தேர்தல் ஆணைய உதவியோடு வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. நான் தோல்வி அடையவில்லை. எனவே நான் எனது ராஜினாமா கடிதத்தை சமர்பிக்க மாட்டேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இதில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் பாஜக 207 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 80 இடங்களிலும், இடதுசரிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி இந்த தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதவி விலக மாட்டேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் செய்தியாளர்களின் கேள்விக்கு மம்தா பானர்ஜி பதிலளித்தார். அப்போது, “நான் தோல்வி அடையவில்லை. எனவே நான் ராஜ்பவனுக்கு செல்லப்போவது இல்லை. நான் எனது ராஜினாமா கடிதத்தை சமர்பிக்க மாட்டேன். தேர்தல் ஆணைய உதவியோடு வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் நான் தாக்கப்பட்டேன்.
நீதிமன்றம் கூட எங்களுக்கு நீதி வழங்க தவறிவிட்டது. என் வாழ்நாளில் இவ்வளவு மோசமான தேர்தலை பார்த்ததே இல்லை” . மேற்கு வங்க தேர்தலில் 100 தொகுதிகள் திருடப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் உடைந்தையாக செயல்பட்டதாகவும் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.