திமுக பற்றி உண்மைக்கு புறம்பாக அவதூறு வகையில் பேசியதாக கூறி சென்னை திருவிக நகர் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ பல்லவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சியை பிடித்த பிறகு சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பல மணி நேரம் மின்வெட்டு உருவாகியுள்ளது.
இதனால், ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பிரச்னையை தீர்க்காத மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், சென்னை திருவிக நகர் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு பல்லவி வெற்றி பெற்றவர்.

இவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் திமுகவினர் தான் மின்வெட்டுக்கு காரணம். ஊழியர்களுக்கு பணம் கொடுத்து தவெகவிற்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் திமுகவினர் மின்வெட்டை ஏற்படுத்துவதாக கூறியிருந்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான சரவணன் சார்பில் தவெக எம்எல்ஏ பல்லவிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சென்னை கொளத்தூர் மற்றும் பிற இடங்களில் ஏற்பட்ட மின்தடை பற்றி பேசி உள்ளீர்கள்.

அதில் திமுக மீது அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளீர்கள். திமுகவை சேர்ந்தவர் தான் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதற்கு முக்கிய காரணம் என்றும், திமுகவை சேர்ந்தவர்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து மின்சாரத்தை தடை செய்வதாகவும் கூறி உள்ளீர்கள்.
ராயபுரம் தொகுதியில் திமுகவை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து மின்வெட்டு ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளீர்கள். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அதோடு திமுகவினரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பாக குற்றம்சாட்டி உள்ளீர்கள். இதனால் 3 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தக்கட்டமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.