தமிழகத்தில் சமீபகாலமாகவே படித்த பெண்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் பெண்கள், திருட்டு வழக்கில் கைதாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டுள்ளது. கடந்த வாரம் காஞ்சிபுரத்தை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் ஒரு பெண் கைதாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த வரலட்சுமி கடந்த ஜூலை மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார்.
அப்போதுதான் அவரது பையில் வைத்திருந்த தாலி செயின் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் பல இடங்களில் தேடியும் அந்த யின் கிடைக்கவில்லை. உடனே கோயம்பேடு காவல் நிலையத்தில் வரலட்சுமி புகார் அளித்தார். அந்த புகாரில், உறவினர் திருமணத்துக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வருவதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, என் பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்து வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தார். அதனால் அந்த பெண்தான் நகையை திருடி இருப்பார் என சந்தேகமாக உள்ளது. என்னுடைய செயினை கண்டுபிடித்து தரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இந்த புகாரின்பேரில், அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து 300-க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை ஆராய்ந்த போது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வரலட்சுமியை பின்தொடர்ந்து ஒரு பெண் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. உடனே அந்த பெண்ணின் அடையாளத்தை வைத்து, அவரை காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண் சிகிச்சைக்காக வந்திருப்பது தெரியவந்தது. உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல்துறை, அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது, திருப்பத்தூர் மாவட்டம், நரியப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி பாரதி என்பதை கேட்டு ஆடிப்போனார்கள்.
ஊராட்சி தலைவி என்பதால், இவர்தான் நகை திருடினாரா? என்று காவல்துறைக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்ட அவரிடம் விசாரிப்பதிலும் தயக்கம் காட்டினார்கள். இதனால் மறுபடியும் மறுபடியும் CCTV காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.. இறுதியில், நகையை திருடியது, சாட்சாத் ஊராட்சி மன்ற தலைவி பாரதியேதான் என்பது உறுதியானது. அதற்கு பிறகே பாரதியிடம் விசாரணையை மேற்கொண்ட இவர் மீது ஏற்கனவே வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய காவல் நிலையங்களில் பண மோசடி உட்பட்ட 10 திருட்டு வழக்குகள் இருப்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமல்ல, திருட்டு சம்பந்தமாக ஜெயிலுக்கும் சென்று ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.
மேலும் காவல்துறை விசாரணையில், ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாலும் திருடுவது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். 15 வருடங்களாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். நகையை திருடியதும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விடுவேன். இதன் மூலம் கிடைத்த பணம் மற்றும் நகைகளை விற்று எனது சொந்த ஊரான நரியம்பட்டு பகுதியில் வணிக வளாகம் ஒன்றை கட்டியுள்ளேன். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் நின்று நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதற்குப் பிறகும் சில இடங்களில் நகை திருடினேன். ஊராட்சி மன்ற தலைவி நகை திருட்டில் ஈடுபடக் கூடாது என எனது குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சினர்.

ஆனால் நகை திருடும் போது எனக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். பணம், வசதி, பதவி வந்து விட்ட பிறகும் நகை பணத்திற்காக இல்லாமல் மகிழ்ச்சிக்காக திருட்டில் ஈடுபட்டேன். ஒவ்வொரு நாளும் இனிமேல் திருட மாட்டேன் என நான் காலையில் எழுந்திருப்பேன். ஆனால் பணம் நகைகளை பார்த்ததும் எப்படியாவது அவற்றை திருட வேண்டும் என என் மனதும் சொல்லும். அதனால் வேறு வழியின்றி தான் திருடினேன்” என பாரதி கூறியதை கேட்டு காவல்துறையினருக்கு இப்படியும் ஒரு பெண்ணா என திகைத்து நின்றனர்.
இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் இன்னொரு பெண் பிரபலம் நகை திருட்டில் ஈடுபட்டு அசிங்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பழவிளை பகுதியை சேர்ந்த விஜயகுமார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். அதேபோல, விளவங்கோடு அடுத்த செருவலூர் பகுதியை சேர்ந்த அர்ஷிதா டிப்னி என்ற பெண், திண்டிவனத்தில் உள்ள சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். மேல்புறம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலியூர்சாலை ஊராட்சி தமிழக வெற்றிக்கழகத்தின் இணை செயலாளர் பொறுப்பிலும் பதவி வகித்து வருகிறார்.
அர்ஷிதா டிப்னி வழக்கறிஞர் பயிற்சிக்காக நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வரும்போது விஜயகுமாருக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. பிறகு 2 பேரும் நட்பாக பழகிவந்தனர். கடந்த 12.7.2025 அன்று, விஜயகுமாருக்கு வீட்டிற்கு அர்ஷிதா சென்று இருக்கிறார். விஜயகுமார், வீட்டுக்கு வெளியே தன்னுடைய நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தபோது, அவர் வீட்டிலிருந்த பாத்ரூமுக்கு அர்ஷிதா டிப்னி சென்றுள்ளார். 10 நிமிடம் கழித்து அர்ஷிதா டிப்னி அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.
விஜயகுமாரின் தாயாரின் 12 சவரன் தங்க நகைகள் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் காவல்துறையினர் அர்ஷிதா டிப்னியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகைகளை திருடியதை அர்ஷிதா டிப்னி ஒப்புக் கொண்டார். இப்போது இவரும் கைதாகி சிறையில் உள்ளார். திருடராய் பார்த்து திருந்தா விட்டால்… திருட்டை ஓழிக்க முடியாது…திருடாதே பாப்பா திருடாதே என்ற MGR-ன் பாடல் வரிகளை போல படித்த இளம் வயது பெண்கள், அதுவும் கட்சிகளில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், இப்படி பொதுவெளியில் அசிங்கப்பட்டு கைதாகி வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.