தெலுங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், மனுக்குருவில், வழக்கமான குடிபோதை மற்றும் வாகனம் ஓட்டுதல் சோதனை நடத்தியபோது மதுபோதையில் இருந்த வாலிபர் காவல்துறையினரைக் கொலை செய்யும் அளவிற்கு அரிவாளை கொண்டு காவல்துறையினரை மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், மானுகுருவின் தோக்குடம் பகுதியில் உள்ள சம்மக்கா-சரக்கா கோவிலில் காவல்துறையினர் வாகனச் சோதனைகளை நடத்தினர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சோலம் நாகேஸ்வர ராவ் என்ற நபர் தடுத்து நிறுத்தி, அவருக்கு மூச்சுப் பகுப்பாய்வு சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையில் அவர் 80 சதவிகிதம் மதிப்பில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை தன் மீது வழக்குப் பதிவு செய்ததால் அவமானமடைந்த சோலம் நாகேஸ்வர ராவ், வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே ஒரு பெரிய வேட்டைக் கத்தியுடன் திரும்பினார். “என்னைத் தடுக்கப் போகிறீர்களா? எனக்குச் சோதனைகள் செய்யப் போகிறீர்களா? உங்கள் நிலையைப் பார்க்கப் போகிறீர்களா?” என்று கூறி காவல்துறையினரைத் தாக்க முயன்றார். போதையில் தள்ளாடியபடி, அவர் கத்தியால் அனைவரையும் அச்சுறுத்தினார்.
சோலம் நாகேஸ்வர ராவின் தாக்குதலை சாமர்த்தியமாகத் தவிர்த்த காவல்துறையினர் உடனடியாக அவனைச் சூழ்ந்துகொள்ள பின்னர் நாகேஸ்வர ராவை பிடித்தனர். இதனைத் தொடர்ந்து பணியில் இருந்த அதிகாரிகளைத் தாக்க முயன்றது மற்றும் ஆயுதத்தைக் காட்டி மிரட்டியது ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போதை ஆசாமியின் அட்ராசிட்டி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.