கர்நாடகாவில் மனைவியை கொன்ற தோல் மருத்துவர் 4-5 பெண்களுக்கு, ‛‛உனக்காக தான் மனைவியை கொன்றேன்.. ப்ளீஸ் என்னை திருமணம் செய்து கொள்” என கெஞ்சி மெசேஜ் அனுப்பிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் மணிப்பாலை சேர்ந்த அறுவை சிகிச்சை ஸ்பெஷலிஸ் மகேந்திரா பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2024 மே 26-ந் தேதி திருமணம் நடந்தது. மனைவி பெயர் கிருத்திகா. இவரும் தோல்நோய் மருத்துவராக இருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கிருத்திகா மர்மமான முறையில் இறந்தார். கணவர் மகேந்திரா பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கூறி நிலையில் கிருத்திகாவின் உறவினர்கள் விடவில்லை. அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் தான் கிருத்திகா இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் கிருத்திகா இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு இரைப்பை அழற்சி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் மகேந்திர ரெட்டியும் மருத்துவர் என்பதால் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார். இதனால் மகேந்திரா ஜிஎஸ் சிகிச்சை அளித்தார். அப்போது IV மூலமாக மருந்து செலுத்தினார். அப்போது தான் மயக்கமருந்தை அதிகமாக கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 14-ந் தேதி மகேந்திராவை காவல்துறையினர் உடுப்பி மாவட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில், மகேந்திரா திட்டமிட்டு கொலை செய்திருப்பதும், கிருத்திகாவுடன் வாழ பிடிக்காததால் அவரை தீர்த்து கட்டியதும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி கிருத்திகாவை கொன்ற பிறகு அவர் குற்றத்தை உணரவில்லை. மாறாக அவர் 4-5 பெண்களுக்கு மெசேஜ் அனுப்பி காதல் பிச்சை கேட்டுள்ளார்.
அதாவது, ‛உனக்காக தான் என் மனைவியை கொன்றேன். என்னை திருமணம் செய்து கொள் ப்ளீஸ்’ என மெசேஜ் அனுப்பி உள்ளார். மகேந்திராவின் செல்போன், மடிக்கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ள காவல்துறை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பினர். அதில் உள்ள டேட்டாக்கள் மூலமாக முக்கிய தகவல் தெரியவந்துள்ளது.

இதுபற்றி காவல்துறை தரப்பில் கூறுகையில், ‛‛மனைவியை கொன்ற மருத்துவர் தனது பழைய உறவுகளை புதுப்பிக்க நினைத்து தனது பழைய தோழிகளுக்கு மெசேஜ் அனுப்பி பேச தொடங்கினார். சுமார் 4- 5 பெண்களுக்கு அவர் மெசஜே் அனுப்பி உள்ளார். குறிப்பாக மருத்துவ துறையில் பணியாற்றும் ஒருவருக்கு போன்பே செயலியில் மெசேஜ் அனுப்பி உள்ளார். அந்த பெண் மருத்துவர் இல்லை. வேறு பணி செய்கிறார். அவர் ஏற்கனவே மகேந்திராவை ஏற்க மறுத்தவர். இருப்பினும் இப்போது அனுப்பிய மெசேஜில், ‛என் மனைவியை உனக்காக தான் கொன்றேன்.. என்னை திருமணம் செய்து கொள்’ என்று கூறியுள்ளார்.
அதை கேட்ட அந்த பெண் உடனடியாக ‛பிளாக்’ செய்துள்ளார். இருப்பினும் பிற செயலிகள் மூலமாக அவரை தொடர்பு கொண்டுள்ளார். அனைத்தும் அவர் பிளாக் செய்துள்ளார். மருத்துவ துறையில் பணியாற்றி பெண்ணுக்கு அவர் மெசேஜ் அனுப்பி உள்ளார். அந்த பெண்ணை அழைத்து விசாரித்தோம். அப்போது மகேந்திராவை அவரது திருமணத்துக்கு முன்பாகவே பிளாக் செய்ததாக தெரிவித்தார். அதன்பிறகு திருமணம் பற்றி அறிந்தார். இதையடுத்து அந்த பெண் மகேந்திராவுடன் பேசவில்லை. இப்போது மனைவியை கொன்றுவிட்டதாக கூறி மீண்டும் உறவை புதுப்பிக்க நினைத்தார். அந்த பெண் அவரிடம் பேசவில்லை.

தன்னிடம் பேசுவதற்காகவே மனைவியை கொன்றதாக மகேந்திரா கூறுகிறார் என்று அந்த பெண் நினைத்தார். அவருக்கு இந்த கொலை பற்றி எதுவும் தெரியாது. அதேபோல் 2023-ஆம் ஆண்டு வரை மும்பையை சேர்ந்த பெண்ணுடன் மகேந்திரா தொடர்பில் இருந்தார். பலமுறை சந்தித்துள்ளார். திருமணம் செய்து கொள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கடந்த செப்டம்பரில் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு எனது மனைவி விரைவில் இறந்து விடுவாள் என்று ஜோதிடர் சொல்லி உள்ளார். என் காதல் உண்மையானது என கூறியுள்ளார். அதன்பிறகு மனைவி இறந்ததாக கூறி திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். இப்படியாக அவர் 4-5 பெண்களிடம் பேசியுள்ளார்” என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.