திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தனது சொந்தத் தொகுதியான கொளத்தூருக்கு நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கண்ணீர் விட்டு கலங்கிய காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. தவெக 108 இடங்கலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும் மற்றும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்றுள்ள கட்சி என்ற முறையில், அந்தக் கட்சிக்கே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். ஆனால் தவெக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை என்ற நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணிகளை சேர்ந்த கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் தோல்விக்குப் பிறகு அனைத்து திமுக வேட்பாளர்களும் அந்தந்தத் தொகுதிக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் முன்னதாகவே உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவைச் செயல்படுத்தும் விதமாக, முதல் நபராகத் தனது தோல்வியடைந்த தொகுதியான கொளத்தூருக்கே அவர் இன்று வருகை தந்தார்.
தோல்வியால் சோர்வடையாமல் தொகுதிக்குள் நுழைந்த மு.க. ஸ்டாலினுக்கு கொளத்தூர் மக்கள் திரளாகத் திரண்டு வந்து கண்ணீருடன் அன்பு வரவேற்பு அளித்தனர். பெண்கள் மற்றும் இளைஞர்கள் அவரை வரவேற்றனர். பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், “மக்களின் தீர்ப்பை நான் தலைவணங்கி ஏற்கிறேன். கடந்த முறை என்னை வெற்றி பெறச் செய்தீர்கள், இம்முறை மாற்றத்தை விரும்பியுள்ளீர்கள். எதுவாக இருந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு நான் எப்போதும் ஒரு சகோதரனாகப் பணியாற்றுவேன்” என மு.க. ஸ்டாலின் உருக்கமாகக் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது சென்னை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு உடன் இருந்தார். தேர்தல் பரப்புரையின் போது கொளத்தூரில் ஸ்டாலின் தொகுதியில் உழைத்தவர் அவர். இன்று மக்கள் மத்தியில் ஸ்டாலின் காரில் சென்ற போது, ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட சேகர்பாபு காரிலேயே கண்கலங்கி அழுதார்.