தவெக கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் பட்டியலில் அதிமுக இருக்கிறதா? இல்லையா என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் குசும்பாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையை அடுத்த பனையூரில் நேற்று நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், அரசியல் ஆதாயத்திற்காக மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி வேற்றுமையை பாஜக ஏற்படுத்துகிறது. அவர்களின் விஷமத்தனமான வேலைகள் தமிழ்நாட்டில் எடுபடாது. பெரியார், அண்ணாவை அவமதித்து அரசியல் செய்தால், பாஜக ஒருபோதும் வெற்றியை பெற இயலாது.
சுயநல அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவோ, அதிமுகவோ அல்ல தவெக. பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை. அதில் தவெக உறுதியாக இருக்கிறது. தவெக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவுக்கு எதிராகவே இருக்கும். அதில் எந்த சமரசமும் கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம் என்று விஜய் தெரிவித்து இருந்தார்.
மேலும், விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே திமுகவை மட்டுமே அட்டாக் செய்து வருகிறார். பாஜகவை கொள்கை எதிரியாக கூறி வரும் தவெக, அவர்களுடன் கூட்டணி வைத்த அதிமுகவை பெரிதாக விமர்சிக்கவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான அறிக்கையிலும் கூட, திமுகவின் பெயரே அதிகமாக இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் விஜய் பேச்சு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெகவை ஒரு மாற்று சக்தியாக கருதி இந்த கருத்துகளை கூறி இருப்பார் என்று நம்புகிறேன். ஆனால் அதிமுகவை பற்றி விஜய் வெளிப்படையாக பேசியதாக தெரியவில்லை. கொள்கை எதிரிகளின் பட்டியலில் அதிமுக இருக்கிறதா, இல்லையா என்று விஜய் பேச்சில் புரிந்து கொள்ள முடியவில்லை.
திமுக ஆளுங்கட்சி என்பதால், அதனை எதிர்ப்பது இயல்பான ஒன்று. ஆளுங்கட்சியை எதிர்த்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்பது வாடிக்கையான விஷயம் தான். அதில் விஜய் இந்த கருத்தை சொல்லி இருக்கிறார். ஆனால் அதிமுகவை பற்றி எந்த கருத்தையும் சொல்லாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. கொள்கை எதிரியாக பாஜவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் கூறி இருக்கிறார். ஆனால் அதிமுகவை விமர்சித்திருந்தாலும், அதிமுகவும் கொள்கை எதிரி பட்டியலில் உள்ளது என்ற கருத்தை விஜய் கூறவில்லை என்று தொல் திருமாவளவன் குசும்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.