நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். கோயம்புத்தூர் ஆள் நடமாட்டம் இல்லாத விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி, கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே ஆட்டோமொபைல்ஸ் கடை நடத்தும் இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால், மாணவி தனது காதலனுடன் வெளியில் வந்து இருக்கிறார். கோயம்புத்தூர் விமான நிலையம் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரில் அமர்ந்தபடி இருவரும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர், காரில் தனியாக காதல் ஜோடி இருப்பதை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து காரின் கதவை தட்டி திறக்குமாறு மிரட்டி இருக்கின்றனர். ஆனால் அச்சத்தில் காதல் ஜோடி காரின் கதவை திறக்கவில்லை. தொடர்ந்து அரிவாளால் காரின் கண்ணாடியை உடைத்து காதலனை தாக்கியுள்ளனர். இதன்பின் மாணவியை அந்த கும்பல் இழுக்க, அந்த இளைஞர் விடாமல் பிடித்துக் கொண்டுள்ளார்.
ஆனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அரிவாளால் இளைஞரின் தலையில் அடித்துள்ளது. இதனால் அவர் மயங்கி இருக்கிறார். இதனிடையே மாணவி சத்தம் போட்டுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் மாணவியை மறைவான இடத்திற்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே மயக்கம் தெளிந்த இளைஞர், தனது காதலியை தேடி இருக்கிறார். காணவில்லை என்று தெரிந்த பின், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்பின் மாணவியை சுமார் ஒரு மணி நேரமாக தேடி இருக்கின்றனர். அப்போது புதரில் மாணவி நிர்வாண கோலத்தில் கிடந்திருக்கிறார். அவரது உடல் முழுக்க காயம் இருந்திருக்கிறது. பின்னர் காவல்துறையினர் மாணவியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 3 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தது.
இந்நிலையில் கோயம்புத்தூர் துடியலூர் அருகே 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர். 3 பேரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்த போது, காவலர் சந்திரசேகரை அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதனால் தற்காப்புக்காக 2 பேர் இரு கால்களிலும், ஒருவரை ஒரு காலிலும் சுட்டுள்ளனர். பிடிபட்ட மூவரின் பெயர் சதீஷ், கார்த்திக் மற்றும் தவசி என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.