ஆம்பூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மருமகன் மாமனாரை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளத் துப்பாக்கி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் ஊராட்சி ஒன்றியம், தேவலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி ஓட்டும் ரவி. இவருடைய மகள் பிரீத்தி, அதே பகுதியைச் சேர்ந்த வெல்டிங் வேலை செய்து வரும் சதீஷ் என்பவரைக் காதலித்து சில வருஷத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 4 மாதக் குழந்தையும் உள்ளனர்.
ஏற்கனவே, சதீஷுக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் இருந்ததும், அவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்று சதீஷின் தாய் வீட்டிலேயே வசித்து வரும் நிலையில் பிரீத்தி அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்திருந்தார். பெங்களூரு மற்றும் உள்ளூர் பகுதிகளில் வெல்டிங் வேலைக்குச் சென்று வந்த சதீஷ், நாளடைவில் கடுமையான மதுப் பழக்கத்திற்கு அடிமையானார். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் தனது மனைவி பிரீத்தியை அடித்துத் துன்புறுத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கணவனின் கொடுமை தாளாமல், பிரீத்தி தனது 2 குழந்தைகளுடன் கோபித்துக்கொண்டு தந்தை ரவியின் வீட்டிற்குத் தஞ்சம் புகுந்தார். தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனிடமிருந்து நிரந்தரமாக விடுபட நினைத்த பிரீத்தி, சமீபத்தில் சதீஷுக்கு விவாகரத்து கோரி சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி வைத்தார். இந்த நோட்டீஸை பார்த்ததுமே சதீஷ் எரிச்சலும் கோபமும் அடைந்தார்.. அந்த ஆத்திரத்தில், மதுபோதையில் மாமனார் வீட்டிற்குச் சென்று பிரீத்தியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வழக்கம்போல போதையில் வந்த சதீஷ், பிரீத்தியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது மகளின் வாழ்க்கையைச் சீரழிப்பதாகக் கருதி தந்தை ரவி, சதீஷைத் தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் அங்கிருந்து வெளியேறிய சதீஷ், பக்கத்து தெருவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு ஓடினார்.. அங்கு அவர் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து கண் இமைக்கும் நேரத்தில் ரவியை நோக்கித் துப்பாக்கியால் சுட, குண்டு பாய்ந்த ரவி ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மயங்கிய நிலையில் இருந்த ரவியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன் தப்பியோடிய சதீஷை பிடிக்கதேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.