பள்ளிகளில் ஒழுக்கத்தை போதிக்கக்கூடிய ஆசிரியை கால்களுக்கு பள்ளி மாணவிகள் 2 பேர் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகவேகமாக பரவி வருகின்றன. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறப்பாக போதித்து அவர்களை இந்த சமுதாயத்தில் சிறந்த முறையில் எதிர்கொண்டு வாழ சொல்லி கொடுக்கும் பணி ஆசிரியர் பணியாகும். அப்படிப்பட்ட பணியை செய்யவேண்டிய ஆசிரியர்களில் சிலர் தரம் தாழ்ந்த செயல்களை செய்து ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் களங்கம் ஏற்படுத்து கின்றனர்.
ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், முள்ளைய்ய பூடி மண்டலத்தில் உள்ள பந்தபள்ளி என்ற கிராமத்தில் பெண்கள் பழங்குடியினர் கிரிஜன ஆசிரம அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றார்கள்.
இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சுஜாதா என்பவர் பள்ளி வகுப்பிலேயே நாற்காலியில் சாய்ந்து கொண்டு, ஆசிரியர் செல்போனில் பேசிக்கொண்டிருக்க, பள்ளி மாணவிகள் 2 பேர், ஆசிரியையின் கால்களுக்கு மசாஜ் செய்கிறார்கள்.. இதனை அதே பள்ளியில் யாரோ செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிட்டனர். பாடம் சொல்லித் தரும் நேரத்தில் இந்த காரியத்தை செய்ய சொல்லி உள்ளார்.. பள்ளியில் ஆசிரியை செய்யும் இந்த காரியத்தை கண்டு அனைவருமே அதிர்ச்சியடைந்தனர். தற்போது நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்து போனில் பேசி கொண்டிருக்கும் சுஜாதாவின் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.