தூத்துக்குடி சங்கரப்பேரி வீட்டு வசதி வாரியம் காலனியை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற செல்லத்துரை. இவரது மகள் பிருந்தாதேவி. இவருக்கும் கிருஷ்ணகுமா என்பவருக்கும் திருமணமாகி 9 வயதில் மகனும் 6 வயதில் மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமார் குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வெல்டிங் காண்ட்ராக்ட் கம்பெனி நடத்தி வரும் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சரவணப்பிரியா. இவர்களுக்கு 10 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் இருந்து பிருந்தாதேவியை காணவில்லை. இதனால் முன்னாள் உதவி காவல் ஆய்வாளர் செல்லத்துரை தனது மகள் பிருந்தாதேவியை காணவில்லை என சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். முன்னாள் உதவி காவல் ஆய்வாளர் செல்லத்துரையின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிருந்தாதேவியின் வீட்டின் முன்புள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அதிகாலை சுமார் 5.20 மணியளவில் மாரிமுத்து தனது வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் செல்வதும், அதனை தொடர்ந்து சிறிது நேரத்திற்குள் பிருந்தா தேவி அவரது வீட்டிற்குள் செல்வதும் பதிவாகி உள்ளது. இதையடுத்து மாரிமுத்து மற்றும் அவரது மனைவி சரவணப்பிரியாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் சேர்ந்து பிருந்தாதேவிைய கொலை செய்து, உடலை எடுத்து சென்று புதைத்ததை ஒப்புக்கொண்டனர்.

விசாரணையில், பிருந்தாதேவியின் கணவர் கிருஷ்ணகுமார் குவைத்தில் பணியாற்றி வரும் நிலையில் மாரிமுத்துவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்த அறையில் தனது மனைவி சரவணப்பிரியா மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் பிருந்தாதேவிக்காக வீட்டின் கதவை மாரிமுத்து திறந்து வைத்துள்ளார். சிறிதுநேரத்தில் பிருந்தாதேவி வரவே இருவரும் மற்றொரு அறையில் தனிமையில் இருந்துள்ளனர். இதை சரவணப்பிரியா பார்த்துவிடவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணப்பிரியா சரமாரியாக பிருந்தாதேவியை தாக்கியுள்ளார்.
மேலும் கணவர் கண் எதிரிலேயே தலையணையை எடுத்து பிருந்தாதேவியை முகத்தில் அழுத்தி கொன்றுள்ளார். பின்னர் கணவர் உதவியுடன் பிருந்தாதேவி உடலை ஒரு சாக்கு மூடையில் கட்டி வைத்தார். தொடர்ந்து தனது தம்பி கார்த்திக் உதவியுடன் சரவணப்பிரியா மற்றம் மாரிமுத்து ஆகியோர் பின்பக்க வழியாக பிருந்தாதேவி உடலை காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். ஓட்டப்பிடாரம் அடுத்த சிலோன் காலனி பகுதியில் உள்ள மாரிமுத்துவிற்கு சொந்தமான நிலத்தில் குழி தோண்டி புதைத்துவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து, மாரிமுத்து, சரவணப்பிரியா தம்பதியினரை கைது செய்துள்ளனர். காருடன் தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகின்றனர்.