நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கப் பல்வேறு சட்டங்கள் உள்ள போதிலும், இந்தக் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மீண்டும் அப்படியொரு கொடூரம் தான் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
டெல்லியின் ராணி பாக் பகுதியில் திங்கள்கிழமை நடந்த இச்சம்பவத்தில், இருவர் சேர்ந்து தன்னை வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண் பிதாம்புரா குடிசைப்பகுதி வசித்து வருகிறார். மங்கோல்புரி உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வரும் அவர், திருமணமாகி மூன்று குழந்தைகள் கொண்டவர். மே 11-ந் தேதி இரவு, வேலை முடித்துத் திரும்பிய அந்தப் பெண், சரஸ்வதி விஹார் பேருந்து நிறுத்தத்தில் அருகே காத்திருந்தார்.
அப்போது அங்கு ஒரு பேருந்து நின்று கொண்டு இருந்தது. பேருந்தின் கதவருகே இருந்த நபரிடம் டைம் கேட்கச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணை அங்கிருந்த நபர் உள்ளே பலவந்தமாகப் பிடித்து இழுத்தார். பின், குற்றவாளிகள் நங்லோய் நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் காவல்துறை கூறுகிறது.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக டெல்லி காவல்துறை கூறியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி பாஜக தலைமையிலான அரசைக் கடுமையாகச் சாடியது. இது நிர்பயா வழக்கின் மறுவடிவம் எனவும், தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு சீர்குலைந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியது.