன் தவெக பேசி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.
தவெக ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையிலும் புதன்கிழமை தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க ஜோசப் விஜய் உரிமை கோரினார். ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் நேற்று இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஜோசப் விஜய் பேசி இருந்தார். மேலும் மே 10-ஆம் தேதிக்குள் புதிய அரசு அமையாவிட்டால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று சண்முகம் எச்சரித்துள்ளார். அதைத் தடுப்பதற்காகவே த.வெ.க-விற்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்ததாகக் கூறியுள்ளனர்.
தவெகவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க கைகோர்த்துள்ள நிலையில், சிபிஐஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். நேரடியாக அங்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நலன் கருதி நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், பொறுமையாக இருங்கள், நல்லதே நடக்கும் என பேசியதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, ஒரு தகவல் தீவிரமாகப் பரவியது. எதிரெதிர் துருவங்களாக அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினோ, தவெக ஆட்சியமைப்பதில் எந்த இடையூறும் செய்யமாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, சிபிஐ, சிபிஐஎம், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளுக்கு நெருக்கடியும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிக்க, விசிக, சிபிஐ, சிபிஐஎம், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள், ஜோசப் விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்ற எண்ணிக்கையை எட்டியுள்ள தவெக, நாளை ஆட்சியமைக்கத் தயாராகியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டாம் எனக் கூறினால் விசிக, இரு கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவு ஜோசப் விஜய்க்கு கிடைத்திருக்காது என்பது அரசியல் அறிந்தவர்கள் அனைவரும் அறிந்த உண்மை. இந்தச் சூழலை மென்மையாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின் கையாண்டுள்ளார் .
தவெக தலைவர் ஜோசப் விஜய், பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் ஸ்டாலினைத்தான் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், ஸ்டாலின் ஒருமுறை கூட ஜோசப் விஜய் பெயரையே சொல்லவில்லை. தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று, மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி அமைக்க நெருக்கடியைச் சந்தித்தபோதும், ஜோசப் விஜய்க்கு இடையூறு ஏற்படுத்தாமல் அமைதி காத்தார்.
அதோடு, தவெக ஆட்சி அமைக்க, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவு தேவை என்ற சூழலில், அதற்கும் ஸ்டாலின் உதவியுள்ளார். சிபிஐ, சிபிஐஎம், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தற்போதும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவே கூறியுள்ளன. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற ஔவையார் கூற்றை போல தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பதில் ஆட்சேபனை தெரிவிக்காமல் ஸ்டாலின் அமைதி காக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.