புதுச்சேரியில் விஜய் தனது தவெக வேட்பாளருக்கு பதில் அவரை எதிர்த்து களமிறங்கியுள்ள பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த சம்பவம் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வரும் 9-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தை போலவே புதுச்சேரியில் தனித்து களமிறங்கி உள்ளது.
இதையடுத்து விஜய் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை முதல் புதுச்சேரியில் திறந்த வாகனத்தில் நின்று விஜய் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். புதுச்சேரியின் மணவெளி சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் ராமு போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தவளக்குப்பம் பகுதியில் இன்று விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திரண்டு நின்ற தொண்டர்கள் மத்தியில் பிரசார வாகனத்தின் மேல் நின்று விஜய் பேசினார். விஜய் அருகே மணவெளி சட்டசபை தொகுதியின் தவெக வேட்பாளர் ராமு நின்றிருந்தார்.
அப்போது, ”மணவெளி தொகுதியில் செல்வத்துக்கு ஆதரவு கொடுங்க” என்று பேசியதை கண்டு வேட்பாளர் ராமு அதிர்ச்சி அடைந்தார். தனது பெயர் செல்வம் இல்லை ராமு என தெரிவிக்க சுதாரித்த விஜய், ”ராமுவிற்கு ஆதரவு கொடுங்கள்” என்று கூறினார். மணவெளி தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக பாஜகவின் ஏம்பலம் ஆர் செல்வம் உள்ள நிலையில் இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மணவெளி தொகுதி பிரசாரத்தின்போது தவெக வேட்பாளர் ராமுவிற்கு பதில் பாஜக வேட்பாளர் எம்பலம் செல்வத்தின் பெயரை விஜய் உச்சரித்து குழப்பத்துடன் வாக்கு சேகரித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.