ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஏர்போர்ட் மூர்த்தியை இரவோடு இரவாக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
அண்மையில் கூட ஏர்போர்ட் மூர்த்தி சிதம்பரத்தில் தான் நிற்க தயாராக இருப்பதாகவும், திருமாவளவனை ஒருமையில் கடுமையான வார்த்தைகளில் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விசிக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வந்தனர். இதனால், சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறையின் தலைமை இயக்குனர் அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி சென்று கொண்டிருந்த போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரை செருப்பால் தாக்கினார்கள். இந்தத் தாக்குதலின்போது, ஏர்போர்ட் மூர்த்தி பதில் தாக்குதல் நடத்தினார்.

அப்போது கத்தியால் விசிக நிர்வாகி ஒருவரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை தடுக்க முயன்றும் பலன் இல்லை. இதனிடையே கத்தியால் தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில், விசிகவினர் அளித்த புகாரின் பேரில் மெரினா காவல்துறை ஏர்போர்ட் மூர்த்தியை ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து இரவோடு இரவாக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.