தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் உயர் அதிகாரிகள் சொன்னதால் அடித்தோம் என்று சொல்வதை ஏற்க முடியாது.. தந்தையும் மகனும் நிராயுதபாணியாக இருந்தும் இரவு முழுவதும் இரக்கமின்றி தாக்கியுள்ளனர். பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது என்று தெரிவித்தனர்.
இந்தியாவில் காவல்நிலைய மரணங்களுக்காக, காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது என்பது கொஞ்சம் அரிதான விஷயம். ஆனால், சாத்தான்குளம் வழக்கில், 9 காவலர்களுக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதித்திருப்பது, முன்னெப்போதும் இல்லாத தீர்ப்பாகும். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கொரோனா ஊரடங்கின்போது குறித்த நேரத்தைத் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி, இவர்கள் இருவரையும் கடந்த 2020 ஜூன் 19-ந் தேதி இரவு சாத்தான்குளம் காவல்துறையினர், காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர்.
இதில் ஜூன் 22-ந் தேதி பென்னிக்ஸும், 23-ந் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்படி, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதை கொலை வழக்காக சிபிஐ பதிவு செய்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்புசார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பால்துரை சிறையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 23-ந் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். ‘‘தந்தை, மகன் இருவரையும் கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உருவாகும் வகையில் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறாக, மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு இருந்துள்ளன. இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இருவரையும் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை தாக்கியுள்ளனர். தவிர, இருவர் மீதும் காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.
காவல்துறையினர் தாக்கியதால்தான் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. சாட்சியங்களின் அடிப்படையில் 9 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்படுகிறது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ந் தேதி அறிவிக்கப்படும்’’ என தெரிவித்தார்.
இதையடுத்து, குற்றவாளிகள் 9 பேருக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் உடல், மனநல பரிசோதனை நடத்தப்பட்டு, அதற்கான அறிக்கையை மருத்துவர்கள் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

நீதிபதி முத்துக்குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தண்டனை விவரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யாததால், ஏப்ரல் 2-ந் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்திருந்தார். இதற்கிடையே, குற்றவாளிகள் 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என, உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நீதிபதி முத்துக்குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. “இது அரிதினும் அரிதான வழக்கு. தந்தை, மகன் இருவரையும் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, விடிய விடிய தாக்கி, கொடுமையாக கொலை செய்துள்ளனர். ஜெயராஜ், பெனிக்ஸை பழிவாங்கும் நோக்கில் தாக்கியுள்ளனர். அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். காவல் மரணங்கள் கொடூரமானடு என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. ஆனாலும், இந்தக் குற்றம் குறைந்தபாடில்லை.
அண்மையில் கூட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணமடைந்தார். சாத்தான்குளம் சம்பவத்தில், காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர் தாக்கியதால் மற்ற காவலர்களும் இணைந்து தாக்கியதாகக் கூறியுள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் உயரிதிகாரிகளிடம் கூறி இந்தச் சம்பவத்தை தடுத்திருக்கலாம். ஆனால், குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அந்த வகையில் அவர்களும் குற்றவாளிகளே. எனவே, குற்றவாளிகள் 9 பேருக்கும் இந்த நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது,” என்று தீர்ப்பு வழங்கினார்.
சாத்தான்குளம் சம்பவம் போலவே, கேரளாவில் உதய்குமார் வழக்கும் காவல்நிலைய மரணத்திற்கு பெயர் பெற்ற வழக்காகும். கடந்த 2005-ல் திருவனந்தபுரம் காவல்துறையால் திருட்டு சந்தேகத்தில், பிடித்து செல்லப்பட்ட உதய், கனமான இரும்பு பைப்பால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில், 2018-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரு காவல்துறை அதிகாரிகளான கே. ஜித்குமார், எஸ்.வி. ஸ்ரீகுமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. காவல் நிலைய மரண வழக்கில், காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
தமிழகத்தில் சாத்தான்குளம் வழக்கை போல, 1998-99 காலகட்டத்தில் சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர், ஒரு நிலத்தகராறு தொடர்பாக கியூ பிரிவு காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ராஜன் லாக்-அப்பில் இருக்கும்போது கடுமையான சித்தரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார். அவரது உடலை காவல்துறையினர் ரகசியமாக அப்புறப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ராஜனின் மனைவி ராஜம்மாள் தனது கணவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு பல ஆண்டுகள் நீடித்தது. உள்ளூர் காவல்துறையினரின் விசாரணையில் திருப்தி இல்லாததால், வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் ராஜன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படவில்லை. இந்த வழக்கின் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனையும், ரூ.15 லட்சம் அபராதமும் விதித்தார். இதேபோல் உதவி ஆய்வாளர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கின் முடிவில், பாதிக்கப்பட்ட ராஜம்மாளுக்கு அரசு தரப்பில் பெரும் தொகை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.