“நாங்கள் ஒன்றாக வந்துள்ளோம். இனி ஒன்றாகவே இருப்போம்” என்று 20 ஆண்டு பகையை மறந்து ராஜ் தாக்கரேவை அரவணைத்து உத்தவ் தாக்கரே தெரிவித்தார். சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரேவின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரே ஆகியோர் சிவசேனாவில் ஒன்றாக இணைந்து பயணம் செய்தனர். ஆனால் சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ராஜ் தாக்கரே கட்சியில் இருந்து கடந்த 2005-ஆம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே வெளியேறினார்.
அதன்பின்னர் ராஜ் தாக்கரே நவநிர்மான் சேனா என்ற தனி கட்சியை தொடங்கி தலைரவராக செயல்பட்டு வருகிறார். இருவரும் பெரியப்பா – சித்தப்பா மகன்கள் என்றாலும் கூட குடும்ப விழாவில் ஒன்றாக பங்கேற்பது இல்லை. 20 ஆண்டுகளாக இருவர் இடையேயும் பேச்சுவார்த்தை இல்லாமல் பகை தொடர்ந்தது.

ஆனால் சமீபத்தில் மகாராஷ்டிராவில் மும்மொழி கொள்கையின் ஒருபகுதியாக ஹிந்தி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹிந்தி கட்டாயம் என்பதன் மூலம் மராத்தி மொழி பாதிக்கப்படும் என்று போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து ஆளும் பாஜக அரசு அந்த கொள்கையில் இருந்து பின்வாங்கியது.
இதையடுத்து இன்று வோர்லியில் உள்ள என்எஸ்சிஐ அரங்கில் அவாஜ் மராத்தி சா (வாய்ஸ் ஆப் மராத்தி) என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. இதில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக பங்கேற்றனர். 20 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒன்றாக மேடை ஏறினர். இந்த விழாவில் உத்தவ் தாக்கரே பேசும்போது, ‛‛நங்கள் ஒன்றாக வந்துள்ளோம். இனி ஒன்றாகவே இருப்போம்” என்றார்.

இதன்மூலம் வரும் காலத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் அரசியலில் சேர்ந்து செயல்பட உள்ளார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) அணியின் தலைவராக உள்ளார். அதேபோல் ராஜ்நாத் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவராக உள்ளார். விரைவில் இரு கட்சிகளும் ஒன்றாக இணைய உள்ளதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.