தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்! எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தருமபுரியில் அதிமுக வேட்பாளர் பாலக்கோடு அன்பழகனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது, பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் வெள்ளைக் குடையுடன் போனவர்தான் ஸ்டாலின். தற்போது இரட்டை வேடம் போடுகிறார். தமிழகம் முழுவதும் கஞ்சா, போதை புழக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் குற்றச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. நாங்கள் அதிமுகவை விற்கவில்லை. நீங்கள்தான் காங்கிரஸ் கட்சியிடம் திமுகவை விற்பனை செய்துவிட்டீர்கள். காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியும் ஆ. ராசாவும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த போதே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் நம்மை பற்றி பேசலாமா?
மேலும் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலின் அவரை கைதியாக தான் வைத்திருந்தார். சொந்த அப்பாவையே அப்படி வைத்தவர், நாட்டு மக்களை எப்படி வைப்பார்” என தனிப்பட்ட முறையில் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது! தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்!
பண்பற்ற பழனிசாமி அவர்களே, தலைவர் கலைஞரும் நானும் மக்களைச் சந்தித்து முதலமைச்சரானவர்கள். உங்களைப் போல, கூவத்தூர் கும்மாளங்களால், கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பொறுப்பை ஏலத்துக்கு எடுத்தவர்கள் அல்ல!. எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! தமிழ்நாட்டுக்கு மக்கள் என்றுமே அந்தத் தகுதியை உங்களுக்கு வழங்க மாட்டார்கள்! மே 4: மக்களின் (Judgement Day)-ஜட்ஜ்மெண்ட் டேவில் உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!