அரசு பேருந்து ஓட்டுநர் – நடத்துனர்கள் பயணிகளிடம் சமீப காலமாக ஆங்காங்கே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் செல்வது, தவறாக பேசுவது, வாக்குவாதம் செய்வது உள்ளிட்ட வீடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. ஆனால் பெரும்பாலான அரசு பேருந்து, நடத்துனர்கள் அப்படியானவர்கள் இல்லை என்பதை கோயம்புத்தூரில் நடந்த சம்பவதால் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோயம்புத்தூர் மண்டலத்தில் அன்னூர் கிளையில் ஓட்டுநராக பணியாற்றி வரும் சசிகுமார். அதேபோல் நடத்துனராக பணியாற்றி வரும் தினேஷ் குமார். இவர்கள் 2 பேரும் கோயம்புத்தூர் அன்னூர் – காந்திபுரம் வழித்தட 45C பேருந்தில் பணியாற்றி வருகின்றனர். அப்போது ஆண் பயணி ஒருவர் கணேஷ்புரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறினார். அவர் அம்மன் கோவிலுக்கு பயணச்சீட்டு எடுத்தார். பேருந்து கோவில்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று அந்த ஆண் பயணியின் உடலில் இருந்து அதிகமான வியர்வை வெளியேறியது. இதை நடத்துனர் தினேஷ் குமார் பார்த்தார். உடனடியாக அவரிடம் சென்று நலம் விசாரித்தார். அதற்கு அந்த பயணி தனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறினார். ஆனால் உண்மையில் அந்த ஆண் பயணி ஏதோ உடல்நல பிரச்சனைக்கு உள்ளாகி இருப்பதை தினேஷ் குமார் அறிந்தார். அதோடு பயணி சிரமப்படுவதை உணர்ந்தார். இதனால் அவர் உடனடியாக பயணிக்கு தண்ணீர் கொடுத்தார். அதோடு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறினார். ஆனால் ஆண் பயணி மறுத்தார்.

இருப்பினும் நடத்துனர் தினேஷ் குமார் விடவில்லை. சம்பவம் குறித்து ஓட்டுநர் சசிகுமாரிடம் கூறினார். பேருந்து குறும்பபாளையத்தில் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து ஓட்டுநர் சசிகுமார் பேருந்தை அங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இரவு 7.45 மணிக்கு பேருந்து மருத்துவமனை வளாகத்தில் நுழைந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர் பயணிக்கு சிகிச்சை அளித்தனர். அந்த பயணி உடல்நலம் தேறினார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு தான் பேருந்தை அங்கிருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துனர் தினேஷ் குமார் ஆகியோர் எடுத்து சென்றனர். இதுபற்றி காவல் நிலையம் மற்றும் கிளை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு 25 நிமிடங்கள் தாமதமாக பேருந்து சென்றது. இந்த சமயத்தில் பேருந்தில் 19 பயணிகள் இருந்தனர்கள். அவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தனர். மருத்துவமனை சென்றால் காலதாமதம் ஆனாலும் கூட அவர்களும் ஆதரவு வழங்கினர். இதனால் தான் ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துனர் தினேஷ் குமார் ஆகியோரால் அந்த பயணிக்கு உதவி செய்ய முடிந்தது. இதையடுத்து அவர்கள் பயணிகளுக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது ஓட்டுநர் சசிகுமார், நடத்துனர் தினேஷ் குமார் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.