எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர் மற்றும் மருமகன் ஆகியோரின் செயல்பாடுகள் அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருந்து வருவதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். 2026- ஆம் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுகவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே வி.கே. சசிகலா, OPS ஆகியோர் தனித்து இயங்கி வந்த நிலையில், TTV. தினகரன் அமமுக என்ற அரசியல் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். தற்போது இவர்களுடன் செங்கோட்டையனும் இணைந்துள்ளார்.
தற்போது செங்கோட்டையன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு பிரச்சனைகளை கொடுக்க தொடங்கியுள்ளார். திமுகவை குடும்ப கட்சி என்று எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுகவை எடப்பாடி பழனிசாமி குடும்பம் இயக்குவதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளித்தார்.
அப்போது, தேர்தல் ஆணையத்திற்கு 258 பக்கங்களில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக சொல்ல முடியாது. அதேபோல் அதிமுக குடும்ப கட்சியாக இயங்கி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். என்னை பாஜக இயக்கவில்லை. 53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். என்னை தனிப்பட்ட முறையைல் யாரும் இயக்க முடியாது. என்னுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர் மற்றும் மருமகன் தொகுதிகளுக்குள் வருவதும், எங்கு எங்கு செயல்படுகிறார்கள், யாரையெல்லாம் எப்படி இயக்குகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும்.
அதனைத்தான் நானும் சொன்னேன். அவர்களின் செயல்பாடுகள் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும். அதிமுகவில் இருந்து பலரும் திமுகவுக்கு செல்வதால், அதிமுக கரைந்து கொண்டே வருகிறதா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும். அதிமுகவில் இருந்து என்னுடன் யார் பேசுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தினால், அவர்களுக்கும் ஆபத்து என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.