கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரம் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் உத்தரவின்படி இன்று செண்பகராமன் புதூர், வெள்ளமடம் பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரநாராயணன், சக்தி முருகன், பிரவீன் ரகு, ரவி, ஜெஃப்ரி மோள் ஆகியோர் அடங்கிய குழுவினால் திடீர் புகையிலை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வெள்ளமடம் பகுதியில் கடையின் உரிமையாளர் விறகு கட்டைகளுக்கு அடியில் தடை செய்யப்பட்ட கணேஷ் மற்றும் கூல் லிப் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப் பட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செண்பகராமன் புதூரில் அதிகாரிகள் ஆய்வுக்காக ஒரு கடையில் நுழையும் போது அந்த கடையின் உரிமையாளர் திடீரென கடையின் பின்புறம் ஓடினார். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே இதன் அடிப்படையில், FSO குழு கடையின் பின்புறம் சென்று பார்த்த போது, கடையின் சுற்று சுவருக்கு வெளியே ஒரு பிளாஸ்டிக் குடத்தில் கணேஷ் மற்றும் கூல் லிப் புகையிலை பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரண்டு கடைகளும் உடனடியாக மூடப்பட்டது. இதில் வெள்ளமடம் பகுதியில் உள்ள கடை உரிமையாளர் மூன்றாவது முறையாக குற்றம் புரிந்துள்ளதால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், செண்பகராமன் புதூர் கடை உரிமையாளருக்கு ரூபாய் 25000 அபராதமும் உணவு பாதுகாப்பு துறையினரால் விதிக்கப்பட்டது.