ஆண்ட கட்சிக்கும்… ஆளும் கட்சிக்கும்… சவால்விடும் கட்சியாக தேமுதிக உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை பிரதான அரசியல்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 2026 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிய ஆளும் திமுக பல்வேறு கட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மறுபுறம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ‘உள்ளம் தேடி’- இல்லம் நாடி’(வாக்குச் சாவடி நிர்வாகிகளுடனான சந்திப்பு), ‘கேப்டனின் ரத யாத்திரை’–’மக்களை தேடி மக்கள் தலைவர்’ (மக்களுடன் சந்திப்பு) ஆகிய பெயர்களை கொண்ட தமிழகம் முழுவதுமான சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நேற்று இரவு ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சார பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேமுதிக பெறும். ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் சவால்விடும் வகையில் தமிழகத்தில் வாக்குச் சாவடி முகவர்களை நியமித்துள்ளோம். அடுத்ததாக கடலூரில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாட்டை நடத்த இருக்கிறோம்.
அதற்காக அனைவரும் கடலூரை நோக்கி வரவேண்டும். அந்த மாநாட்டின் வெற்றிதான் நமது 2026 தேர்தல் வெற்றிக்கான அச்சாரம். வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியை அமைப்போம். எஸ்ஐஆர் பணிகளின் போது நமது வாக்கு இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். அப்படி உறுதிப்படுத்தி விட்டால் நமது வாக்கை யாரும் திருட முடியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.